நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதி இது. பொருளாதார அதிசயம் நடத்துவேன் என்று அளித்த வாக்குறுதி ஏதும் நடக்கவில்லை. நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு கொரோனா மீது மோடி அரசு குற்றம் சாட்டலாம். எனினும், கொரோனா வந்திருக்காவிட்டாலும் மோடியின் பொருளாதாரக் கொள்கை எப்படி இருந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.
வாக்குறுதி அளித்தபடி, வேலை வாய்ப்பை பாஜக ஏற்படுத்தவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கடந்த 4 தசாப்தங்களில் பணவீக்கம் சரிசெய்யப்பட்ட நிகழ்வு தற்போது நடந்துள்ளதாகத் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் (என்எஸ்எஸ்ஓ) கசிந்த சர்வே அறிக்கை கூறுகிறது. அப்போது, உச்சத்துக்குச் சென்ற ஒரே விஷயம், இந்தியாவின் 100 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடியாக உயர்ந்தது தான். இந்த பணத்திலிருந்து இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு 1 சதவிகிதம் கொடுத்திருந்தாலே, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் கிடைத்திருக்கும்.
பட்ஜெட் கண்களால் அளவிடப்படுவது அல்ல. அதன் விளைவுகளால் அளவிடவேண்டும். இது நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுமா?,நுகர்வு வளர்ச்சியில் புத்துயிர் பெற வழிவகுக்குமா? முக்கியமாக, கொடும் நோய்த் தொற்றிலிருந்து மக்களை மீட்க உதவுமா?, மக்களுக்கு உண்மையான வளர்ச்சியை அளிக்குமா?
இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. அடுத்த 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு நாடு தயாராகிவிட்டது. இந்தநிலையில், சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியைப் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என்பது சந்தேகமே. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே நாட்டின் மிகப்பெரிய முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் என்ன பிரச்சினை என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளும் முன்பு, கொரோவால் மோசமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதைப் புரிந்து கொள்வதும், அதவை மீட்டெடுக்கும் வாய்ப்புகளை ஆராய்வதும் முக்கியம்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு அநியாயமாக வரி விகிதத்தை வசூலித்தபோதிலும், அரசு வருவாய் ரூ.7 லட்சம் கோடி அளவுக்குப் பற்றாக்குறை எனக் காட்டப்பட்டுள்ளது. வருவாயை ஈட்ட அரசு உத்தேசித்துள்ள ரூ.26.33 லட்சம் கோடியில், பற்றாக்குறை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக உள்ளது. மீதமுள்ள ரூ.2.5 லட்சம் கோடியை ஈடுசெய்ய பெட்ரோலியப் பொருட்கள் மீது வானுயர வரிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பொருளாதாரம் மற்றும் அரசு வருவாய் வரும் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி ஊக்கிகளுக்கு பெரும் சேதம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்கள் கொரோனாவைக் குற்றம் சாட்டலாம். ஆனால், கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. ஒவ்வொருவருக்கும் தெரியும். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8.2 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (பொது முடக்கத்துக்கு முன்பு) 3.1 சதவிகிதமாக இருந்தது. எனவே, பொது முடக்கத்துக்குப் பிறகு தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதற்கான் எந்த அறிகுறியும் இல்லை.
கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தின. சந்தைகள் மீண்டுகொண்டிருந்தபோதும், மக்கள் வலியை உணர்ந்தார்கள்.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு நிதி குறித்த பகுப்பாய்வு சுவாரஸ்யமானது. அதேநேரத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருமானம், செலவுகள் மற்றும் லாபங்கள் மார்ச் சற்றும் ஜூன் காலாண்டுகளில் சரிவைக் குறைத்தன. செப்டம்பர் காலாண்டில் போக்கே மாறியது. செப்டம்பர் காலாண்டில் வருவாய் மற்றும் செலவுகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில், நிறுவனங்களின் நிகர லாபம் 45.3 சதவிகிதம் அதிகரித்தது. டிசம்பர் காலாண்டின் ஆரம்பத்திலிருந்தே செலவுகள் குறைந்தும், லாபம் அதிகரித்தும் காணப்பட்டன. நிறுவனம் பணம் சம்பாதிப்பது தவறில்லை. ஆனால், செலவும், லாபமும் எதிரும் புதிருமாகச் செல்லும் போது, அநேகமாக அதனை ஆழ்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
விற்கப்படாத சரக்குகள் சந்தைக்குள் நுழைவதைக் கண்டுபிடிப்பதால் செலவினம் குறைவதாக ஒரு விளக்கம் கூறுகிறார்கள். அதேசமயம், ஊதிய செலவினங்களை குறைப்பதாலும் செலவு குறைந்ததாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில், 4,234 நிறுவனங்களின் மாதிரி எடுக்கப்பட்டதில், இதில் 2,150 நிறுவனங்கள் அல்லது 50 சதவிகித நிறுவனங்கள் ஊதிய குறைப்பைச் செய்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகம். மற்றொரு 463 நிறுவனங்களில் ஊதிய உயர்வு ஏதும் இல்லை. 339 நிறுவனங்களில் 6.92 சதவிகிதம் என்ற அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2,952 நிறுவனங்கள் அல்லது 70 சதவிகித பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஊதிய உயர்வைக் குறைத்து பணவீக்கத்தை ஈடு செய்துள்ளன என சிஎம்ஐஇ அறிக்கை கூறுகிறது.
சந்தைகள் பழைய நிலைக்குத் திரும்பி, நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தலால் தெருவில் பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டபோதிலும், பொது முடக்கத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 சதவிகித இந்தியர்கள் கடந்த ஆண்டு நான்கில் ஒரு பங்கு வருமானத்தை இழந்தனர்.
இந்தியாவின் தேசிய வருமானத்தில், 10 சதவிகித பணக்காரர்களின் வருமானம் 56 சதவிகிதமாக இருந்தது. அதேநேரத்தில், சீனாவில் பணக்காரர்களின் வருமானம் 41 சதவிகிதமாக இருந்தது.
அதன்பிறகு வந்த ஆக்ஸ்ஃபேம் அறிக்கையில், ‘சமமற்ற வைரஸ்’ சுவாரஸ்யமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”100 கோடீசுவரர்களின் வருமானம் ரூ.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 11 கோடீசுவரர்களுக்குக் கிடைத்த வருவாயிலிருந்து மட்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கும், சுகாதார அமைச்சகம் மூலம் சுகாதார வசதிகளை 10 ஆண்டுகளுக்கும் செய்திருக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் அதிகரிப்பதும், சமமற்ற பொருளாதாரமும் நீண்ட காலமாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், கடந்த ஆறரை ஆண்டு மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்துக்கு மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், மக்கள் நுகரும் தன்மையை அடைய நீண்ட காலம் பிடிக்கும்.
அடுத்த 6 மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்று மத்திய அரசு எண்ணுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் தடம்புரண்ட பொருளாதாரத்தைச் சரிசெய்து மீண்டும் பயணிக்க வைக்க சில ஆண்டுகள் ஆகும் என்பது மறுப்பதற்கில்லை. நம் இளைஞர்களும் யுவதிகளும் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் சோகமான செய்தி. அதற்கு முன்பாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கும்.
வரும் காலங்களில் இந்த பிரச்சினை எவ்வாறு அரசியல் ரீதியாக வடிவம் தரப்படும் என்பது தான் பெரிய கேள்வியாக முன்னே நிற்கிறது. உண்மையில் முக்கியமான பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வு காணுமா அல்லது கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அரசியலை வரையறுத்துள்ள கவனச் சிதறல்களிலேயே காலத்தைக் கழிக்குமா?
பொருளாதார ரீதியில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றும், 2025 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை(இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் கோடி) எட்டும் என்றும் பிரதமர் அறிவித்தார். 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்றால், கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பே கடினமான 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். இன்றைக்கு 11.5 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை எட்டமுடியும். இது நடக்காத காரியம். எனவே, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த வியாக்கியானத்தை ஆளும் பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்,அல்லது விலகியிருக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக நீங்கள் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பது விஷயமில்லை. வேலை வாய்ப்புகள் இல்லாததால், அடுத்த சில ஆண்டுகள் வலியுடன் தான் நகரும். நிறுவனங்கள் லாபம் பெறவேண்டும், பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர வேண்டும். ஆனால் ஊதிய வளர்ச்சியும் உண்மையான நுகர்வும் அப்படியே இருக்க வேண்டும். இத்தகைய சமமற்ற நிலையால், நீண்ட கால நுகருதல் மற்றும் பொருளாதாரம் பாதிக்கும்.
பொருளாதாரத்தின் உண்மை நிலை குறித்து மறுக்க முடியாமல் போகும் ஒரு கட்டத்துக்கு நாம் அனைவரும் செல்கிறோம். நம் அரசியலில் அது மையப் பிரச்சினையாக மாறுவது எப்போது? என்பது தான் விஷயம். அது ஒரு கேள்வி அல்ல, எதிர்பார்ப்பு.