இந்திய செய்தி ஊடகங்களின் பெரும் பகுதி பாசிச சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது ட்விட்டர் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தொலைக்காட்சிகள், வாட்ஸ் அப் ஃபார்வர்டுகள் மற்றும் தவறான வெறுப்பு செய்திகளால் நிரப்பி புனையப்பட்ட கதை இங்கு பரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய பொய்கள் நிறைந்த கதை இந்தியாவை துண்டிக்கிறது. மேலும் இந்திய மக்களின் நலனுக்கு எதிராகவும் இருக்கிறது.
மேலும் சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சுய தொழில் செய்வோருக்கு வாழ்க்கை இழப்பும் நேரிட்டு வருகிறது.
இதனை சில மாதங்களுக்கு முன்பு நான் சுட்டிக்காட்டிய போது, சில ஊடகங்கள் கேலி செய்தன. நான் கூறியதின் உண்மைத் தன்மை தற்போது அவர்களுக்கு புரிந்திருக்கும்.
அதேசமயம், பெரு நிறுவனங்களும் கடும் மன உளைச்சலில் உள்ளன. வங்கிகளின் நிலைமையும் சொல்வதற்கு இல்லை. வங்கிகள் அனைத்தும் துன்பத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன.
தான் வலுவானவர் என்ற போலியான பிம்பத்தை உருவாக்கி ஆட்சி அதிகாரத்துக்கு வர மோடி துடிக்கிறார். இதுவே அவரது பெரும் பலமாக இருந்தது. அதேசமயம், இது இந்தியாவின் பலவீனமாக மாறியிருக்கிறது.