நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் புரிந்துள்ளதாக வெளிப்படுத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவை பார்க்கும் போது, விமர்சனத்தை ஏற்கும் சகிப்புத் தன்மை இல்லாததையே காட்டுகிறது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிரசாந்த் பூஷனுக்கு எதிராக தானாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்று, நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எந்த அவதூறோ அல்லது மோசமான குற்றச்சாட்டுகளோ இன்றி, பிரசாந்த் பூஷன் 2 ட்விட்களை பதிவிட்டதற்காக உச்ச நீதிமன்றம் கடுமையாக நடந்துகொள்வது துரதிர்ஷ்டவசமானதாகும். 108 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற கருத்து வெளிப்பாட்டில், நீதிமன்ற கவுரவத்தை காக்க நீதிமன்றம் தானாக அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற பழைய தீர்ப்புகளில் வெளிப்படுத்தப்பட்ட சூழல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ட்வீட்கள் நீதிமன்ற அவமதிப்புக்குள் வருமா? என்பதை பகுப்பாய்வு செய்ய இந்த வழக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
முதல் ட்வீட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்த புகைப்படம், ஒரு முறைசாரா அமைப்பில் ஓர் அடிப்படைக் கருத்தை முன்வைக்க பயன்படுத்தப்பட்டது. அடிப்படை உரிமை மீறல்களுக்காக குடிமக்களுக்கு நீதி வழங்க மறுக்கிறார் என்று ஒரு விமர்சனத்தையும் அவர் வெளியிட்டார். இது மிகைப்படுத்தப்பட்ட அல்லது தேவையற்ற பார்வையாக இருக்கலாம். இருந்தாலும், இது நீதிமன்றத்தின் கவுரவத்தை குறைக்கிறது என்றும், அதிகாரத்தை குறைக்கிறது அல்லது நீதி நிர்வாகத்தில் தலையிடுகிறது என்றும், சொல்வது வியப்பாகவே உள்ளது.
தலைமை நீதிபதியின் தனிப்பட்ட நடத்தையையோ, அவரது பாரபட்சமான நிர்வாக முடிவு எடுக்கும் நிலையையோ விமர்சித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உட்படுத்தவில்லை. இதுபோன்ற விமர்சனங்களை நீதித்துறையே நிராகரித்திருக்க வேண்டும்.
இரண்டாவது ட்வீட்டில், கடந்த 6 ஆண்டுகளாக தலைமை நீதிபதிகளாக இருந்த 4 பேர் ஜனநாயகத்தை அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஓர் அரசியல் கருத்து என்ற ரீதியில் தெளிவாக உள்ளது. அந்த காலக்கட்டத்தில் நீதித்துறைக்கு தலைமை வகித்த 4 பேர் குறித்த கருத்துதான் இது.
அடுத்தடுத்த தலைமை நீதிபதிகள் ஜனநாயத்தை அழித்துவிட்டனர் என்ற கருத்தின் வெறும் குரல், நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் குறைவாக மதிப்பிட்டுவிடும் என்பதை ஒப்புக்கொள்வது கடினமாக உள்ளது. ஏற்கனவே, சில முன்னாள் நீதிபதிகளின் பின்னணியை பார்த்தால், அவர்களில் சிலரின் நடத்தை குறித்து கடும் விமர்சனக் கருத்தும் சிலரால் வைக்கப்பட்டுள்ளது.
அதன் இயல்பு, நோக்கம் மற்றும் தூய்மை ஆகியவற்றில், பிரசாந்த் பூஷனின் நீதித்துறை பற்றிய சிராய்ப்பு, முன்னாள் தலைமை நீதிபதி மீது அவரது சகாக்களே கூறியது போன்றது தான். நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தியது, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விட பெரிது ஒன்றுமில்லை. பிரசாந்த் பூஷனை தண்டிக்காமல் இருப்பது, நாட்டின் மீது குறைவான மதிப்பீட்டை உருவாக்கிவிடும் என்ற நீதிமன்றத்தின் கூற்றில், சில கவனக்குறைவான முரண்பாடுகள் உள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள் மற்றும் அச்சமற்ற சுதந்திரமான தீர்ப்புகள் மூலம் உச்ச நீதிமன்ற அடித்தளம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இப்போது, அது உலக மதிப்பீட்டின்படி, சரிந்துபோகுமேயானால், அதற்கு நீதித்துறை மழுப்பல், தன்னிச்சை மனப்பான்மை மற்றும் அதிகாரத்தை நிறைவேற்றியதற்கான பிரதிபலிப்பே காரணமாக இருக்கும்.