விவசாயச் சட்டங்கள் போன்ற கடுமையான சட்டங்கள் மூலம், ஒடுக்கப்பட்ட, பலவீனமான மக்களை உலகெங்கிலும் உள்ள கார்பரேட்கள் சுரண்டுகின்றனர்.
சமீப காலங்களில் விவசாய நில ஒப்பந்தங்கள் அரசியல் ரீதியாகவே உள்ளன. சில சமயங்களில் இத்தகைய இயக்கங்கள் ஆளும் அரசுகளைக் கவிழ்ப்பதிலும் வெற்றி பெற்றுள்ளன.
விவசாயிகளின் போராட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. 1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடந்த விவசாயிகள் போராட்டம் சுதந்திரத்தை முன்னெடுத்தது. விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுக்காத அரசுகள் தூக்கிய எறியப்பட்டதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
2005 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி, ஒடிசாவில் உலகின் 5 ஆவது பெரிய இரும்பு ஆலை நிறுவனத்தின் இந்திய கிளையை தொடங்க அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 12 மில்லியன் டன் இரும்பு தயாரிக்கும் ஆலைக்கு 4 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய போஸ்கோ நிறுவனம் முடிவு செய்தது. இதன்மூலம், இரும்பு உற்பத்தியில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று சொல்லப்பட்டது.
அங்குள்ள கிராம மக்களின் போராட்டத்தின் காரணமாக, போஸ்கோவுக்கு வழங்கப்படும் நிலம் 2700 ஆகக் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு உற்பத்தி அளவு 8 மில்லியன் டன்னாகக் குறைக்கப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் மாவட்டத்தில் 997 ஏக்கர் பரப்பளவில் விலை குறைவான காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்தது. இந்த கார் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தை அரசு வலுக்கட்டாயமாகப் பறிப்பதாகக் கூறி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 ஆண்டுக் காலம் மேற்கு வங்கத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியை இழப்பதற்கு இந்த போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தனியார் நில ஆர்ஜிதம் செய்து கொள்ள அனுமதித்துக் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசை ராகுல் காந்தி நிர்ப்பந்தித்தார்.
2020 ஆம் ஆண்டில் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஜூன் 2 ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி 3 விவசாயச் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
3 விவசாயச் சட்டங்களையும் கொண்டு வரும் முன்பு,விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதுபோன்று சம்பவங்கள் நிகழ்வது இது முதல் முறையல்ல. சம்பந்தப்பட்டவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே இது போன்ற சட்டங்களை அவசரமாக் கொண்டு வருவது பாஜக அரசுக்கு வாடிக்கையாகியிருக்கிறது.
மண்டி முறையை நீக்குவதன் மூலம் விவசாயச் சட்டங்களால் சிறு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சட்டங்கள் விவசாயிகளை வலுவிழக்கச் செய்வதோடு, மொத்த வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கருணைப் பார்வையிலேயே வாழ வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். சந்தைப்படுத்துதலில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கவே, கார்பரேட் நிறுவனங்களிடம் சந்தையை மாற்றியதாக அரசு சொல்வது பொய்.
அளவுக்கு அதிகமாகச் சேமித்துக் கொள்ளவும், செய்கையாக விலை ஏற்றத்தைச் செய்யவும் இத்தகைய சட்டங்கள் கார்பரேட்களுக்கு உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை.
அறுவடைக்குப் பிறகு விவசாயிகளுக்கு ஏற்ற, இறக்கங்களுடன் குறைவான விலையே கிடைக்கும். இந்த சட்டம் அரசியல் சாசனத்தைத் தோல்வியுறச் செய்வதோடு,விவசாயிகளுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சட்டங்களைப் பயன்படுத்த அரசியல் சாசனத்தின் 33 ஆவது பிரிவை மத்திய அரசு பயன்படுத்துவது விவேகமற்றது. மாநில அரசு வரம்புக்குள் இருக்கும் விவசாயத்தை இந்த பிரிவின் கீழ் மத்திய அரசு பயன்படுத்துவது கூட்டுறவு கூட்டாட்சி உணர்வைப் பலவீனப்படுத்துவதாகும்.
ஒப்பந்த விவசாயம் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று அரசு சொல்கிறது. ஆனால், அவர்கள் இயற்றியுள்ள சட்டத்தின்படி ஒப்பந்ததாரரை விட விவசாயிகள் குறைவான வருவாயை மட்டுமே பெறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளைப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் ஆட்டுவிக்கும் நிலையே ஏற்படும்.
விலை நிர்ணயத்தில் நிலவும் சமச்சீரற்ற தன்மை, விவசாயிகளுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு குஜராத் விவசாயிகளை எதிர்த்து அமெரிக்காவின் முன்னணி உணவு நிறுவனமான பெப்ஸிகோ வழக்கு தொடர்ந்தது. விவசாயிகளிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் மீறப்பட்டதாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தலையிடுமாறு மத்திய அரசை விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். இது இப்போது நிகழ்ந்தது.
புதிய சட்டங்களாலும் விவசாயிகளுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோன்று, கடந்த 2006 ஆம் ஆண்டு பீகாரில் விவசாய உற்பத்தி சந்தைக் குழு ரத்து செய்யப்பட்டபோது, விளைபொருட்கள் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசின் இத்தகைய நடவடிக்கையால், முதலீடு செய்ததில் பாதியைக் கூட விவசாயிகளால் மீட்டெடுக்க முடியவில்லை. இத்தகைய பரீட்சார்த்த நடவடிக்கைகள் எல்லாம் நல்ல உதாரணமாக நம் முன்னே நிற்கின்றன. புதிய சட்டங்களும் இதே போன்று விவசாயிகளை இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிடும் என்பதில் சந்தேகிப்பது நியாயம்தானே.
விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் இயற்றியுள்ள சட்டத்தில் அப்படி ஏதும் இல்லை. இந்த சட்டம் மண்டி முறையைப் பலவீனப்படுத்துவதோடு, பெரிய வர்த்தகர்களுக்கு அதிக அதிகாரத்தை அளித்து, கறுப்புச் சந்தையை ஊக்கப்படுத்தும்.
மத்திய அரசின் ஒரே நாடு,ஒரே சந்தை என்ற திட்டத்தை மாற்றிவிட்டு, ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதார விலை என்று மாற்றினால் மட்டுமே விவசாயிகள் முகத்தில் புன்னகையைப் பார்க்க முடியும்.