இந்து ராஷ்ட்டிரா என்ற புத்தகத்தை கட்டுரையாளர் ஆகார் படேல் எழுதும்போதே கலகம் ஏற்பட்டுவிட்டது. அது என்ன? எப்படி இந்து ராஷ்ட்டிராவைப் பெற்றோம்? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்துத்துவா அரசியல், வெறுப்பு மற்றும் வன்முறை குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார். கட்டமைப்பு ரீதியாக நாம் ஏற்கெனவே நாம் இந்து ராஷ்ட்டிராவை அடைந்துவிட்டதால், அரசியல் சாசனத்தில் அது தொடர்பான மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
பாபர் மசூதி விவகாரத்தில் முஸ்லீம்கள் திருப்தியடைந்துவிட்டதாகக் கூறுவதைக் கட்டுக்கதை என்கிறார் ஆகார் படேல். பாபர் மசூதி தீர்ப்பு என்பது முஸ்லீம்களிடமிருந்து பாபர் மசூதியைப் பறிப்பதற்கு நடந்த சூழ்ச்சி மற்றும் வெளிப்படையான திருட்டு என்று விமர்சிக்கிறார். சமூக செயற்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மீதான தேசத்துரோக வழக்குகள் குறித்து இவர் கூறும்போது, ” , சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்கும் உரிமையை விட, சுதந்திரத்தைத் தடை செய்வதற்கே இந்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது” என்கிறார்.
நரேந்திர மோடி அரசைத் தொடர்ந்த விமர்சித்து வரும் ஆகார் படேல், சமூக வலைத்தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்து ராஷ்ட்டிரா புத்தகம் ஃப்ரண்ட் லைனுக்கு ஆகார் படேல் அளித்த நேர்காணல் :
கேள்வி: புத்தகத்தின் தலைப்பே, இந்து ராஷ்டிரம் அடைந்துவிட்டதைப் போல் குறிக்கிறதே?
பதில் : கட்டமைப்பு ரீதியாக நமக்குத் தேவையான இந்த ராஷ்ட்டிரத்தை நாம் அடைந்துவிட்டோம். சட்டத்துக்கும் கொள்கைக்கும் அப்பாற்பட்டு, இந்து ராஷ்ட்டிரத்தை நாம் அடைந்துவிட்டோம். அதனால், அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கிறிஸ்தவர்களுக்கான மத சுதந்திர அடிப்படை உரிமையும், முஸ்லீம்கள் இறைச்சித் தொழில் உரிமையும் 2014 வரையே இருந்தது. அதன்பிறகு இரண்டும் முடிவுக்கு வந்துவிட்டன. இன்றைக்கு இந்திய சிறுபான்மை மக்களை சட்டங்களைப் போட்டுக் மிருகத்தனமாக பல வகையில் தாக்குவது நடந்து வருகிறது.
அரசியல் சாசனம் உறுதியளித்தபடி, தனிப்பட்ட நபரின் எஞ்சியிருக்கும் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் ஆகியவை, அரசிடமிருந்து மக்களிடமே திருப்பியளிக்க வேண்டும். சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்கும் உரிமையைவிட, சுதந்திரத்தைத் தடை செய்வதற்கே இந்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
கேள்வி : முஸ்லீம்களைக் குறிவைத்தே இந்துத்வா அரசியல் இருக்கிறது. ஒரு மோசமான இந்து ராஷ்ட்டிரமாக தேசம் மாறினால், அது இந்துத்வா வாக்காளர்களுக்கு பெரும் சவாலாக இருக்காதா?
பதில் : இந்துத்வா வாக்காளர்கள் எதையும் பற்றிக் கவலைப்படுபவர்களாகவோ அல்லது குறைவாக கவலைப்படுபவர்களாகவோ இருக்கமாட்டார்கள். 2021 மார்ச் மாதம் வரை, ஜிடிபி எனும் உள்நாட்டு ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இதனை அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தையும், வரலாறு காணாத குறைந்த அளவிலான தொழிலாளர் பங்கெடுப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பன்முகத்தன்மையை அழிக்க முயற்சிப்பது கலாச்சாரத்தை அழிப்பதற்கு சமம். பாகிஸ்தானின் தெய்வ நிந்தனை சட்டத்திலும், இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கப்பட்டதும் இதற்கு உதாரணம். இத்தகைய நடவடிக்கை சகிப்பின்மையை காட்டுவதோடு, கிரிமினல் நடவடிக்கையையும் ஊக்குவிப்பதாக இருக்கிறது. நாட்டின் முக்கிய அமைப்புகளை எதிரிகளை துன்புறுத்துவதற்காக இந்திய அரசு பயன்படுத்துகிறது. இத்தகைய போக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே, இயற்கையான பன்முகத்தன்மையும் சகிப்புத்தன்மையும் நாம் மீண்டும் பெற முடியும்.
குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பாஜக வலியுறுத்துவதற்குக் காரணம் உள்ளது. சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, அதன்மூலம் வாக்குகளை எளிதாகப் பெறுவது அவர்களது நோக்கம்.
கேள்வி : கொரோனா காலத்தில் ஜெகன்னாத் ரத யாத்திரையையும், ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்ததைப் பார்த்தோம். நம் நாட்டின் அடிப்படை தார்மீகத்தைத் தவிர்த்து, பெரும்பான்மையினர் என்பதற்காக இத்தகைய செயல்பாடுகள் அமைந்துள்ளனவா?
பதில் : சிறுபான்மை மதங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல என்று அர்த்தமாகிறது. மதச்சார்பின்மையைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா இன்றைக்குப் பெரும்பான்மைவாதத்தைப் பேசி அண்டை நாடுகளின் பார்வையில் மதம் சார்ந்த நாடாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தியா. குடியுரிமையில் கூட பாகுபாடுகளை உருவாக்கி நாம் சட்டங்களை இயற்றியுள்ளோம். மதச்சார்பின்மை காணாமல் போய்விட்டது. பாகிஸ்தானில் உள்ள 4 மாநிலங்களிலும் இந்து முதலமைச்சர் இல்லை. இந்தியாவின் 29 மாநிலங்களில் முஸ்லீம் முதலமைச்சர் இல்லை. 15 மாநிலங்களில் முஸ்லீம் அமைச்சர் இல்லை. மீதமுள்ள 10 மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லீம் அமைச்சரே இருக்கிறார். அவருக்கு வழக்கம்போல் சிறுபான்மை விவகாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மை விவகாரத்துறைக்கும், வக்பு வாரியத்துக்கும் இந்து அமைச்சரே நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் 303 மக்களவை உறுப்பினர்களில் ஒரு முஸ்லீம்கூட இல்லை. பாகிஸ்தானிலோ அல்லது இந்தியாவிலேயோ சிறுபான்மையினரின் அரசியல் பங்கெடுப்பு, சட்டங்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. சிறுபான்மையினத்தவரிடம் மிருகத்தனமாக நடந்து கொள்வதோடு, முஸ்லீம்கள் திருப்பதி அடைந்திருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. சிறுபான்மையினத்தவருக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளையும் பாதுகாப்பையும் தவிர்க்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேள்வி : முஸ்லீம்கள் கோரிக்கை விடாமலேயே அவர்கள் திருப்தியடையும் வகையில் தாங்கள் செயல்படுவதாக எல்.கே. அத்வானி வாழ்நாள் முழுவதும் கூறிவருகிறார். சாதாரண மக்கள் மத்தியில் இத்தகைய பிரச்சாரம் ஏன், எப்படிச் செய்யப்படுகிறது?
பதில் : பாபர் மசூதி பிரச்சாரம் மற்றும் வன்முறை காரணமாக பாஜக வெற்றியடைந்தது. முஸ்லீம்கள் திருப்தியடைந்துவிட்டதாக அவர் பேசிய பேச்சுகள் எடுபடவில்லை. 1990 வரை ஜனசங்கமோ/ பாஜக எந்த மாநிலத்திலும் பெரும்பான்மையாக இல்லை. மசூதியை இடித்த பிறகு நடந்த ரத்தக்களறியில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இதுவே தேர்தல் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அதன்பிறகும் முஸ்லீம்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்வாறு கூறிக் கொண்டே குற்றச்சாட்டையும் முன்வைத்து, பாஜக அரசியல் லாபம் அடைந்ததையே காட்டுகிறது. முஸ்லீம்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என்பது முட்டாள்தனமானது.
கேள்வி : உருது மொழிக்கு மத அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை நாம் சிறு வயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம். உருது மொழி தண்டிக்கப்படுகிறதா?
பதில் : அரபி எழுத்துகள் இருப்பதால், உருது மொழியை இந்திய மொழி என்று பெரும்பாலான இந்தியர்கள் பார்ப்பதில்லை. அதை வெளிநாட்டு மொழியாகப் பார்க்கிறார்கள். எனினும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
கேள்வி : முஸ்லீம்களைக் கலந்து பேசாமல், முத்தலாக் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது குறித்து?
பதில் : முத்தலாக் முறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தபிறகு, அதனை கிரிமினல் குற்றமாக்கி தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே நேரத்தில் முஸ்லீம் ஆண் தலாக் கூறுவதில்லை. பல அமர்வுகளுக்குப் பிறகே முத்தலாக் முறை செயல்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொன்னால் அது குற்றம் தான். இந்திய தண்டனைச் சட்டம் 148 ஆவது பிரிவை, முஸ்லீம்களுக்கு எதிரான பயங்கர ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்.
கேள்வி : மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதைத் தீர்ப்பில் பிரதிபலிக்கவில்லையே ஏன்?
பதில் : பாபர் மசூதி தீர்ப்பைப் பார்த்து எதிர்கால சந்ததியினர் வெட்கப்படுவார்கள். இந்திய முஸ்லீம்களை ஏமாற்றி அவர்களது மசூதி இந்த தீர்ப்பின் மூலம் திருடப்பட்டுள்ளது.
மசூதிக்குள் கடத்தல் சிலைகளைக் கொண்டு போய் வைத்த அதிகாரி தான் பின்னர் ஜனசங்கத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரானார். அதன்பிறகு இந்துக்களின் பூஜைகள் தொடங்கப்பட்டு முஸ்லீம்களின் தொழுகை நிறுத்தப்பட்டது. முஸ்லீம்களுக்கு மசூதி தேவையில்லை, அவர்கள் எங்கு வேண்டுமானால் தொழுகை நடத்த முடியும் என்று பாரபட்சமான தீர்ப்பை நீதிமன்றம் அளித்தது. மசூதி கட்டப்பட்டது முதல் தொழுகை நடத்தியதற்கான ஆதாரத்தை முஸ்லீம்களிடம் கேட்டுக் கொண்டே, இந்துக்களை அதே இடத்தில் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. மசூதியைக் காழ்ப்புணர்ச்சியுடன் ஒப்படைத்ததின் மூலம், இந்த தேசத்தில் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பசு அரசியல் :
கேள்வி : பசு அரசியல் இன்று வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. பேராசிரியர் டி.என்.ஜா போன்றவர்கள் பழங்கால இந்தியாவில் பசுவை இறைச்சிக்காகப் பலியிடுவதில்லை என்று கூறியிருக்கிறாரே?
பதில் : பசு வதைத் தடைச் சட்டம் என்பது வன்முறையைத் தூண்டும் சட்டமாகும். 2015 ஆம் ஆண்டு வரை இதுபோன்ற வன்முறைகள் நிகழ்ந்ததில்லை. பசுக்களை இறைச்சிக்காக கொல்லுவது குஜராத்தில் ஆயுள் தண்டனை குற்றமாக இருக்கிறது. இத்தகைய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே. கடந்த 2019 ஆம் ஆண்டு, மகள் திருமணத்தில் மாட்டுக் கறி விருந்து போட்டதாகக் கூறி ஒருவர் தண்டிக்கப்பட்டார். அவரால் கடைசி வரை மாட்டுக்கறி இல்லை என்பதை நிரூபிக்க முடியவில்லை. யூனாவில் நடந்த வன்முறைக்குப் பிறகு, குஜராத் நகரில் மாடுகளை அவிழ்த்துவிட்டார்கள் தலித்துகள். இதனால் பசு பாதுகாவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல், லவ் ஜிகாத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து மக்களைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது அரசு.
கேள்வி : இந்தியக் குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனத்தின்படி அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்ற நிலைக்குப் பாதிப்பு வருமா?
பதில் : குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டவிரோதமானது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கு எதிரானது. நீதித்துறை நரேந்திர மோடியைத் தடுக்காமல் கடந்து சென்றாலும், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் ஆவணச் சட்டங்களை உலகே தடுத்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தூதுவரின் கடும் எதிர்ப்பு காரணமாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வராமல் இருக்கிறார்கள். இந்த சட்டம் அடிப்படையில் பாரபட்சமானது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடத்தப்பட வேண்டிய வாக்கெடுப்பு நிலுவையில் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவையே. எனினும் இந்தியா தன்னை திருத்திக் கொள்ளாது என்பதே என்னுடைய அசைக்க முடியாத கருத்து.