முதல் முறையாக பெரும் பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பரவலையடுத்து, ஆசியாவின் 3 ஆவது பெரிய பொருளாதாரத்தையுடைய இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வரக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்ளூர் உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 7.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அப்போது, பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான இந்தியாவின் முதல் காலாண்டில் 24 சதவீதம் அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சியடைந்தது.
கொரோனா பொது முடக்கத்தின் காரணமாகப் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போயின. இது குறித்து மத்திய புள்ளிவிவரத்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலில், பொது முடக்க நிபந்தனைகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்ட பிறகும், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
”உற்பத்தி மூலம் வளர்ச்சிக்குத் திரும்பினாலும், சேவைத்துறைகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. நெருக்கடியைச் சமாளிக்க போதிய நிதி இல்லாததால், அரசின் நுகர்வு ஒரு பகுதியாகக் கடுமையாகச் சரிந்துள்ளது” என்கிறார் இந்தியாவின் மூத்த பொருளாதார வல்லுநர் ஷிலான் ஷா.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது,” கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது இந்தியாவுக்கு நல்ல செய்தி. எந்த நாட்டுக்கும் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்ப முடியும். உள்ளூரிலும் இந்த தடுப்பு மருந்தைத் தயாரிக்க முடியும். கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தடுப்பு மருந்து ஊக்கமளிப்பதாக இருக்கும். எனினும், சமூக இடைவெளி தொடர்வது பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையே ஏற்படுத்தும்” என்றார்.
இது குறித்து ஆக்ஸ்போர்டு பொருளாதாரத்தின் இந்தியாவுக்கான தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரியங்கா கிஷோர் கூறும்போது, ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால், விநியோகச் சவால்கள் ஏற்படும். கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு மற்றும் ஒப்புதல் தொடர்பான விஷயத்தில் தெளிவு வேண்டும். எதிர்வரும் காலத்தில் பொருளாதாரம் கடந்து செல்ல வேண்டிய பாதை கடினமாக இருக்கிறது. அரசிடம் நிதி இல்லாதது, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்” என்றார்.
கொரோனாவுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கும் போது, சமீபத்திய காலாண்டில் சீனா வெகு விரைவாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடுமையான பொது முடக்கம் மற்றும் மக்கள் கண்காணிப்புக் கொள்கைகளைச் சீனா அமல்படுத்தியது. மேலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை சீனா ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.