நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை – படித்து பகிர்விர் !
1971ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் இந்தியாவுக்குப் பெரிய சோதனையாக வங்கதேசக் குழப்பம் அமைந்தது. அதனால் இந்திரா காந்தி தன் முழு கவனத்தையும் செலுத்தி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. ஒரு கோடிக்கும் மேற்பட்ட அகதிகளைச் சமாளிக்கவேண்டிய பொறுப்பும், ஒரு லட்சம் பாகிஸ்தானிய போர்க் கைதிகளைத் திருப்பி அனுப்பும் வரை பராமரிக்கும் பொறுப்பும் ஏற்பட்டது. இந்தியா மேற்கொண்ட போர் நடவடிக்கைகளால் ரானுவச் செலவு அதிகரித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் கரைந்தது. நாட்டின் பல பகுதிகளில் விலைவாசி உயர்வும் அதிருப்தியும் வளர்ந்தது. பல நகரங்களில் உணவுக்காகக் கலகம் தொடங்கியது. மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கினார்கள்.
1973ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் விலையைக் கடுமையாக உயர்த்தியதால், இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஒருசில மாதங்களில் இருபது சதவிகிதத்துக்கும் மேலாகச் சகல உணவுப் பொருட்களின் விலையும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறியது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சிகள் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றன. எல்லா வலதுசாரி கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் இறங்கின. விலைவாசி ஏற்றத்தால் தொழில் அமைதி கெட்டது. பல தொழிற்சாலைகளில் நீண்ட நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. 1974ஆம் ஆண்டில் மிகப் பெரிய ரயில்வே வேலை நிறுத்தம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி ஸ்தாபன ரீதியாகப் பலமிழந்து கிடந்ததால், மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க முடியவில்லை. வங்கதேசப் பிரச்சினையில் பெற்ற வெற்றியைக்கொண்டு அரசாங்கத்தின் பெருமையைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
ஏழை எளிய மக்கள் ஆதரவளித்தபோதும், மத்தியதர வர்க்கம் படிப்படியாகக் கட்சியைவிட்டு விலகத் தொடங்கியது. வகுப்புவாத மற்றும் சாதீய கருத்துக்களின் அடிப்படையில் வளர்ந்த மாநிலக் கட்சிகளும் பல மாநிலங்களில் வளரத் தொடங்கின.
இந்த நிலையில்தான், 1974ஆம் ஆண்டு ஜனவரியில் குஜராத் மாநிலத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து நடைபெற்ற இயக்கம் தீவிரமாக வளர்ந்து நாடெங்கும் பரவும்நிலை ஏற்பட்டது. கோரிக்கைகள் புதிய உருவம் பெறத் தொடங்கின. மாநில சட்டசபையைக் கலைக்கக் கோரி மக்கள் கோஷம் போட்டனர். கிளர்ச்சியின் கடுமை காரணமாக மாநில அரசாங்கம் பதவி விலகியது. சட்டசபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தக் கோரி உண்ணாவிரதம் தொடங்கியது. வன்முறை வளரும் அபாயம் இருந்ததால், சட்டமன்றம் கலைக்கப்பட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது.
தவறான முன்னுதாரணமாக அமைந்த குஜராத் சம்பவம் கொடுத்த நம்பிக்கை காரணமாக பீகார் மாநிலத்திலும் கிளர்ச்சி தொடங்கியது. மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட பீகார் இயக்கம் தொடக்கத்தில் அமைதியாக இருந்தாலும், படிப்படியாக வன்முறையில் ஈடுபட்டது. பல்வேறு அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அதில் கலக்கத் தொடங்கினர். சோஷலிஸ்ட்களும் வகுப்புவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டன. சில முஸ்லிம் தீவிரவாதிகளும் அவர்களுடன் சேர்ந்தனர். மாணவர்களும் இளைஞர்களும் பல்வேறு கோரிக்கைகளுடன் களம் இறங்கியதால், தெளிவான பார்வை இல்லாமல் பல நல்ல உள்ளம் படைத்தவர்களும் இந்த இயக்கத்தை அனுதாபத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள்.
அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டதாக அறிவித்துவிட்டு, பூதான இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் பீகார் இயக்கத்துக்குத் தலைமை தாங்கத் தொடங்கியதும், நிலைமை மேலும் சீர்கெட்டது. நாட்டில் வளர்ந்துவிட்ட குழப்பான நிலைக்கு எதிராக முழுப்புரட்சி தொடங்க ஜெயப்பிரகாஷ் அறைகூவல் விட்டார். அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாகவும், பொதுவாக
நாட்டில் நிலவிய அதிருப்தி நிறைந்த சூழல் காரணமாகவும் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது. அரசு இயந்திரத்தை முடக்கிப்போடும் வகையில் இயக்கம் செயல்படத் தொடங்கியது. ஜெயப்பிரகாஷ் நாராயண் இராணுவத்தையும் அரசாங்க ஊழியர்களையும் காவல்துறையினரையும் அரசாங்கத்தோடு ஒத்துழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கும் நிலைமையைச் சமாளிக்க பிரதமர் கூறிய மாற்றுத் திட்டங்களையும் இயக்கத் தலைவர்கள் நிராகரித்தனர். இந்திரா காந்தியை பதவியிலிருந்து இறக்குவதுதான் ஒரே நோக்கம் என்பதை வெளிப்படையாகவே தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். 1976ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை பொறுத்திருக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் தயாராக இல்லை.
1975ஆம் ஆண்டு ஜூன் மாதம், அலகாபாத் உயர்நீதி மன்றம், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி வெற்றிபெற்றது செல்லாது என்ற ஒரு தீர்ப்பைக் கொடுத்தது. இதனை மேல்முறையீடு செய்ய முயன்ற இந்திரா காந்தி, பதவி விலக நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார். இதை மறுத்த பிரதமர், நிலைமையைச் சமாளிக்க அதிரடியாக நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார்.
அரசியல் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் கலைக்கக் கோரி வன்முறையில் இறங்கிய இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஜனநாயக விதிமுறைகளைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அரசியல் சட்ட விதிமுறையின்படி நெருக்கடிநிலை கொண்டுவரப்பட்டது.
ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட பல அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பல சமூக விரோதிகளும் ஆனந்த மார்க்கத்தினரும் முஸ்லிம் தீவிரவாதிகளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பலரும் கைது செய்யப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணுடைய அரசியல் பின்னணி காரணமாகத் தொடக்கத்தில் பலர் பீகார் இயக்கத்தை ஆர்வத்துடன் கவனித்தபோதும், உண்மையில் அந்த இயக்கத்தில் அவருடைய தலைமையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமில்லை. பல அரசியல் நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்தனர்.
சென்ற 1971ஆம் ஆண்டு தேர்தலில் மோசமாகத் தோல்வியைச் சந்தித்த பல கட்சிகள் ஒருங்கினைந்தன. அவர்களுடைய கட்சிகளின் ஸ்தாபன பலம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை. அவர்களுக்கு மத்தியில் நாடெங்கும் கிளைகள் கொண்டதும், ஸ்தாபன பலத்துடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சேர்ந்தது. வகுப்புவாத நோக்கம் கொண்ட அந்த இயக்கம், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சிறுபான்மையினருக்கும் கேடுசெய்யும் தன்மைகொண்டதாலும், நாட்டைச் சீர்குலைக்கும் பாஸிச கொள்கை கொண்டதாலும் சில தீவிர நடவடிக்கைகள் தேவைப்பட்டன.
ஜெயப்பிரகாஷ் நாராயண் கொள்கைகளான முழுப்புரட்சி, கட்சிகளற்ற ஜனநாயகம் போன்ற கோஷங்கள் தெளிவற்றதாகவும் பலவகையில் குழப்பம் செய்யக்கூடியதாகவும் இருந்தது.
பெரும்பாலான தலைவர்கள் ஒருசில மாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டனர். பல நகரங்களில் கருப்புப் பண வேட்டையும், பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கள்ளச்சந்தைக்கு எதிரான தீவிர நடவடிக்கை தொடர்ந்தது. அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் மக்கள் குறையைக் கவனித்து நிவாரணம் செய்வது கவனித்துக்கொள்வது கடுமையானது. பல அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்தது. பலர் கட்டாய ஓய்வுகொடுத்து அனுப்பப்பட்டனர்.
மத்திய அரசங்கம் இருபது அம்சக் கொள்கையை அறிவித்தது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஏழை மக்களுக்குக் குடியிருப்பு மனை பட்டா வழங்குவது போன்ற பல செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கீழ்த்தட்டு மக்களுடைய நீண்டநாள் பிரச்சினைகள் முதன்முதலாகத் தீவிரமாகக் கவனத்தில்கொண்ட பல நடவடிக்கைகள் தொடர்ந்தன.
நெருக்கடிநிலை தேவையில்லாமல் நீடிக்கப்படுவதாக ஒரு எண்ணம் வளர்ந்தது. முக்கிய சமூக மாற்றங்களுக்கு வகைசெய்யும் நோக்கத்தோடு பல அரசியல் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. அறிவுஜீவிகளும் மத்தியதர வர்க்கமும் இதுபோன்ற அரசியல் மாற்றங்களைக் கண்டு அதிருப்தி அடையத் தொடங்கியது. பல அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். அந்தத் தவறுகள் மேலிடத்துக்குச் சரியான முறையில் தெரிவிக்கப்படவில்லை. ஆகையால், மத்திய அரசாங்கத்தின் மேல்மட்டத்துக்குச் சரியான நிலைப்பாடு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
1976ஆம் ஆண்டு இறுதியில் பிரதமர் இந்திரா நெருக்கடிநிலையை விலக்கிக்கொண்டார்.
1977ஆம் ஆண்டு ஜனவரியில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிட்டார். அதே ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தல் முடிவை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதாகக் கூறி இந்திரா பதவி விலகினார்.
எதிர்க்கட்சிகளால் “சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கப் பட்ட பிரதமர் இந்திரா காந்தி, பொதுத்தேர்தலை அறிவித்து, மக்களைச் சந்தித்து தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டார். சர்வாதிகாரியாக இருப்பவர்கள் தேர்தலில் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. ஆனால், ஜனநாயக உணர்வுமிக்க இந்திரா காந்தி, தேர்தலை அறிவித்து ஜனநாயகத்தை மதித்தார்.
ஜனதா ஆட்சியும் கூட்டணியின் நிலையும்
இந்திரா காந்தியைத் தோற்கடித்து, பதவியிலிருந்து அவரை இறக்க முழுமூச்சோடு ஒத்துழைத்த எல்லாக் கட்சிகளும் “ஜனதா’ என்ற ஒரே கட்சியாக இணைந்தன. அத்தகைய ஒற்றுமை நீண்டநாள் நிலைக்கவில்லை. பிரதம மந்திரியாக யாரைத் தேர்வுசெய்வது என்பதிலேயே கருத்துவேற்றுமை முளைத்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணுடைய தலையீட்டால் ஒரு வழியாக மொரார்ஜி தேசாய் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனதா கட்சி பதவி ஏற்றவுடன், முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான எல்லா மாநில அரசாங்கங்களும் கலைக்கப்பட்டன. 1977ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதியாக சஞ்சீவிரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நெருக்கடி காலத்தில் நிறைவேற்றப்பட்ட சில அரசியல் சட்டத்திருத்தங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், ஜனதா கட்சியின் ஓராண்டு கால ஆட்சிக்குப்பின், கட்சியில் பல பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையைக் கட்டிக்காப்பது இயலாமல் போய்விட்டது. வகுப்புவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜன சங்கம் சார்ந்தவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முனைப்பு காட்டியது. சோஷலிஸ்ட்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் பல தடைகள் ஏற்பட்டன. ஓராண்டு முடிவதற்குள் மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். சோஷலிஸ்ட்களின் உதவியோடு சரண்சிங் பிரதமராகப் பதவியேற்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு பெறுவதற்குமுன் சரண்சிங் தம் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பாராளுமனறத்தைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இடைப்பட்ட காலத்தில், ஜனதா கட்சி அரசாங்கம், இந்திரா காந்தியை பழி தீர்ப்பதில் காட்டிய உறுதியை ஆட்சியை நடத்துவதில் காட்டவில்லை.
இதற்கிடையில் கர்நாடகாவிலிருந்து பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற உப தேர்தலில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார். அவரைப் பதவி ஏற்கவிடாமல் கைதுசெய்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. அதன்பின் அவருடைய ஆட்சிக் காலத்தில் அதிகார அத்துமீறல்கள் நடைபெற்றதாகக் கூறி அதை விசாரிக்க கமிஷன் அமைத்தது.
பொதுவாகப் பெரிய தினசரிப் பத்திரிகைகள் இந்திரா காந்திக்கு விரோதமாக இருந்ததால், மக்களிடம் அவருக்குப் பெருகிவரும் செல்வாக்கு பற்றி அரசாங்கம் உணரவில்லை. இந்திரா காந்திமீது பழிவாங்கும் போக்கை பொதுமக்கள் ஏற்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய செல்வாக்கு திரும்பவும் வளர்ந்தது. மக்கள் எதிர்பார்த்த நிலையான அரசாங்கத்தைக் கொடுக்கமுடியாத ஜனதா ஆட்சி கவிழ்ந்ததைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை. அதற்கு மாறாக, இந்திரா காந்தியைத் திரும்பவும் வரவேற்று ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராயினர்.