விவசாயம் அழிந்தால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும் என்று கூறி, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் ஐதராபாத்தைச் சேர்ந்த 30 வயது பொறியாளர்.
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தின் ஹிமாயத் நகரைச் சேர்ந்தவர் மனோஜ். எந்த விளம்பரமும் இல்லை, பதாகை இல்லை. அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கிறார். விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை என்றாலும், விவசாயிகளின் தரப்பு நியாயம் அவரைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்துள்ளது.
போராட்டக் களத்திலிருந்த மனோஜுடன், மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ காலில் பேசினார். 3 நாட்களாகப் பட்டினியாக இருக்கிறாய். உன் உடல்நிலையைப் பாதிக்கும். புறப்பட்டு வா என்று அழைத்தார். அவரது வேண்டுகோளை நிராகரித்த மனோஜ், தொடர்ந்து 15 நாட்கள் போராட்டத்தில் கலந்து கொள்வேன். தண்ணீர் மட்டும் அருந்துவேன். உணவு சாப்பிட மாட்டேன் என்றார்.
இது குறித்து மனோஜ் கூறும்போது, ”என் குடும்பத்தில் யாரும் விவசாயிகள் இல்லை. இருந்தாலும், மண்டியில் காய்கறிகளை வாங்கி என் தந்தை ஏற்றுமதி செய்கிறார். அந்தவகையில் பார்த்தால், விவசாயிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு உண்டு.
3 விவசாயச் சட்டங்களும் விவசாயிகளை நேரடியாகப் பாதிக்கின்றன. சில காலமாகவே அனைவரையும் பாதிக்கும் வகையிலேயே சட்டங்கள் உள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள், விவசாயத்தை நிறுத்திவிட்டால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிடும். அது நம்மைப் போன்ற மக்களைத்தான் பாதிக்கும். இது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல, இந்திய மக்களின் போராட்டம்.
மோடி அரசு பதவிக்கு வரும்போது, 1 அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.48 ஆக இருந்தது. இன்று 1 அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களே விவசாயிகளின் பொருளாதார பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டன.
மக்களுக்காகப் பணியாற்றுவதற்காகக் கடந்த நவம்பர் மாதம் பணியை ராஜினாமா செய்துவிட்டேன். பணியை ராஜினாமா செய்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். அதனால் தான் இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள முடிந்தது.
ஐதராபாத்தில் என் வீட்டைச் சுற்றி இருப்பவர்கள் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. அதேபோன்று, ஊடகங்களும் விவசாயிகளின் போராட்ட செய்திக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றார்.
2011 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த மனோஜ், 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எம்பிஏ படிப்பை முடித்தார். மோடி அரசின் மக்கள் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களும், கொள்கைகளும் 30 வயது இளைஞரை தெருவில் போராட வைத்துள்ளது.
‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல்’, இன்று மனோஜ் வந்திருக்கிறார். நாளை லட்சக்கணக்கான ‘மனோஜ்கள்’ இந்த மக்கள் விரோத அரசை எதிர்த்துப் போராட களமிறங்குவார்கள் என்பது உறுதி.