வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதன்படி, ஷஹரான்பூரில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செல்ல பிரதமருக்கு நேரமிருக்கிறது. ஆனால், அவரது சொந்தத் தொகுதியில் போராடும் விவசாயிகளைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை. இந்த விவசாயிகள் தான் வாரணாசி தொகுதியில் அவருக்கு வாக்களித்தவர்கள். புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் நிலையை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை.
விவசாயிகளைத் தேச விரோதிகள் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், அரசாங்கமே தேசவிரோதமாக இருக்கிறது. போராடும் விவசாயிகளைத் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் விவசாயிகளைச் சந்தேகிக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் இதயம் இந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. நிலத்தில் உழைப்பதிலேயே விவசாயிகளின் இதயம் ஒன்றிப் போயிருக்கும். இரவு, பகலாக நிலத்தில் வியர்வை சிந்த உழைக்கும் விவசாயிகள், இந்த நாட்டை எப்படிக் காட்டிக் கொடுப்பார்கள்?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாயச் சட்டங்களும் பேய்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வோம். எனினும், அதுவரை இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். எதிர்ப்புகளை வளர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒரு வார்த்தையைப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். எதிர்ப்புகளை வளர்ப்பவர்கள் என்று கூறி, நாடாளுமன்றத்திலேயே விவசாயிகளைப் பிரதமர் மோடி அவமதிக்கிறார். வழக்குரைஞர்களோ, மாணவர்களோ அல்லது தொழிலாளர்களோ, யார் போராடினாலும் அவர்கள் பின்னால் செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு உணவளிக்கும் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள் என்று பிரதமர் மோடி பேசுகிறார். போராடுபவர்களை அவமதிப்பதைப் பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்றார்.
உத்தரப்பிரதேச காவல் துறையினர் விதித்த தடையுத்தரவையும் மீறி, விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.