மோடி ஆட்சியில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது 5 ஆவது தேசிய குடும்பல நல சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டின் நிலவும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பொறுத்தே நாட்டின் உண்மையான வளர்ச்சியும் அமையும். ஆனால், தங்கள் ஆட்சியில் நாடு வளர்ச்சி பெற்றுள்ளதாக மோடி மார்தட்டி வருகிறார். இது பொய் என்று நிரூபிக்கும் வகையில், இந்த சர்வே அமைந்துள்ளது.
உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் உள்ளது. பொது முடக்கம் காரணமாக ஐந்தாவது தேசிய குடும்ப நல சர்வே எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமே தரவுகள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் முழுமையான தரவுகள் கிடைக்காவிட்டாலும், யுனிசெஃப் வெளியிட்டுள்ள தரவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையின் போது உலகம் முழுவதும் 6 ஆயிரம் குழந்தைகள் இறக்கக்கூடும் என்றும், இதில் 1,600 இந்திய குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசின் பரீட்சார்த்த கொள்கை முடிவுகளால் ஏற்பட்டுள்ள குடும்பங்களின் வருவாய் இழப்பால், நிலைமை இன்னும் மோசமாகும். 5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கொரோனா பாதிப்புக்குப் பிறகு அதிகரித்திருப்பதாக ஐந்தாவது தேசிய குடும்ப நல சர்வேயின் முதல் கட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பணக்கார மாநிலங்களான கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும், கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்டுள்ள வேலை இழப்புக்கும் தொடர்பு உண்டு. 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, 5 வயகுட்பட்ட குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச் சத்துக்குறைபாட்டுடன் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை சிக்கிமில் 22.3 சதவிகிதமும்,மேகாலயாவில் 46.5 சதவிகிதமும், குஜராத், கர்நாடகா, அசாம், மகாராஷ்டிரா மற்றும் தாத்ரா நாஹர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் சர்வே முடிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழந்தைகளின் எடைக் குறைவுக்கு போதிய உணவு இல்லாததே காரணம். அந்தவகையில், எடை குறைவாக உள்ள குழந்தைகளில் 41 சதவிகிதத்தை எட்டி பீகார் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 39.7 சதவிகிதத்தை எட்டி, குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு அரசின் மோசமான கொள்கைகளே காரணம். குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாடுகளைப் போக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. போதிய நிதி இல்லாததால், ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்பாடு 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 5 வயதுக்குக் குறைவான 8 லட்சத்து 83 ஆயிரம் குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தை இறப்பு எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்து மோசமான சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.