அதிகாரம் என்பது ஒரு தனி நபர், பிரதமர் அல்லது ஒரு குழுவின் கீழ் மையப்படுத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அரசியல் சாசனம் அளித்த அதிகாரம், தற்போது குறைந்து கொண்டு வருகிறது.
1668 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிகழ்த்தப்பட்ட கத்தியின்றி ரத்தமில்லா புரட்சியால், இந்த மண்ணில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை நிகழ்ந்தது. மன்னர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு இடையிலான முடிவைப் புரட்சி வெளிப்படுத்தியது. முழுமையான முடியாட்சியின் வீழ்ச்சி, நாடாளுமன்ற இறையாண்மையாக எழுச்சி பெற்றது.
கடந்த 1625 ஆம் ஆண்டு அரியணையில் ஏறிய முதலாம் மன்னர் சார்லஸ், தெய்வீக நம்பிக்கையுடையவராக இருந்தார். இதனால், தனது செயல்களுக்குக் கடவுளுக்கு மட்டுமே பொறுப்பு என்றும், வேறு யாருக்கும் பொறுப்பில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 1628 ஆம் ஆண்டு, தனிப்பட்ட பாதுகாப்புகளைக் கட்டமைக்க உரிமைச் சட்டத்தை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தமது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்ட மன்னர், இறுதியில், நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
இந்த விவகாரம், மன்னருக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. 1649 ஆம் ஆண்டு மன்னரின் தலை துண்டிக்கப்பட்டது. முதலாம் சார்லர் மன்னருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து ஜவஹர்லால் நேரு தனது ‘க்ளிப்ஸஸ் ஆஃப் வேல்டு ஹிஸ்டரி’ என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
”எப்போதும் மிகவும் பழமைவாதத்துடனும், விரைவான மாற்றங்களை வெறுத்து வந்த இங்கிலாந்து மக்கள், ஒரு கொடுங்கோலன் மற்றும் துரோக மன்னனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதோடு, உள்நாட்டுப் போர் முடியவில்லை. இரண்டாம் மன்னர் ஜேம்ஸுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே மீண்டும் மோதல் தொடர்ந்தது. இரண்டாம் மன்னர் ஜேம்ஸை, மன்னர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவரது மகள் மேரி மற்றும் டச்சு கணவர் வில்லியம் ஆகியோர் பதவியில் அமர்த்தியது நாடாளுமன்றம். இதைத்தான் புகழ்பெற்ற புரட்சி என்றும் கூறுகிறார்கள். இங்கிலாந்தில் முடியாட்சி முடிவுக்கு வந்து, நாடாளுமன்ற இறையாண்மை ஆரம்பமானது. கத்தியின்றி ரத்தமின்றி மலர்ந்த நாடாளுமன்ற ஜனநாயகமாக இது பார்க்கப்பட்டது.
மன்னர் வில்லியம்ஸின் ஆதரவுடன் 1689 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் சட்டத்தை நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்மூலம், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி நிதி கையாளுதல் மற்றும் ராணுவத்தைப் பராமரிப்பதற்கு மன்னருக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் மன்னரின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் சுதந்திரமாக நடைபெறவும், நாடாளுமன்றத்தின் பேச்சுச் சுதந்திரம் மற்றும் விவாதங்களில் வெளியே இருந்தோ அல்லது நீதிமன்றங்கள் மூலமோ தலையிடுவதற்கு இந்த சட்டம் தடை விதித்தது. நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஆதரிப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின், மேரி மற்றும் அவரது கணவர் வில்லியமுக்கு முடி சூட்டப்பட்டது.
புகழ்பெற்ற புரட்சி என்பது தெய்வீகக் கோட்பாட்டைச் சட்டவிரோதமாக்கியது. ஜான் லோக்கின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டை ஆதரித்ததோடு, அரசியலமைப்பையும் உருவாக்கியது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் புகழ்பெற்ற புரட்சியின் மூலம் ஒரே இடத்தில் அதிகாரம் குவிவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமைச்சரவை என்பது கருவாகும். அந்த அமைச்சரவையில் முதன்மையானவர் பிரதமர்.
அதிகாரத்தை ஒரே கையில், சிலரது கையில், குழு அல்லது பரம்பரை கையில் குவிப்பது கொடுங்கோன்மை என்று தாராளமாகச் சொல்லலாம் என்கிறார் அமெரிக்க அரசியலமைப்பின் தந்தையான ஜேம்ஸ் மேடிசன். அதிகாரத்தைப் பரவலாக்குவதில் நாடாளுமன்றம் முக்கியப் பங்காற்றுகிறது. கொடுங்கோன்மை மற்றும் எதேச்சதிகாரத்தைத் தடுப்பதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இங்கிலாந்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சியை, மாட்சிமைக்கு விசுவாசமான எதிர்ப்பாளர் என்று அழைக்கிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நிழல் அமைச்சரவை முக்கிய பங்காற்றுகிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தைகள், அரசியல் சாசனத்தை உருவாக்கியபோது, புகழ்பெற்ற புரட்சியையும், அமெரிக்க அரசியல் சாசனத்தையும் கருத்தில் கொண்டனர்.
தற்போது இந்தியா புகழ்பெற்ற புரட்சிக்கு எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் கையில், பிரதமர் கையில், அல்லது ஒரு குழுவின் கையில் அதிகாரம் குவிந்துள்ளது. அரசியலில் இரட்டைத் தன்மை உருவாக்கப்படுகிறது. அரசியல் சாசனப்படி நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. முடிவு எடுக்கப்படுவது அமைச்சரவையிலிருந்து மற்ற சில அரசியல் சாசன நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அசுரப் பெரும்பான்மை காரணமாக, நாடாளுமன்ற அதிகாரம் பிரதமரின் அதிகாரமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சர்வாதிகாரப் பிரதமர், வலுவற்ற அமைச்சரவை மற்றும் பலமற்ற எதிர்க்கட்சிகள் என்ற ஆபத்தான கலவை, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மக்களவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது. இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட இடமாக நாடாளுமன்ற ஜனநாயகம் பார்க்கப்படுகிறது. மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் அரசியலமைப்புக் கொள்கைகள், இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கொள்கைகளைத் தகர்க்கும் வகையிலேயே, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, தலாக் தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், ஆளுபவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் போக்கு தொடர்ந்தது. இத்தகைய சட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவில்லை. ராஜ்யசபையில், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.
கடைசியாக நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. 3 விவசாயச் சட்டங்களை வலுக்கட்டாயமாக அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றக் குழுக்கள் நீண்ட காலமாகச் செயலற்ற நிலையில் உள்ளன.
குடிமக்களின் தனியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட ஆரோக்கிய சேது செயலி, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது. அதோடு, குளிர்காலக் கூட்டத்தொடர் தவிர்க்கப்பட்டதும், சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு விழுந்த அடியாகும்.
இன்றைய இந்தியாவில் இங்கிலாந்தின் முதலாம் மன்னர் சார்லஸ் மற்றும் இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் ஆகியோர், இந்தியாவில் மறு அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் மற்றும் முதலாம் மன்னர் சார்லஸ் மற்றும் பேராயர் வில்லியம் சான்கிராஃப்டை பதவி நீக்கம் செய்ய ஆலிவர் க்ரோம்வெல் இருந்தார். அவருக்கு மக்களும் ஆதரவு கொடுத்தார்கள். இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் மற்றும் பேராயர் வில்லியமை லேண்டன் டவருக்கு சிறைக் கைதியாக அனுப்பியபோது, அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற காலில் விழுந்து வீரர்கள் மண்டியிட்டனர்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற புரட்சியின் இந்நாளில், இந்தியாவில் ஓர் ஆலிவர் க்ரோம்வெல்கூட இல்லையே என்பதுதான் வருத்தமான செய்தி.
வரலாறு அறியும் வாய்ப்புக்கு நன்றி..