இந்தியா முழுவதும் எரிபொருள் விலை டிசம்பர் மாதத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டை விட, எரிபொருட்களுக்கான மத்திய கலால் வரி 5 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
கொரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வேலை இழப்பும் அதிகரித்துள்ளது.
பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய கலால் வரியை சிறிய அளவில் ஏற்றியபோது, அதனை அக்கட்சி கடுமையாக எதிர்த்தது. அப்போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்ததால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. எனினும், டீசல் மற்றும் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மானியம் அளிக்கப்பட்டது.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ, மானியத்தைக் குறைப்பதில் அல்லது முழுமையாகத் திரும்பப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. சர்வதேசச் சந்தையில் எரிபொருள்கள் விலை கடந்த 6 ஆண்டுகளாகக் குறைவாக இருந்தபோதிலும், இந்திய நுகர்வோர் அதிக விலை கொடுத்து எரிபொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பரமபத ஆட்டம்
• தற்போது பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.32.98. கடந்த 2014 மே மாதம் கலால் வரி ரூ.9.48 ஆக இருந்தது.
• தற்போது டீசலுக்கான கலால் வரி ரூ. 31.83. கடந்த 2014 மே மாதத்தில் ரூ. 3.56.
• கடந்த 2014 ஆம் ஆண்டைவிட, பெட்ரோலுக்கான கலால் வரி 348 சதவிகிதம் அதிகம்.
• ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சி நடத்தியபோது, டீசலுக்கு ரூ.3.56 கலால் வரி விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது டீசலுக்கு அதைவிட கூடுதலாக 894 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.
• கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட ரூ.9.48 வரி வருவாயிலிருந்து ரூ. 6.35 ஒட்டுமொத்த வரி வருவாய்க்குச் சென்றது.
• 2020 – ல் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட ரூ.32.98 -லிருந்து ரூ.2.98 மட்டுமே ஒட்டுமொத்த வரி வருவாய்க்கு சென்றுள்ளது.
2011-2013 ஆம் ஆண்டுக்கு இடையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலருக்கு மேல் ஏற்ற, இறக்கமாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மத்திய அரசின் நிதி இருப்பு மற்றும் பற்றாக்குறைக்கு எண்ணெய் இறக்குமதிச் செலவு அச்சுறுத்தலாக இருந்தது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவில் அதிகரித்ததால், மானியமும் அதிகரித்து அரசுக்கு நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. எனினும், 25-06-2010 அன்று பெட்ரோல் விலையையும், 19-10-2014 அன்று டீசல் விலையையும் அரசு கட்டுப்படுத்தியது. ஆனால், சில ஆண்டுகளாக எரிபொருள் மட்டுமே மத்திய அரசின் பெரும் வருவாயாக மாறியிருக்கிறது. எரிபொருளுக்கான கலால் வரியைப் பொறுத்தவரை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நேரடியாக வருகிறது. இது மற்ற வரிகளைப் போல் அல்லாமல், விரைவாக வருகிறது. பிபிஏசி எனப்படும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுத் துறையின் தரவுகளின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 107.14 டாலராக (ரூ. 6,655.54) இருந்தது. அதேசமயம், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 41.53 டாலராக(ரூ.3,050) குறைந்தது. (இன்றைய கச்சா எண்ணை விலை விவரம் பிபிஏசியின் இணையத்தில் உள்ளது.)
கடந்த 15-03-2014 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.20 ஆகவும், டீசல் விலை ரூ.55.48 ஆகவும் இருந்தது. ஆனால், இன்றைக்கு வரலாறு காணாத வகையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 90.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 80.51 ஆகவும் உயர்ந்துள்ளது.
டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.71 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.87 ஆகவும் இருந்தது. எனினும், பெட்ரோல் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.27.74 ஆகவும், சில்லரை விற்பனை விலை 33.1 சதவிகிதமாகவும் உள்ளது. இதன்படி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.71 -க்கும் விற்கப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரை, அடிப்படை விலை ரூ.28.66 ஆகவும், சில்லரை விற்பனை 38.8 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு ரூ.73.87-க்கு விற்கப்படுகிறது.
உதாரணமாக, டெல்லியில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ.32.98 கலால் வரியாக வசூலிக்கிறது. இது, அடிப்படை விலையிலிருந்து 119 சதவிகிதம் அதிகமாகும். மேலும், மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி,அடிப்படை விலையைவிட 70 சதவீதம் அதிகமாகும்.
அதேசமயம், டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, அடிப்படை விலையிலிருந்து 111 சதவிகிதம் அதிகமாகும். டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் ரூ.10.85 சதவிகித வரி என்பது, அதன் அடிப்படை விலையிலிருந்து 37.9 சதவிகிதம் அதிகமாகும்.
பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டம் மற்றும் பகுப்பாய்வு துறையின் தரவுகளின்படி, கடந்த 2019-20 ஆம் ஆண்டில் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட கலால் வரியின் மூலம் மத்திய அரசு ரூ. 2.25 லட்சம் கோடி வசூலித்துள்ளது. 2020-21 பட்ஜெட்டில் எரிபொருட்கள் மூலம் ரூ. 2.67 லட்சம் கோடி வசூலிப்பதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் வருவாய் திட்டமிடலான ரூ.16,539 லட்சம் கோடிகளில், இது 16.3 சதவிகிதமாகும்.
கலால் வரியை மட்டும் உயர்த்தியதோடு நிற்காமல், மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒட்டுமொத்த வரி வருவாயையும் மத்திய அரசு மாற்றியமைத்தது. மத்திய அரசுக்குச் செல்லும் செஸ் வரியும் அதிகரித்தது. பல்வேறு திட்டங்களுக்காக மாநில அரசுடன் செஸ் வரியைப் பகிர்ந்து கொள்வதற்கான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு, எரிபொருட்களுக்கான கலால் வரியை 15 முறை ஏற்றியுள்ளது. இந்நிலையில்,பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பெட்ரோலுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி, அடிப்படை விலையிலிருந்து 189 சதவிகிதம் அதிகமாக உள்ளது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.