அமித்ஷாவுக்கு எதிரான ஷோராபுட்டின் என்கவுன்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் குறித்து, 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் அமித்ஷா, குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது உள்துறை அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் இருந்தார்.
அப்போது, ஷோராபுட்டின் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வழக்கு தொடர்ந்தது. குஜராத்தில் நடைபெற்ற வழக்கு பின்னர் மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் முழு விசாரணையையும் ஒரே நீதிபதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வழக்கை மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதி உத்பாத் விசாரித்தார். அமித்ஷாவை நீதிமன்றத்தில் ஆஜராக இவர் உத்தரவிட்டார். மறுநாள் ஆஜராகாத அமித்ஷாவை, நீதிபதி உட்பாட் கண்டித்தார். இதனையடுத்து, அடுத்த 19 நாட்களில் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நீதிபதி லோயா பொறுப்பேற்றார்.
நீதிமன்றத்திலிருந்து நேரில் ஆஜராக விதிவிலக்கு அளித்தபோதிலும், ஏற்கனவே ஏன் ஆஜராகவில்லை என அமித்ஷாவுக்கு நீதிபதி லோயா கேள்வி எழுப்பினார். மேலும், டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆஜராகவேண்டும் என அமித்ஷாவுக்குக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த நிலையில், சக நீதிபதியின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு நாக்பூருக்குச் சென்ற நீதிபதி, 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி மாரடைப்பால் இறந்ததாகப் பெற்றோருக்குத் தகவல் வந்தது. அப்போது நீதிபதி லோயாவின் வயது 48.
நீதிபதி லோயாவின் மரணத்தை வழக்கமான செய்தியாக்கிவிட்டு ஊடகங்கள் அனைத்தும் கடந்து சென்றன. ஆனால், ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே இதை எழுதின.
அவ்வப்போது, நீதிபதி லோயாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்படும். எழுப்பிய வேகத்தில் அடங்கியும் போகும். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த மோடி பிரதமராகவும், அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும் வந்து அமர்ந்து விட்டார்கள். எந்த ஊடகமாவது வாய் திறக்குமா? உண்மை எத்தனை நாளைக்கு உறங்கும் ?
நீதிபதியின் குடும்பத்தினர் இப்போது மவுனம் கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றனர். மரணத்தில் சந்தேகம் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.
இறப்பதற்கு முந்தைய நாள் திருமண விழாவிலிருந்து தன் கணவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு 40 நிமிடங்கள் பேசியதாகவும், நிகழ்ச்சிகள் குறித்து சொன்னதாகவும் அவரது மனைவி ஷார்மிளா தெரிவித்துள்ளார். மறுநாள் நீதிபதி லோயாவின் மரணச் செய்திதான் வந்து சேர்ந்திருக்கிறது.
லோயா மாரடைப்பில் இறந்ததாக, அவரது குடும்பத்தினருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
லோயாவின் சகோதரி பியானி மருத்துவராக இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, ”மாரடைப்பு ஏற்பட்டதும் நாக்பூர் டாண்டே மருத்துவமனையில் சேர்த்தாக சொல்கிறார்கள். அங்கு எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லை என்பது எனக்குத் தெரியும் ”என்கிறார்.
நீதிபதி லோயாவின் தந்தைக்கும் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போனில் பேசிய ஈஸ்வர் பஹேத்தி என்பவர், ”தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், உங்கள் மகன் உடல் காட்டேகாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலைச் சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்புகிறார் லோயாவின் சகோதரி பியானி.
பிரேதப் பரிசோதனை செய்து லோயாவின் உடலை உறவினர்களிடம் கொடுத்தபோது, சக நீதிபதிகள் யாரும் இல்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மட்டுமே கூட இருந்தார் என்கிறார் பியானி.
இது குறித்து பியானி தொடர்ந்து கூறும்போது, ” சட்டையின் காலர் பகுதியின் பின்புறம் ரத்தக்கறை இருந்ததாக தெரிவித்தார். மேலும் அவரது தலையில் காயம் இருந்ததாகவும், சட்டையின் பின்புறம் ரத்த துளிகள் இருந்தன. பிரேதப் பரிசோதனை செய்யும்போது ரத்தம் வராது என்று ஒரு மருத்துவர் என்ற முறையில் எனக்கு தெரியும். மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், லோயாவின் நண்பர்களும், சக நீதிபதிகளும் எங்களிடம் வந்து, பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இறப்பதற்கு முன் என் சகோதரரிடம் இருந்த உடமைகள் எதையும் காவல் துறையினர் இதுவரை எங்களுக்குத் தரவில்லை.
சில நாட்கள் கழித்து, லோயாவின் செல்போனை சக நீதிபதி பஹேட்டி கொண்டுவந்து கொடுத்தார். முறைப்படி, இதனை காவல்துறையினர் தான் தந்திருக்க வேண்டும். சார், இவர்களிடம் பத்திரமாக இருங்கள் என்ற ஒரே ஒரு குறுஞ்செய்தி மட்டும் தான் போனில் இருந்தது. மற்ற குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டிருந்தன.
லோயா இறப்பதற்கு முந்தைய இரவு நடந்த நிகழ்வுகள் குறித்து எனக்குச் சந்தேகம் எழுகிறது. மாரடைப்பு ஏற்பட்டதும், 2 கி.மீ. தொலைவில் இருந்த ஆட்டோ ஸ்டேண்ட் சென்று ஆட்டோவை அழைத்து வந்து, அதில் ஏற்றி அனுப்பியது ஏன் ? இது குறித்து அப்போதே குடும்பத்தினருக்கு தெரிவிக்காதது ஏன்?. பிரேதப் பரிசோதனைக்கு யார் பரிந்துரைத்தது? பரிந்துரைக்க என்ன காரணம்? லோயாவை அழைத்துச் செல்ல இவ்வளவு விஐபிக்கள் இருந்த இடத்தில் ஒரு கார் கூடவா இல்லை? என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.
வழக்குரைஞர் சரோடே கூறும்போது, ”நீதிபதி லோயா அனுமதிக்கப்பட்ட டாண்டே மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கை ஏதும் அவரது குடும்பத்தினருக்குத் தராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்தால், யாருக்காவது பிரச்சினையாக இருக்குமா?” என்கிறார்.
லோயாவின் சகோதரி பியானி மேலும் கூறும்போது, ”வலுக்கட்டாயப்படுத்தி என் சகோதரரை அழைத்துச் சென்ற நீதிபதிகள், அவர் இறந்து ஒரு மாதம் கழித்துத்தான் எங்கள் வீட்டுக்கு வந்தனர். மருத்துவமனைக்குச் சென்று இவர்கள் ஏன் சிகிச்சை விவரம் குறித்து விசாரிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
லோயாவின் தந்தை கூறும்போது, ‘பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் மூத்த காவல் ஆய்வாளர் கையெழுத்திட்டுள்ளார். அதன் கீழே சாட்சியாக, லோயாவின் ஒன்றுவிட்ட சகோதரர் என்று கூறி யாரோ ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். நாக்பூரில் அப்படி உறவினர் யாரும் இல்லை. கையெழுத்திட்டது யார் என்ற கேள்விக்குப் பதில் கிடையாது” என்றார்.
இறுதியாக பியானி கூறும்போது, ”நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், மருத்துவ அறிக்கை நம்பும்படி இல்லை. எனது சகோதரர் லோயா என்னிடம் தான் உடல் பரிசோதனை செய்துகொள்வார். அவருக்கோ அல்லது எங்கள் குடும்பத்தினருக்கோ இதயம் தொடர்பான நோய் இல்லை” என்றார்.