வரலாற்று உண்மைகளைத் திரும்பத் திரும்பத் திரித்துக் கூறும்போது, தவறான உள்நோக்கம் கொண்ட தகவல் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. உள்நோக்கம் கொண்டவர்களால் வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படும் தவறான தகவல்களை, உளவியல் ரீதியாக மக்கள் உண்மை என நம்ப ஆரம்பிக்கிறார்கள். இதன் விளைவைத் தான் உளவியல் நிபுணர்கள் சமீபகாலமாக ‘சத்தியத்தின் மாயை’ என்று குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு திரித்து எழுதப்படும் இந்திய வரலாற்றிலிருந்து, உள்நாட்டிலும் உலக அளவிலும் ராஜதந்திரியாகவும், தத்துவவாதியாகவும், கல்விமானாகவும் திகழ்ந்த உயர்ந்த மனிதன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவும் தப்பிக்கவில்லை.
1962 ஆம் ஆண்டு சீன ஊடுருவல், அசாம் மக்களுக்காக நேரு ஆற்றிய சிறப்பு உரை அப்போதே வரலாற்றுச் சிதைவுக்குள்ளாக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு சீன ஊடுருவல், முந்தைய என்இஎஃப்ஏ (வடகிழக்கு எல்லை மாகாணம்)-வின் பொமிடிலாவுக்குள் ஊடுருவியது. அதனால், தேஜ்பூரில் வளர்ந்த பெரும் ஆபத்து குறித்த கருத்து எழும்போதெல்லாம், காயப்படுத்துவது மற்றும் காட்டிக் கொடுப்பது போன்ற கருத்துகள் பரவி வந்ததைக் காணலாம். பண்டித நேருவின் பேச்சைக் கேட்ட அசாம் மக்கள் இதனை உணர்ந்தார்கள். நேருவின் இந்த உரை, கடந்த 1962 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.
சீன ஊடுருவல் குறித்த வரலாற்றுப் புத்தகங்கள், சுயசரிதைகள் மற்றும் செய்தித்தாள் கட்டுரைகள் ஆகியவற்றைக் கூகுள் தேடல்களில் அறிந்து கொண்டால், போட்டி அரசியல்வாதிகளின் பேச்சில் இருக்கும் பொய்யை அம்பலப்படுத்தும். நெட்டிஜன்கள் கூட நேருவின் உரை மீதான தாக்குதல்களை ஏற்கவில்லை. இந்த நேரத்தில் ”இந்த நேரத்தில் அசாம் மக்களுக்காக என் இதயம் வேதனைப்படுகிறது…” என்று நேரு ஆற்றிய அந்த உரையை, சீனர்களின் கருணைப் பார்வைக்காக அசாமை நேரு கைவிட்டுவிட்டதாக திரித்துக் கூறினார்கள்.
நேரு உரையின் வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு, அசாம் மக்களை நேரு கைவிட்டுவிட்டார் என்ற விசயம் அரசியல் எதிரிகளால் இன்று வரை மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது.
ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் சொல்லாடலை, ஆங்கிலம் அறிந்தோர் தவறு என்று சொல்லமாட்டார்கள். ஆனால், நேருவைத் தவறாகக் காட்டவும், அவருக்குக் கண்ணிய குறைவு ஏற்படுத்தவும் இந்த உரையைக் குறும்புத்தனமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
நேருவின் இந்த உரையை ஆய்வு செய்யும்போது, கடுமையான அக்கறை மற்றும் எந்தவொரு சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வலுவாகப் போரிடுவோம் என்பதையே வெளிப்படுத்துகிறது.
ஆரம்பத்தில் இந்தியத் தரப்பில் பின்னடைவுகள் இருந்தபோதிலும், வெற்றி பெறுவோம் என நேரு உறுதியளித்தார். சீன ஊடுருவலை ஏற்கவோ அல்லது சகித்துக் கொள்ளவோ அவர் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. அந்த உரையில் நேரு இவ்வாறு கூறுகிறார்:
” எந்த ஓர் அந்நிய நாட்டின் ஊடுருவலையும் இந்தியா சகித்துக் கொள்ளாது. சுதந்திரம் கிடைத்தபிறகு நடக்கும் இந்த போரின் மூலம், சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் இந்தியா எதையும் இழக்காது. இந்தியத் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்த செய்திகள் நமக்கு இன்றைக்கு வருத்தமளிக்கிறது. அசாம் மற்றும் வடகிழக்கு எல்லை மாகாண (என்இஎஃப்ஏ) மக்களுக்கும், இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் விசேஷமாக என் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். நாம் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை அவர்களுக்குக் கூறிக் கொள்கிறேன். நமக்கு வருத்தம் இருக்கலாம். எனினும், இதனை தலைகீழாக மாற்ற நம்மை நாமே பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும். மேலும், இந்தியாவிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ளோம். ஊடுருவல்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை அல்லது வெளியே தள்ளப்படும் வரை நாங்கள் திருப்தியடைய மாட்டோம். அவர்கள் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்கமாட்டோம். அப்படி ஏற்றால், சில பின்னடைவுகளால் நாம் சிறிது அச்சம் அடைந்துவிட்டோம் என்று அவர்கள் நினைக்கலாம். இதை உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். மேலும், குறிப்பாக, ‘இந்த நேரத்தில் அசாம் மக்களுக்காக என் இதயம் வேதனைப்படுகிறது’…”
இந்த வார்த்தைகளிலிருந்து நேரு என்ன சொன்னார் என்பது தெளிவாகிறது. படையெடுப்பாளரை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருந்த ஒரு தலைவரின் வார்த்தைகள் இவை. திடீர் சவாலை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய மக்களுக்குப் பரிவு காட்ட விரும்பியே அவ்வாறு கூறினார். நேரு ஓர் இளம் ஜனநாயக நாட்டின் பிரதமராக இருந்தவர். தன்னம்பிக்கை என்ற இலக்கை அடைய நாடு நீண்ட பயணத்தை அவரது தலைமையில் நாடு மேற்கொண்டது. அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அவர் விரும்பியதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சீனாவை ஒரு நட்பு நாடாகவே நேரு பார்த்தார். தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சீனா கூறிக் கொண்டதை நம்ப மறுக்க அவருக்கு எந்த காரணமும் இல்லாமல் இருந்தது.
எனவே, இந்த திடீர் ஊடுருவல் மூலம் துரோகம் மற்றும் கோபத்தை அவர் உணர்ந்தார். ஊடுருவிய அண்டை நாட்டின் மீது மென்மையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. அவரது உரையில் மேலும் கூறுகிறார்:
”நமது நாட்டின் எல்லைகளில், ஏகாதிபத்தியத்தின் மிகவும் ஆக்ரோஷமான முகத்தைக் காண்கிறோம். தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடாக சீனா சொல்லிக் கொள்கிறது. இந்த சம்பவத்தைப் பார்க்கும் போது, அந்த நாடு மோசமான ஏகாதிபத்திய நாடாக மாறியிருப்பதையும், அதன் உக்கிரத்தையும், நட்பு நாட்டை ஆக்கிரமித்துவிட்டு, தாங்கள் தாக்கப்படுவதாகக் கூறி நியாயப்படுத்துவதையும் இப்போது பார்க்கிறோம். இது போன்ற உண்மையைக் கடந்து வந்திருக்கிறேன் என்பதையும், சர்வதேச நடத்தைக்கான எந்தவித கண்ணியமும் அவர்களிடம் இல்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நமக்காக மட்டும் போராடக் கூடாது. இதேபோன்று, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எங்கும் கண்ணியம் மிக்க நாடுகள் மற்றும் ஒழுக்கமான மக்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும்.
இந்த முக்கியமான சூழலில், சர்வதேச ஆதரவைக் கோருவதில் நேரு தயங்கவில்லை. இந்தியாவின் பக்கம் நின்ற நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்தார்:
”விரைந்து உதவி செய்த நமது நட்பு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு நாங்கள் நன்றியுணர்வுடன் இருப்போம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். மேலும் நமக்குத் தேவைப்படும் உதவிகளை அவர்களிடம் கேட்போம். நமக்கு இது வாழ்வா? சாவா? என்ற பிரச்சினை என்பதால், அவர்கள் தரும் அனைத்து உதவிகளையும் நாம் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வோம்.
வாழ்வையும் மரணத்தையும் நீங்கள் விளையாட்டாக நினைக்க விரும்பினால், நாம் ஆடுவற்கு இது ஒன்றும் விளையாட்டு கிடையாது. தேசத்தின் வாழ்க்கை மற்றும் இறப்பு, தேசத்தின் லட்சோப லட்ச மக்களின் வாழ்வு மற்றும் இறப்பு ஆகும். வெற்றி நம்முடையதாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் என்ன நடந்தாலும் நாங்கள் முன்னேறுகிறோம். இந்த நம்பிக்கையில் நீங்களும் இணைய வேண்டும். எந்த நேரத்திலும் மனச் சோர்வடையக் கூடாது.
சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவின் நேர்மைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக மட்டும் அவர் கருதவில்லை. ஆனால், அனைத்து சுதந்திர நாடுகள் மீதான தாக்குதல் எனக் கருதினார். இந்த கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேசத்தை அணி திரட்டுவதற்காக அசாம், லடாக் அல்லது இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களிடம், என்ன நடக்கிறது என்பதை அடிக்கடி தெரிந்துகொள்வேன். இது ஆசியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே ஓர் அச்சுறுத்தலாகும். அதனை நாம் அனைவரும் இணைந்து எதிர்கொள்வோம். ஜெய் ஹிந்த்…!”
நேருவின் இந்த உரையில், எங்காவது சீனாவிடம் சரணடைந்ததையோ அல்லது அசாமை கைவிட்டதையோ நாம் பார்க்க முடிந்ததா? நேருவின் உரைக்குப் பிறகு அவரது மகள் இந்திரா காந்தி தேஜ்பூருக்கு சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
தேஜ்பூர் நகரத்தை இந்திரா காந்தி அடைந்ததும், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மக்களுக்கு மளிகைப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். காத்தரீன் ஃப்ராங்கின் சுயசரிதை நூலில், தேஜ்பூரிலிருந்து வெளியேற மலைவாழ் மக்கள் மறுத்துவிட்டனர். அதனால், அந்த மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அடுத்த 8 மணி நேரத்தில் இந்திரா காந்தி டெல்லி திரும்பினார். வானொலியில் சிறிய உரையாற்றிவிட்டு, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நிரப்பப்பட்ட விமானத்துடன் மீண்டும் அசாமுக்கு திரும்பினார். அசாமில் இந்திரா காலடி எடுத்து வைத்ததும், எதிர்பாராதவிதமாக போர் நிறுத்தத்தை அறிவித்து படைகளை சீனா திரும்பப் பெற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மையைத் திரித்துக் கூறுவதையும், தவறான தகவல்களைத் திரும்பத் திரும்பக் கூறி பிரச்சாரமாகச் செய்வதும், நாஜி ஜெர்மனி அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்திய பொய்களைப் போன்றதே. ஒரு பெரிய பொய்யை சொல்லிவிட்டு, அதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்று கோயபல்ஸ் கூறியதை இங்குள்ளவர்களும் பின்பற்றுகிறார்கள்.
(கட்டுரையாளர் : போப்பீட்டா சர்மா. அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகவும் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.)