விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் நடந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம், 2020 ஆம் ஆண்டு விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தம் தொடர்பான அவசரச் சட்டம் மற்றும் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம் தொடர்பான அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.
இந்த 3 அவசரச் சட்டங்களையும் எதிர்த்து நேற்று நடந்த இந்த போராட்டத்தால் ஹரியானாவின் பிப்ளி சவுக் பகுதியில் காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டதால், தொடர்ந்து 4 மணி நேரமாக அந்தப் பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது.
விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணிக்கு காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு அளித்திருந்தன. தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், அங்கு காவல்துறையினரால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்துவிட்டு, மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பேரணியில் கலந்து கொள்வதற்காக ஷாபாத் பகுதியில் இருந்து வந்த விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள், அங்கிருந்த தீயணைப்புத் துறை வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், காவல் துறையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, பேரணியில் கலந்து கொள்வதைத் தடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பேரணியில் கலந்து கொள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
காவல் துறையினரின் தடியடி பிரயோகத்துக்கு கண்டனம் தெரிவித்த ஹரியானா பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, ”இது அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான முதல் வெற்றி” என்றார். இத்தகைய அவசரச் சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறையை நீக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். பாரதிய கிஷான் சங்கத்தின் தலைமையில் தான் விவசாயிகள் பேரணி நடைபெற்றது.
விவசாயிகள் நடத்திய பேரணியில், ஹரியானா காவல் துறையினர் தடியடி நடத்தியதற்கு, ஹரியானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமாரி ஷெல்ஜா, முன்னாள் முதலமைச்சர் புபிந்தர் சிங், ஹுடா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சூர்ஜேவாலா மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் குரலை அடக்கும் முயற்சியில் பாஜக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளதாகவும், அரசியல் கட்சிகளும், பல்வேறு விவசாய அமைப்புகளும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.