இந்திய விவசாய பொருளாதாரத்தை பெருவாரியான தனியார் துறையினருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, ‘மண்டி, மார்க்கெட், மோடி…’ என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்பே, விவசாய உற்பத்திப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்கெனவே அதானி குழுமம் செய்துவிட்டது. விவசாயப் பொருட்களை தனியார் கொள்முதல் செய்வது தான் விவசாயப் பொருளாதாரத்தின் அர்த்தமா? என்பது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய உணவுக்கழகம் நேரடியாக கொள்முதல் செய்வது போல், தனியார் நிறுவனங்களும் நேரடி கொள்முதல் செய்ய முடியும் என்பது,சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. விவசாயத் துறையில் நுழையும் தனியார் நிறுவனங்கள், நாடு முழுவதும் முதலீடு செய்வார்கள் என்று என்பது மத்திய அரசின் வாதம். இந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே தனியாரை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
அதானியும், அம்பானியும் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வெளிப்படையாக அச்சப்படுவதற்கு இதுவே காரணம். விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது, 3 விவசாயச் சட்டங்களுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அதானி மற்றும் அம்பானி குழுமங்கள் தெரிவித்தன. விவசாயிகளிடமிருந்து தாங்கள் உணவு தானியங்களை வாங்கப் போவதில்லை என்றும், உணவு தானியங்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.
புதிய விவசாயச் சட்டங்களால் அதானி மற்றும் அம்பானி குழுமங்களுக்குத்தான் பலன் ஏற்படும், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்ற வாதத்துக்கு அவர்களிடம் பதில் இல்லை. புதிய விவசாயச் சட்டம் அமல்படுத்தப்படும்போது, தானாக அதானி குழுமத்துக்கு பலன் கிடைக்கும் என்பது தான் உண்மை. இந்திய உணவுக்கழகம் கையாள முடியாத சூழலில், உணவு தானியங்களை அதானி குழுமம் தற்போது கையாண்டு வருகிறது. இந்திய உணவுக்கழகம் மூலம் டெண்டர் விடப்பட்டு, நாடு முழுவதும் தனியார் சேமிப்புக் கிடங்கு தொடங்கவும், சரக்குகளை கொண்டு செல்ல தனியார் ரயில் போக்குவரத்துக்கும் வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கும், சேமிக்கவும் அதானி குழுமத்துக்கு ஏற்கெனவே கட்டமைப்புகள் உள்ளன. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, அதானி குழுமம் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக் குறிப்பில், ”அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட்டின் ஒரு பகுதியான ‘அதானி அக்ரி லாஜிஸ்டிக் லிமிட்டெட்’, பிரதமரின் ஏழைகளுக்கான அன்னதான திட்டத்தின் கீழ், 30 ஆயிரம் டன் உணவு தானியங்களை எங்களுக்குச் சொந்தமான 7 சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைத்தோம். வட இந்தியாவில் உள்ள உற்பத்தி மையங்களிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா மற்றும் மேற்கு வங்காளத்துக்கு இந்த உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதானியின் இந்த செய்திக் குறிப்பின்படி, அதானி துறைமுகத்தின் ஒரு பகுதி தான் ‘அக்ரிகல்சர் லாஜிஸ்டிக் கம்பெனி’. சேமிப்புக் கிடங்கிலிருந்து உணவு தானியங்களை எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே இவர்கள் நோக்கம் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. விவசாயப் பொருட்களுக்கான விலையை அக்ரிகல்சர் லாஜிஸ்டிக் கம்பெனி நிர்ணயிப்பதில்லை. அதானி குழுமத்தின் மற்றொரு நிறுவனம் தான் விலை நிர்ணயம் போன்ற விவசாய வணிகத்தில் ஈடுபடுகிறது.
விவசாய வணிகத்தில் ஆசியாவின் நம்பர் 1 ஆக திகழும், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘வில்மார் இன்டெர்னேஷனல் லிமிடெட்’ உடன் இணைந்து கடந்த 1999 ஆம் ஆண்டு ‘அதானி வில்மார்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. தெற்காசியாவில் மழைக்காடுகளை பாமாயில் வணிகத்துக்காக அழித்ததாக இந்த நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பாமாயில் வணிகத்திலிருந்து விவசாய விளைபொருட்கள் தொடர்பான வணிகத்துக்கு ‘அதானி வில்மார்’ மாறியிருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இது குறித்து அதானி வில்மார் நிறுவன துணை தலைமை செயல் அதிகாரி அங்க்ஷு மாலிக் கூறும்போது, ” 7 ஆண்டுகளுக்குள் பெரும் உணவு நிறுவனமாக மாற நாங்கள் விரும்புகிறோம். அதற்காக, இந்தியாவின் முக்கிய 3 தானியங்களான அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை குறிவைத்துள்ளோம். இந்த 3 உணவு தானிய வணிகத்தில் நாங்கள் முதல் இடத்துக்கு வந்தால், உணவுத் துறையில் நாங்கள் தான் ராஜா” என்றார்.
உலகின் அதிக லாபகரமான உணவு தானிய சந்தையான சீனாவுக்கு, அரிசியை ஏற்றுமதி செய்ய இந்த குழுமத்துக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சம்மான் லால் சேத்தியா மற்றும் அதானி வில்மார் உள்ளிட்ட 5 அரிசி ஏற்றுமதியாளர்களை சீனா அனுமதித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சீனாவுக்கு மோடி பயணம் மேற்கொண்டபோது, சீனாவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு, ஆயிரக்கணக்கான டன் அரிசியை மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி அளித்தது. இன்றைக்கு இந்தியாவிலிருந்து 40 லட்சம் டன் அரிசி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளில், சீனாவே தற்போது முதலிடத்தில் உள்ளது. தெற்காசியாவில் உள்ள பாரம்பரிய வினியோகஸ்தர்களையும் குறிவைக்க சீனா தொடங்கிவிட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக அரிசி சந்தையில் ‘அதானி வில்மார்’ நிறுவனம் காலடி வைத்தது. அப்போதிலிருந்து பாசுமதி அரிசியை இந்த நிறுவனம் நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அதிக அளவில் பாசுமதி அரிசி விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து பாசுமதி அரிசியை அதானி வில்மார் நிறுவனம் வாங்கியது. புதிய விவசாயச் சட்டத்தை சோதித்துப் பார்க்கும் வகையில் பாசுமதி கொள்முதலை அதானி வில்மார் நிறுவனம் செய்தது. விவசாய வர்த்தகத்தை தனியார் கைகளில் ஒப்படைப்பதற்கான முயற்சி இங்கிருந்து தான் தொடங்கியது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தண்ணீர் விநியோகமும், விவசாய செலவும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. மற்ற பயிர்களைப் போல், பாசுமதி பயிரிட அதிக தண்ணீர் செலவாகாது. எனினும், சரியான விலை கிடைக்காததால், பாசுமதியை பயிரிட இரு மாநில விவசாயிகளும் விரும்பவில்லை. இது குறித்து பதாங்கோட் மண்டல விவசாயத்துறை அதிகாரி அம்ரிக் சிங் கூறும்போது, ” நெற்பயிரைப் போல் உறுதியான விலை விலை கிடைத்தால், பாசுமதியை பயிரிட பஞ்சாப் விவசாயிகள் தயாராக இருக்கின்றனர்” என்றார்.
அவர்களது கோரிக்கையிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பாசுமதி அரிசியை ரூ.2,700 க்கு விற்றனர். ஆனால், இந்த ஆண்டு ஒரு குவிண்டால் பாசுமதி அரிசியை ரூ. 600 க்கு குறைவாக விற்குமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு காலாண்டுக்கும் 15 லட்சம் டன் பாசுமதி அரிசி ஈரானுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, முற்றிலும் நிறுத்தப்பட்டதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொள்முதல் செய்பவர்கள் காரணம் கூறுகின்றனர். ஆனால், இந்தியாவின் நடுத்தரக் குடும்பத்தினரோ, கடந்த ஆண்டு பாசுமதி அரிசியை என்ன விலை கொடுத்து வாங்கினார்களோ, அதே விலையைத் தான் இப்போதும் கொடுக்கிறார்கள். கொள்முதல் விலை குறைந்தால், அவர்கள் வாங்கும் விலையும் குறைந்திருக்க வேண்டுமே என்ற கேள்விக்கு பதில் இல்லை. கொள்முதல் விலையை குறைப்பதற்கு தனியார் விவசாய நிறுவனங்கள் தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
பஞ்சாப், ஹரியானாவைத் தொடர்ந்து பீகாரிலும் இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது. மண்டி முறை அங்கு ரத்து செய்யப்பட்டதால், பாசுமதியின் வருடாந்திர விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் பாசுமதி அரிசியை பெரிய அளவில் கொள்முதல் செய்யும் பெரும் தனியார் நிறுவனங்கள் தான் பயனடைகிறார்களே தவிர, விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ எந்த பலனும் இல்லை என்பதையே இந்த நேரடி அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 3 விவசாயச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தும் முன்பே இந்த நிலை என்றால், செயல்பாட்டுக்கு வந்த பின் என்ன ஆகும்? என்பதை எளிதாக யூகிக்கலாம்.
”தனியார் நிறுவனங்களை விவசாய வணிகத்தில் ஈடுபடுத்தினால் பாதிக்கப்படுவோம்…” என்ற விவசாயிகள் அச்சத்தில் நூறு சதவிகிதம் நியாயம் இருக்கிறது.