பாகிஸ்தானைப் போரில் வீழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் வெற்றி விழாவை இந்தியா கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காள தேசம் உருவானது. அந்தப் போரை எதிர்கொண்ட சென்னையைச் சேர்ந்த ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ‘தி பிரேவர் நெவர் டை’ விஜயலட்சுமி எழுதிய (தைரியம் மரணிப்பதில்லை) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பற்றிய இந்த நூல் விவரிக்கிறது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து டாக்காவைக் கைப்பற்றியது வரையிலான நிகழ்வுகளை இந்த புத்தகத்தில் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, ஓராண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான நடந்த நிகழ்ச்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கர்னல் கிருஷ்ணசாமி பங்கேற்று தமது போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
” டாக்காவுக்கு சென்ற 10 ஆவது பட்டாலியனின் 90 பேர் கொண்ட படைக்கு நான் தலைமை வகித்தேன். புதிதாக ஒரு நாடு உருவாக காரணமாக இந்த போர், வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கிய போர், டிசம்பர் 16 ஆம் தேதி முடிவடைந்தது. பாகிஸ்தான் படைகள் நம்மை நோக்கி வரும் முன்பே, நாங்கள் டாக்காவைச் சென்றடைந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். இதனால், பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. நகரத்துக்குள் தெருச் சண்டை போல் நடந்தது. இந்த சூழலை எதிர்கொள்வது சற்று கடினமாக இருந்தது.
போரின் இறுதியில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். டாக்கா ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், ஆயுதங்களைப் போட்டுவிட்டு பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த நிகழ்வில் நானும் பங்கேற்றேன்” என்றார். போர் வெற்றிக்குப் பிறகு. வீர சக்ரா விருது வழங்கி கிருஷ்ணசாமி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போரில் இந்திய விமானப் படையின் சார்பில் பங்கேற்ற எஸ்.ராமலிங்கம் கூறும்போது,” ஸ்ரீநகரிலிருந்து பறந்து சென்று பாகிஸ்தானில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி விமானப் படையில் நானும் இடம்பெற்றிருந்தேன். எதிரி நாட்டின் 3 விமானங்களை நிர்மல் ஜித் சிங் சேக்கான் சுட்டு வீழ்த்தினார். எனினும், இந்த போரின் போது அவரும் வீரமரணம் அடைந்தார். அவர்கள் விமான ஓடுதளத்தையே குறி வைத்ததால், நாங்கள் அந்தப் பகுதிக்கே செல்லவில்லை. போருக்குப் பின், பரம் வீர் சக்கர விருது சேக்கானுக்கு மட்டுமே வழங்கப்பட்டது” என்றார்.