‘ஏப்ரல் 16…இரவு 8 மணி…’
லக்னோவைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸவா என்பவரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து போனது. தனக்கு ஆக்ஸிஜன் வேண்டும் என்று ட்விட்டரில் கெஞ்சுகிறார். லக்னோவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். ஒரு மருத்துவமனை கூட அவரது மரண ஓலத்துக்கு செவிசாய்க்கவில்லை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழே சென்றாலே, அது மோசமான நிலை என்று மருத்துவர்கள் கூறும் நிலையில், தனக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 53 ஆக இருந்ததாகக் கூறுகிறார்.
65 வயதான பத்திரிக்கையாளரான ஸ்ரீவத்ஸவா, ட்விட்டரில் பதிவிட்ட இந்த தகவல் வைரலானது. உத்தரப் பிரதேச முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் மறுநாள் பிற்பகல் ஸ்ரீவத்ஸவாவை தொடர்பு கொண்டு, அது குறித்த விவரத்தைக் கேட்டுள்ளார். அப்போது, ஸ்ரீவத்ஸாவின் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு 31 ஆகக் குறைந்திருந்தது.
அன்றைய தினம் பிற்பகல் 4.20 மணி அளவில், ‘தன் தந்தை இறந்துவிட்டதாக..’ ஸ்ரீவத்ஸவாவின் மகன் ஹர்ஷித் ஸ்ரீவத்ஸவா ட்வீட் செய்திருந்தார். ”ஆம்புலன்ஸ் உட்பட தாங்கள் கேட்ட எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக பல இடங்களில் தொடர்பு கொண்டும், யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீவத்ஸவாவின் வீட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் தான் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காகக் காத்திருக்கிறது. இந்த மருத்துவமனை உட்பட நாட்டில் மொத்தம் 150 அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பயன்பாட்டுக்கான குழாய் வழியே செலுத்தும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு டெண்டர் விட்டது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பே ஆக்ஸிஜன் ஆலைகளில் உற்பத்தியைத் தொடங்கியிருக்க முடியும்.
ஆனால், டெண்டர் விட்டு 6 மாதங்களாகியும் இதுவரை ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படவில்லை. இந்நேரம் ஆக்ஸிஜன் ஆலை தொடங்கப்பட்டிருந்தால், ஸ்ரீவத்ஸவா போன்றோரை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். லக்னோவில் உள்ள 30 லட்சம் மக்கள் தொகையில், இப்போதும் 44 ஆயிரத்து 485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
”என் தந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும்..”என்று ஹர்ஷித் ஸ்ரீவத்ஸவா தற்போது கதறிக் கொண்டிருக்கிறார். தன் தந்தை இறந்தபிறகும், அவரது கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை மருத்துவமனை இன்னும் வழங்கவில்லை. இந்த கொடுமையான சம்பவத்துக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுகளே பொறுப்பு. மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாததையே அவர்களது அலட்சியப் போக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.
பிரதமர் மோடி பிறந்த குஜராத்தில் உள்ள நவசாரி மாவட்ட மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழாய் வழியே செலுத்தும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை தொடங்கப்படாததால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் ஆக்ஸிஜன் வேண்டி இந்த மருத்துவமனையில் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் அலட்சியப்போக்கால் அங்கும் பலரது உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவினாஷ் துபே கூறும்போது, ” 175 படுக்கைகள் கொண்ட மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் கூட இருப்பில் இல்லை. இந்த மருத்துவமனையில் 175 படுக்கைகள் உள்ளன. கடந்த வாரம் மட்டும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால், 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 மாதங்களுக்கு முன்பே ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்கியிருந்தால், சூரத் நகரில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நவசாரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்க முடியும். தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து என்னை அழைக்கிறார்கள். எந்த நோயாளியையும் இங்கு அனுப்பாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
8 மாதங்களுக்கு முன்பு விடப்பட்ட ரூ. 200 கோடி டெண்டர் :
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி கொரோனா வைரசை இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு 10 நாட்கள் கழித்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாட்டின் சுகாதார திறனை மேம்படுத்த கால அவகாசம் தேவை என்பதே மத்திய அரசின் வாதமாக இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பே, இதனை எதிர்த்துப் போராட ஆக்ஸிஜன் சிலிண்டர் அவசியம் என்பது தெளிவாகத் தெரியும். புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்க டெண்டர் வெளியிட்டு 8 மாதங்களாகியும், நரேந்திர மோடி அரசு இதுவரை சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.
கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இதற்கான டெண்டரை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் தன்னாட்சி அமைப்பான மத்திய மருத்துவ சேவைகள் சொஸைட்டி வெளியிட்டது. நாட்டில் உள்ள 150 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்கும் வகையில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த ஆலைகளிலிருந்த குழாய் மூலம் நேரடியாக மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு நேரடியாக ஆக்ஸிஜனை செலுத்த முடியும்.
இந்த ஆலைகளை நிறுவும் வகையில் டெண்டர் நடவடிக்கைகளை செயல்படுத்த போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. திட்டமிடப்பட்டுள்ள மொத்தம் 162 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்க (12 ஆலைகள் பின்னர் தொடங்க திட்டம்) ரூ.201.58 கோடி தான் செலவாகும். இதற்கான நிதி பிஎம் கேர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்ட அடுத்த 4 நாட்களில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி குவிந்ததை இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
இப்போது மோசமான இரண்டாவது கொரோனா அலை நாடு முழுவதும் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மோடி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து மேலும் 100 ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்படும். இதுதவிர, ஏற்கெனவே கடந்த 2020 ஆம் ஆண்டில் டெண்டர் வழங்கப்பட்ட 162 ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்குவதற்கான நடவடிக்கை உன்னிப்பாகக் கவனிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
162 ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆலைகளின் நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ” திட்டமிடப்பட்டுள்ள 162 ஆக்ஸிஜன் ஆலைகளில், 33 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2021 ஏப்ரல் இறுதிக்கும் 59 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படும். 2021 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் மேலும் 80 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை தற்போது 172 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதிக்கு இந்தியா முழுவதும் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் தொழிற்சாலை தேவைக்கான ஆக்ஸிஜனை, மருத்துவ தேவைக்குப் பயன்படுத்தியுள்ளனர். அதன்பிறகும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டு அதிக அளவில் உள்ளது. இந்த சூழலில் தான் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜனை இறக்குமதி செய்யப்போவதாக மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளில், மாதம் ஒன்றுக்கு 4,500 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவது கொரோனா அலையில் ஏற்படும் அதிகமான பாதிப்புக்கு, இந்த உற்பத்தி போதுமானதாகவோ, உயிரைக் காப்பதாகவோ இருக்காது.
உத்தம் ஏர் ப்ரோடக்ட்ஸ், ஏரோக்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் அப்ஸ்டெம் டெக்னாலாஜீஸ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கால தாமதத்துக்காக டெண்டர் எடுத்த இந்த நிறுவனங்கள் மீது மருத்துவமனைகள் புகார் தெரிவித்து வருகின்றன. ஆக்ஸிஜன் ஆலை அமைக்க இடம் ஒதுக்கியும், டெண்டர் எடுத்த நிறுவனம் இன்றுவரை இயந்திரங்களைக் கொண்டு வந்து நிறுவவில்லை என்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் பகிரங்கமாக புகார்கள் தெரிவித்துள்ளன. ”டெண்டர் எடுத்த நிறுவனங்களை நாங்கள் தொடர்புகொண்டாலும் அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை” என்கிறார் குஜராத்தின் நவசாரி மகாத்மா காந்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவ்னிஸ் துபே.
டெண்டர் எடுத்த நிறுவனங்களோ, காப்பர் குழாய்கள் மற்றும் மின்சாரத்தை மாநில அரசுகள் வழங்கினால் மட்டுமே ஆலைகளை அமைக்க முடியும். மற்றபடி எங்கள் கையில் ஏதுமில்லை என்று டெண்டர் எடுத்த நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன.
ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்க டெண்டர் விட்ட பின், 8 மாதங்களாக ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு என்ன காரணம் என்பதை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. டெண்டர் எடுத்த 3 நிறுவனங்களுடன் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களும் அவர்களுக்குச் சரியான பதிலைச் சொல்லாமல், அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றன.
இந்த நாட்டில் என்ன தான் நடக்கிறது? இரண்டாவது கொரோனா அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகமாகும் என்று கடந்த ஆண்டே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையை எல்லாம் பொருட்படுத்தாமல், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவதை மட்டுமே முக்கியமாகக் கருதிய பிரதமர் மோடியை என்ன சொல்வது? கும்பமேளாவை அனுமதித்து ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று பரவக் காரணமாக ஒரு பிரதமரே இருந்த வரலாறு வேறு எந்த நாட்டிலாவது நடந்திருக்கிறதா?
பிஎம் கேர்ஸ் நிதியை தொடங்கி பல கோடிகளை வசூலித்தவர்களால், ரூ.200 கோடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்குவதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? ஒதுக்கியதாகச் சொல்லப்பட்ட இந்த நிதி என்ன ஆனது?
கொரோனா உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் தெருக்களில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பிறந்த குழந்தை முதல் இறந்த உடல் வரை, மோடி ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. ஆக்ஸிஜன் தேவையை அதிகரித்து, தங்களுக்கு வேண்டப்பட்ட தொழில் அதிபர்களை ஆக்ஸிஜன் தயாரிப்பில் இறக்க மோடி அரசு திட்டமிடுகிறதோ? என்ற சந்தேகம், அவர்களின் மோசமான செயல்கள் மூலமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.