நம் நாட்டில் சாமானிய மக்கள் தங்களின் துயரங்களை துடைத்தெறிய- அநியாயங்களை அகற்றிட எப்போதும் நம்பிக்கையுடன் அணுகுவது நீதிமன்றங்களைத் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் மத்திய அரசின் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு பதிலாக அவற்றிற்கு துணை போவதாக உள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றம் அரசின் கைப்பாவையாக செயல் படுகிறதோ என்று அச்சம் பலருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றும் இன்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
- பி எம் கேர்ஸ் நிதி : இது பிரதமர் கோவிட்-19 நோயினை எதிர்த்து போராடுவதற்காக புதிதாக உருவாக்கிய நிதி. இதற்கு பலரும் தாராளமாக நன்கொடை வழங்குகின்றனர். ஆனால் இந்த நிதியின் வரவு செலவு கணக்கு பகிரங்கமாக இல்லை என்பது மட்டுமல்ல இதற்கு யார் தணிக்கை செய்வது என்பதும் மூடு மந்திரமாக உள்ளது. இது குறித்து நேற்று அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அரசின் நிலையை அப்படியே ஆமோதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நிதி நிர்வாகத்தில் இருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை – தணிக்கை முறை என்பதைக் கூட அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி கூறாதது மிகவும் கவலை அளிக்கிறது.
- நடிகர் சுசாந்த் தற்கொலை குறித்த விசாரணை : இது குறித்து சம்பவம் நிகழ்ந்த மும்பை காவல்துறை விசாரணை நடத்திவரும் வேளையில் அரசியல் ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன் சம்பந்தமே இல்லாமல் பீகார் மாநிலத்தின் பா.ஜ.க.கூட்டணி அரசு இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்ய முனைகிறது. நடிகர் சுசாந்த் பல வருடங்களாக வசிக்கும் வீடு மும்பையில் தான் உள்ளது. அந்த வீட்டில் தான் அவர் தற்கொலையும் நிகழ்ந்தது. எனவே இது குறித்து மும்பை போலீஸ் விசாரணை செய்வது தான் முறையானது. இதில் பீகார் மாநிலத்தின் காவல்துறை மூக்கை நுழைத்தது தவறு. இந்த அழகில் பீகார் மாநிலத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த தற்கொலை வழக்கை மத்திய சி.பி.ஐ . காவல்துறை விசாரணை செய்யும் என தடாலடியாக அமீத் ஷா அறிவித்தது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. இது குறித்த தீர்ப்பை நேற்று வழங்கிய உச்சநீதிமன்றம் மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரணை சரியே என தீர்ப்பளித்தது. இது ஒரு அப்பட்டமான நெறி பிறழல் என்பதில் சந்தேகமில்லை. நம் நாட்டில் மாநில அரசுகளுக்கு உள்ள சுயாட்சி உரிமையை பறிக்கும் மத்திய அரசின் இந்த தவறை உச்சநீதிமன்றம் ஆதரிப்பது மாபெரும் தவறு. மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே சி.பி.ஐ. சம்பந்தப்பட்ட மாநில குற்றம் குறித்து விசாரணை செய்ய முடியும்.இதனை மீறியுள்ளது இன்றைய தீர்ப்பு.
இது மட்டும் அல்ல. இதுபோன்ற பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை சுட்டிக் காட்ட முடியும்.
- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு குறித்த வழக்கை ஓராண்டாக விசாரணைக்கு ஏற்க மறுக்கிறது உச்சநீதிமன்றம்.
- பாபர் மசூதி இடிப்பு தவறு என்றும் அதனை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற அதே சமயத்தில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு அளித்தது.
- ரஃபேல் போர் விமானங்கள் வாங்க நடந்த பேரத்தில் முறைகேடு எதுவும் இல்லை என பிரதமர் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய உச்சநீதிமன்றம் அந்த பேரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து மெளனம் சாதித்தது .
- சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நள்ளிரவில் மாற்றல் செய்து உத்தரவு பிறப்பித்ததுடன் அவருக்கு மாற்றாக வேறு ஒருவர் விடியற்காலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டதை எல்லாம் உச்ச நீதிமன்றம் கண்டிக்க குரலின்றி மெளனமானது.
- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒருவர் மீது ஒரு பெண் ஊழியர் பாலியல் பலாத்காரப் புகார் செய்ததை விசாரித்து அந்த பெண் கூறிய புகார் ஆதாரமற்றது என உச்சநீதிமன்றமே தீர்மானித்தது. ஆனால் பொய்ப் புகார் கூறிய அந்த பெண் ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி பணிஓய்வு பெற்றதும் அந்த பெண்மணியை மீண்டும் பணியில் அமர்த்திக் கொண்டது உச்ச நீதிமன்றம். இதற்கு அர்த்தம் என்ன ? அந்த பெண் நிரபராதி என்றால் அந்த தலைமை நீதிபதி தவறிழைத்தாரா ?
உச்ச நீதிமன்றம் அதன் மாண்பை காப்பாற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டியது இந்திய நாட்டின் எதிர்காலத்திற்கு மிக மிக தேவை.
(ஆதித்ய கிஷோர்)