3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீதி கேட்டுக் கடந்த 30 நாட்களாக நடுங்கிக் கொண்டே கடும் குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இதுவரை 44 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதிலேயே பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். விவசாயிகள் மீது அவர் இரக்கப்படவே இல்லை.
போராடும் விவசாயிகள் சோர்வாகி அவர்களே ஓடிவிடுவார்கள் என்பது பாரதிய ஜனதா கட்சியின் எண்ணமாகவும் கொள்கையாகவும் இருக்கிறது. பிரதமர் தொலைக் காட்சியில் விளக்கங்களை அளித்து வருகிறார். அவருடைய அமைச்சர்கள் ஏதோ சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமது நெருக்கமான முதலாளிகளுக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.
அரசியல் நேர்மையின்மையுடன் நாடகம் ஆடுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுக்குச் சிறிதளவும் ஆர்வமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
சாலைகளில் நின்று கொண்டிருந்த விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி பிரயோகமும் நடத்தித் தாக்கிய பிரதமர் தான், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகக் கூறுகிறார்.
கடந்த 2015-6 விவசாய கணக்கெடுப்பின்படி, 14 கோடியே 64 லட்சம் விவசாயிகள், 15,78 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டத்தை மோடி அரசு தொடங்கியது. 3 தவணைகளாக இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டில் 88 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 6 ஆயிரத்து 5 கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்பு, விவசாயிகள் கணக்கில் 49 ஆயிரத்து 196 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் இதுவரை 38 ஆயிரத்து 872 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்குகளின் செலுத்த வேண்டிய 88 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முழுமையாக இதுவரை வழங்கவில்லை.
தற்போது விவசாயிகளின் கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய செலுத்தியபோதும், 3 சட்டங்களை நியாயப்படுத்தியே பிரதமர் மோடி பேசுகிறார்.
5 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகையைத் தராதது ஏன்? இந்த திட்டத்தின் கீழ், மொத்தமுள்ள 14 கோடியே 64 லட்சம் விவசாயிகளில் 9 கோடியே 24 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது ஏன்?
மோடி அவர்களே, உங்களை சிம்மாசனத்தின் மீது அமர வைத்த மக்களை நீங்கள் கொடுமையுடனும், அக்கறையின்றியும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இன்று விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்றும், ஒட்டுண்ணிகள் என்றும், துண்டாடும் கும்பல் என்று காலிஸ்தானியர்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சி முத்திரை குத்துகிறது. 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற்று, விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.