‘My Rajiv’ என்கிற நூலில் அன்னை சோனியா எழுதிய சில பகுதிகளின் தமிழாக்கம் அன்னை இந்திரா நினைவு நாளையொட்டி (அக்டோபர் – 31) வெளியிடுகிறோம்:
கடந்த சில ஆண்டுகளாக நானும் ராஜிவும், அரசியலை நெருங்கிய நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவரை எதிர்த்தவர்கள் பழிவாங்க மேற்கொண்ட பிரச்சாரம் கண்டு, சாதாரண மக்களும் திகைப்படைந் தனர். அரசியல்வாதியானால், வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை நானும் ராஜிவும் நன்கு அறிவோம்.
அன்றைய அரசியல் சிக்கலால், ராஜிவ் மன வேதனையுற்றார். என் மாமியார் தனியாக இம்சிக்கப் பட்டார். இப்படிப்பட்ட நிலையில், அவருக்கு இளைப்பாற மகனின் தோள்கள் தேவைப்படும்போது, ராஜிவ் எவ்வாறு சுக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும்? அவருடைய தாயாரை நான் மிகவும் நேசித்ததால், மன உளைச்சல் அடைந்தேன். ராஜிவ், தம் தாய்க்குத் துணையாக நின்று, பொறுப்புடன் செய்யவேண்டிய கடமைகளை நான் உணர்ந்தேன். அதேவேளையில், அவரைப் பலி ஆடாக ஆக்கும் சமுதாயமுறை பற்றி நான் கோபமும் வெறுப்பும் அடைந்தேன். அது அவரை நசுக்கி அழித்துவிடும் என்பதை நான் முழுவதுமாக அறிவேன்.
அவர் என்னுடைய ராஜிவ்!
அந்த நீண்ட நெடிய ஆண்டு, ஒவ்வொரு நிமிடமும், ஓர் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றது. எங்களுக்கு உதவி செய்ய எவருமில்லை! எல்லாரும் ஏற்கத்தக்க நியாயமான ஒரு தீர்வை – அற்புதத்தை நான் எதிர்பார்த்தேன்! ராஜிவ் சிதைவடைவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் என்னுடைய ராஜிவ்! ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம்! அவர் தம் தாயாருக்குக் கைகொடுத்து உதவ எண்ணினால், அதற்காக அவரோடு எங்குச் சென்றும் போரிடத் தயாரானேன்!
ராஜிவ் அரசியலில் நுழைந்த விநாடிமுதல் எங்கள் வாழ்க்கை மாறியது. இதற்குமுன் அவர் வாழ்ந்த வாழ்க்கை வேறு விதமானது! கவனமான வேலை! அதன்பின் ஒய்வு! – எத்தகைய காலம் அது? முன்னதாக இருந்த எங்கள் வாழ்க்கை உலகம் மிகமிக நெருக்கமானது! புரிந்து கொள்ளத் தக்கது! இப்போது அவர் வாழ்க்கை , மக்கள் கூட்டத்தின் மத்தியில்! தினமும் நூற்றுக்கணக்கானோர் – அரசியல்வாதிகள், கட்சி ஊழியர்கள், அமேதி தொகுதி மக்கள் – தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுதல் போன்றவற்றை முன்வைக்கின்றனர்! அவர் எங்களோடு இருக்கும் நேரம் விலை மதிக்க முடியாதது! அவரது பயணத்தின்போதும் இரவில் வெகுநேரம் விழித்திருந்தபோதும், உடனிருக்க, நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு, அதற்கேற்பப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டோம்.
ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதம்
அந்தக் காலத்திய திடீர் எதிர்பார்ப்புகளைப் பற்றி அவர் பரப்பரப்பு அடையவில்லை. தமக்கு இருக்கும் அரசியல் சுமை, தனிமை, இழப்பு என எது பற்றியும், ஒருபோதும் அவர் புகார் கூறியதில்லை . எவ்விதப் பரப்பரப்புமின்றி, வேலையில் ஈடுபடுவது அவரது இயல்பு. ராகுலுக்கு அவர் எழுதிய கடிதங்களுள் ஒன்றில் இது வெளிப்படுத்துகிறது.
“ஏதாவது ஒன்றைச் செய்தால், அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும். நல்லது எதையும் அரைகுறையாகச் செய்யக்கூடாது. உன்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்ய, மேலும் கடினமாக உழை! வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது. சற்று அதிகமாக உழைத்து முன்னேறு! முழுமை அடையும்வரை முயன்று உழை! சிறுசிறு விஷயங்கள்தான் மாற்றங்களை உண்டாக்கும்” என்று ராகுலுக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.
அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், ராஜிவுக்குக் குடும்பம் மிகவும் தேவையாக இருந்தது. அரசியலை அறிந்த ராஜிவ், தாம் நன்கறிந்த, நம்பத்தக்க, நேர்மையான, நிலையான உலகையே விரும்பினார். அரசியலுக்கு மாறுபட்ட, உண்மையான, அன்பு நிறைந்த புகலிடமாக அது அவருக்குத் தெரிந்தது.
அக்காலத்தில், அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு இருந்தது, “இந்து மரபின்படி, ஆடவன் ஒருவன் அரை மனிதன்தான். அவன் மனைவியே அவனை முழுமையாக்குகிறாள். இதுபோலவே நானும் எண்ணுகிறேன்.
நீ இல்லாவிட்டால், என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும். அரசியலில் நான் இருக்கும் போது, இது மிகவும் உண்மையாக இருப்பதாக எண்ணுகிறேன்.”
ராஜிவின் அரசியல் பிரவேசம்
ராஜிவின் அரசியல் பிரவேசத் தீர்மானத்தை நான் ஏற்றாலும், எங்கள் வாழ்க்கையில் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால், சிறிது காலம் கழித்தே எனக்கு மனதார ஈடுபாடு ஏற்பட்டது. குடும்பத்தை நடத்து வதோடு, நான் முன்பு தொடங்கி இடையில் விட்டிருந்த வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினேன். ராஜிவ், அவரது தாயார் ஆகியோரின் ஓய்வு நேரங்களுக்கேற்ப, என் பயிற்சி நேரத்தையும், வெளி உலக நிகழ்ச்சிகளையும் மாற்றி அமைத்துக்கொண்டேன். என் மாமியாரின் ஆழ்ந்த மனக்காயங்களை உணர்ந்து, நானும் ராஜிவும் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டோம். இக்கால கட்டத்தில், குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
1982 இல் ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “நான் அமேதி போகிறேன். அம்மாவும் உடன் வருகிறாள். தொடக்கத்தில் ஒவ்வொருவரும் அவளையே இமை கொட்டாது பார்ப்பார்கள். பழக்கப்படும்வரை இது ஒரு தர்மசங்கடமாக இருக்கும். அவள் மிகவும் தைரியசாலி!” என்று குறிப்பிட்டு நிலைமையை உணர்த்தியிருந்தார்.
ராகுலுக்கு மன உறுதி அளித்த ராஜிவ்
1982இல் அங்கேயே தங்கிப் படிக்கும் விடுதி இணைந்த பள்ளி ஒன்றுக்கு ராகுல் அனுப்பப்பட்டான். 1983இல் பிரியங்காவும் அங்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘அனுபவமே ஒருவரை வலுவுடையவராகவும், தற்சார்பு உடையவராகவும் மாற்றும்’ என்பது ராஜிவின் உறுதியான நம்பிக்கை. ஆனால், குடும்பத்தின்மீது ஏற்பட்ட தாக்குதலால், தங்களைத் தாங்களே எவ்வாறு சமாளித்துக்கொள்ளப் போகிறார்கள் என ராஜிவ் கவலைப்பட்டார். டெல்லியில், பள்ளித் தோழர்கள் அவர்களைத் துன்புறுத்திய பிரச்சினைகளை முன்பே எதிர் கொண்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம். எனவே, மனோதிடத்தை வளர்த்துக்கொள்ளுமாறு ராஜிவ் அடிக்கடி ராகுலுக்குக் கடிதம் எழுதினார்.
“சில சமயம், அப்பா, பாட்டி, அம்மா பற்றி டெல்லியில் பத்திரிகைகளில் செய்திகள் வரும். அதற்காகக் கவலைப்படாதே! அதுபற்றிச் சில பள்ளித் தோழர்கள்கூட உன்னை மனக்கவலை அடையச் செய்யலாம். ஆனால், அச்செய்திகளில் பல, உண்மை அன்று ! அத்தகைய புகைச்சல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்! உன்னை எரிச்சலடையச் செய்யும் செய்திகளைப் பற்றிக் கவலை கொள்ளாதே!” என ராஜிவ், ராகுலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பஞ்சாபில் நிலவியிருந்த நிலை, தேச ஒற்றுமைக்குப் பேரபாயமாகத் தோன்றியது. பிரிவினை சக்திகள் வலிமை பெற்றன. மிருகத்தனமான பயங்கரவாதக் கொலைகள், மேலும் மேலும் அதிகரித்தன. ராகுலையும் பிரியங்காவையும் பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆபத்து அதிகரித்தபோது, அந்தப் பள்ளியில் வைத்து அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது.
ராகுல், பிரியங்கா பாதுகாப்பு குறித்து இந்திரா கவலை!
1984இன் வசந்த காலத்தில், டெல்லி பள்ளிகளில் ராகுலும் பிரியங்காவும் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடைஞ்சல்களில் இது முதன்மையானது. ஆனால், அதற்கு ஈடான வேறு நிகழ்வுகளும் உண்டு. அவர்களது பாட்டியின் கடைசி ஆறுமாத வாழ்க்கையை அவர்களுடன் கழித்தார். அவர்களின் பாதுகாப்பு பற்றி அச்சப்பட்டாலும், அவர்களோடு இருந்ததில் பாட்டிக்கு அளவற்ற மகிழ்ச்சி!
அக்பர் சாலை அலுவலகத்தை, எங்கள் வீட்டோடு இணைத்த வாயில் படியைத் தாண்டி, வெளியே விளையாடப் போகக் கூடாதென ராகுலுக்கும் பிரிங்காவுக்கும் என் மாமியார் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இடத்தில்தான், பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மரணத்தை எதிர்பார்த்த இந்திரா!
சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகளுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “என் தாயார் தாம் இறக்கும் நாளை நன்கு அறிந்திருந்தார் என உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு அவர் ஏன் நினைத்தார் என எனக்குத் தெரியாது. ஆனால், அது உண்மை ! அவர் செய்த பல செயல்கள், அவர் எங்களைப் பிரியத் தயாராக இருந்தார் என்பதையே உணர்த்தின. ஏனென்றால், அவர் அவ்வாறு செய்ய விரும்பாவிடினும், அவர் எடுத்த முடிவுகள், தலைவர் என்ற முறையில் அவர் செய்த கடின முடிவுகள், வாழ்க்கையைப் பற்றி அவரை அவ்வாறு எண்ணத் தூண்டின” எனக் குறிப்பிட்டிருந்தார்.
சீக்கிய பொற்கோயிலை ராணுவம் மீட்ட நிகழ்வுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஒரு சோக நிழல் அலை பரவியது. என் மாமியார் தாம் இறந்தபின் தம்முடைய மரணச் சடங்குகள் எப்படி இருக்கவேண்டும் என்பன பற்றி ராஜிவிடமும் என்னிடமும் முன்பே பேசினார். தாம் கூற விரும்பிய அறிவுரைகளை எழுதினார். ராகுலிடம் தனியாகப் பேசினார். தைரியமாக இருக்குமாறு அவனிடம் கூறினார். தாம் வாழ்ந்து முடித்துவிட்டதாகவும், தம்மால் இயன்ற பணிகளைச் செய்துள்ளதாகவும், தாம் இறந்தால் அழக்கூடாது எனவும் கூறினார்.
நாள்கள் கடந்து சென்றன. தீபாவளி வந்தது! எங்களோடு தீபாவளி நாள்களைக் கழிக்க ஒரிசாவிலிருந்து ராஜிவ் வந்தார். இதுபோன்ற நல்ல விழா நேரங்களில் அவர் வரத் தவறுவதில்லை . பழைமையான கணேச விக்ரகத்தின் முன்னால் என் மாமியார் தீபங்களை ஏற்றினார். வீட்டை ஒளி அலங்காரம் செய்வதில் நாங்கள் ஈடுபட்டோம். பட்டாசுகள் வெடித்தோம்!
மருமகளை அரவணைத்த மாமியார்!
தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாள் காலை, ராஜிவ் மேற்கு வங்கம் சென்றார். அன்று இரவு அதிகாலை நான்கு மணிக்கு நான் எழுந்தேன். எனக்கு ஆஸ்த்துமா மருந்து தேவைப்பட்டது. படுக்கை அறை விளக்கை ஏற்றி, மருந்துப் பெட்டிப் பக்கம் சென்றேன். அடுத்த அறையில் இருந்த என் மாமியாருக்குத் தொல்லைதரக் கூடாதென எண்ணினேன். ஆனால், என் அறைக்கதவு திறந்தது! எனக்கு ஒரே வியப்பு! அவர் கையில் டார்ச் விளக்கை வைத்துக்கொண்டு எனக்கு மாத்திரை தேடிக் கொடுத்து, ஒரு கோப்பைத் தண்ணீ ரையும் அளித்தார். மறுபடியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தம்மைக் கூப்பிடச் சொன்னார். அநேகமாக அவர் தூங்காமல் விழித்திருந்திருப்பார் என எண்ணுகிறேன்.
அந்த வார இறுதியில், காஷ்மீர் செல்வது பற்றி மறுநாள் பேசத் தொடங்கினார். இலையுதிர் காலத்தில், சினார் மர வண்ண இலைப் பூக்களை அவர் பார்க்க மிகவும் விரும்பினார். அவற்றைக் கண் குளிரக் காண்பது என்பது அவருக்கு ஒரு முக்கிய சம்பவமாகத் தோன்றியது. காஷ்மீர் பற்றித் தம் உள்ளத்தில் அவர் கொண்டிருந்த எண்ண ஓட்டங்களுக்கு அது பிரியாவிடையோ என்னவோ? இருந்தும், என் உடல் நலக்குறைவு பற்றிய கவலை காரணமாக இரவில் அங்குத் தங்க அவர் தயங்கினார். நான் தனியாக வீட்டில் தங்க நேர்ந்தது பற்றிக் கவலை கொண்டார். இறுதியாகக் குழந்தைகளுடன் சென்றார்.
அக்டோபர் 28இல் காஷ்மீரிலிருந்து அவர் திரும்பினார். அன்றைய மாலைப்பொழுதை எங்கள் அறையில் அமைதியாகக் கழித்தார். வழக்கம்போல் தம் முராவினை (பிரம்பு நாற்காலி) எடுத்து வந்து அதில் அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்தார். இடையிடையே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே எங்களோடு அளவளாவினார்.
அடுத்த நாள் அதிகாலை ஒரிசா பயணம்; அதை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பினார். அன்று புவனேஸ்வரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், “நான் வாழ்வேனா, அல்லது சாவேனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இறுதி மூச்சு உள்ளவரை தேசப்பணி ஆற்றுவேன். நான் இறந்தால்கூட, நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவைப் பலப்படுத்தி, வலுப்படுத்தும்” என்று உரையாற்றினார்.
அக்டோபர் 31, அரசு விருந்தோடு முடிவடையும்படி ஒரு பரப்பரப்பான நாளாக வீடு இருக்கும். காலையில் பள்ளிக்குப்போக விடைபெற்ற பிரியங்காவை முத்தமிட்டு, இறுக்கமாகத் தழுவினார்; ராகுலைக் கூப்பிட்டு, தாம் முன்பு கூறியவற்றை நினைவூட்டினார். அவர் அலுவலகம் புறப்படத் தயாராகும்போது, அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். மாலை விருந்து பற்றிச் சிறிது நேரம் பேசினார். கால தாமதமாகிவிட்டதால், மதிய உணவின்போது, இரவு விருந்து ஏற்பாடுபற்றிப் பேச எண்ணினார்.
அன்னை இந்திரா படுகொலை!
நான் குளிக்கச் சென்றேன். அப்போது, வழக்கத்துக்கு மாறாகத் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு ஒலி கேட்டது. ஆனால், பட்டாசு வெடிபோலல்லாமல், முற்றிலும் மாறான ஓசை அது! குழந்தைகளின் தாதியிடம் (ஆயா), என்ன என்று பார்க்கச் சொன்னேன். எனினும், ஏதோ பயங்கரம் நிகழ்ந்ததை நான் உணர்ந்தேன். வெளியே ஓடி வந்தேன். அம்பாசிடர் கார் ஒன்றின் பின் இருக்கையில் என் மாமியார் கிடத்தப்பட்டிருந்தார். அவர் இறந்தவர்போன்று தோன்றினார். அவர் அருகில் நான் மண்டியிட்டு அமர்ந்தேன். பலத்த ஜனநெரிசல்களுக்கிடையே கார், மெதுவாக மருத்துவமனை நோக்கிச் சென்றது. எனக்குப் பேயறைந்த உணர்வு. ஏதேதோ எண்ணங்கள்! அவர் மூர்ச்சையாய் இருக்கிறாரா? அவர் காப்பாற்றப்படுவாரா? ராஜிவ் எங்கே? குழந்தைகள் எங்கே? படுபயங்கரம் ஒன்று நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை;
எல்லாமே முடிந்துவிட்டது!
ஆனால், எல்லாமே முடிந்துவிட்டது! மணித்துளிகள் உருண்டோடின. பெருந்திரளாக மக்கள், உற்றார் உறவினர் வந்து சென்றனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து அழைத்துவரப்பட்டு, சப்தர் ஜங் சாலையில் இருப்பதாக யாரோ கூறினார்.
ராஜிவ் மேற்கு வங்கத்தில் இருந்தார். தாயாருக்குக் காயமேற்பட்டதாக அவருக்குச் செய்தி அனுப்பப் பட்டது. டெல்லி திரும்பும் விமானத்தில் வானொலிச் செய்தியை அவர் கேட்டுள்ளார். மாலை 3.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தார். மற்றவர்களோடு அவர் இருந்தார். ராஜிவுடன் ஒரே ஒரு விநாடி தனிமையில் இருக்க எனக்கு விருப்பம்! அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க அனைவரும் அழைப்பதாக ராஜிவ் என்னிடம் கூறினார். ராஜிவைப் பிரதமராக்க ஏற்பாடுகள் நடந்தன. அப் பதவி வேண்டாமென நான் அவரிடம் மன்றாடினேன்; கெஞ்சினேன்! மாற்றார்கள் மத்தியில் இந்த வேண்டுகோளை நான் விடுத்தேன். அவரும் கொல்லப்படுவார் என்றேன். அவர் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு என்னைத் தழுவி அணைத்து, ‘விரக்தியடையக்கூடாது’ என்றார். அவருக்குப் பிரதமர் பொறுப்பு ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை !
“எப்படியும் ஒருநாள் நான் கொல்லப்படலாம்” என்றார். அவர் எதிர்பார்த்தபடி கொல்லப்பட்டார்.
அன்னை இந்திரா மறைவிற்குப் பிறகு…
அன்று நவம்பர் மாதம் 19ஆம் நாள்!
என் மாமியார், இந்திய மண்ணில் முதன்முதலாய்ப் பாதம் பதித்த நாள்! ஆம், பிறந்த நாள்!
இறுதிச் சடங்குகள் குறித்த இந்திரா!
எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான, ஆயினும் தனித்தனியாகச் சில அறிவுரைகளை வழங்கினோம். “சோனியாவும் நானும் ஒரே நேரத்திலோ, ஒரே இடத்திலோ, வேறுவேறு இடங்களிலோ, இந்தியாவிலோ, அன்றி வெளியிலேயோ, எப்படி – எங்கே இறக்க நேர்ந்தாலும், எங்கள் உடல்கள் டெல்லிக்குக்கொண்டு வரப்படவேண்டும்! அங்கு இந்துசமயச் சடங்குகள் அனைத்தும் செம்மையாகச் செய்யப்பட்டுத் திறந்தவெளியிலே தகனம் செய்யப்பட வேண்டும்! எரிமின் நிலையத்தில் எங்கள் உடல்கள் எரிக்கப்படக் கூடாது! எங்கள் வழக்கப்படி, மூத்த குழந்தை ராகுல், தகனம் செய்யத் தீவைக்க வேண்டும். பின்னர், அலகாபாத் திரிவேணியில் கங்கையில் எங்கள் அஸ்தி கரைக்கப்பட வேண்டும்! அங்குதான் என் மூதாதையர்களின் அஸ்தி கரைக்கப்பட்டது” என்று ராஜிவ் கூறினார்.
எங்களுக்கு எல்லாமே அன்னை இந்திராதான்!
எங்கள் உலகத்தின் மையமாகத் திகழ்ந்தவர் என் மாமியார்தான்! நான் சிறுபெண்ணாக, அவர்களுக்கு மருமகளாக, இந்த எங்கள் வீட்டில் நுழைந்தபோது, கஷ்ட நஷ்டங்கள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றிலும் அவர்தான் முக்கியப் பங்கு வகித்தார். எங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் மையம் அவர்தான்! எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சச்சரவாக இருந்தாலும், சிறப்பு நிகழ்ச்சியானாலும் எதிலும் அவரையே நாங்கள் எதிர்கொண்டோம்! எங்களுக்கு நல்ல வழிகாட்ட, தவறு செய்தால் திட்டித் திருத்த, ஒரு செயலைச் செய்ய, ஊக்கமளிக்க, அன்பு காட்ட இதுவரை அவர் இருந்தார்!
ராஜிவைப் பொறுத்தவரை, அவருடைய குடும்பமே அவரது அன்னைதான்! குறிப்பிட்டுச் சொல்வதானால், ராஜிவினுடைய தாயார், அவருடைய வாழ்நாளின் கடைசி நான்கு ஆண்டுகளில் ஒரு கனிவான தாயாக, நல்ல நண்பனாக, இவற்றிற்கெல்லாம் மேலானவராகத் தோன்றினார்.
ராஜிவுக்கு என் மாமியார்தான் ஆசான், தலைவர் என எல்லாமுமே! ஆயினும், தாயாரின் எதிர்பாராத மரணம் குறித்து ராஜிவால் துக்கம்கொள்ள முடியவில்லை! தாங்கமுடியாத தமது துயரத்தையோ, மனக்காயத்தையோ ராஜிவால் வெளியில் காட்டிக்கொள்ள நேரமே இல்லை!
மீளமுடியாத துயரம்!
தம் தாயாரின் அகால மரணமாகிய துயர நிகழ்வுக்குப் பின்னர் நடந்த ஒரு சம்பவம் என் நினைவில் இப்போதும் நிழலாடுகிறது. ராஜிவை நான் ஒரு நாள் வீடு முழுவதும் தேடினேன்! யாருக்கும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர் தம் தாயாரின் அறையில் இருந்தார்! தாயாரோடு தொடர்புடைய பொருள்களை ஒவ்வொன்றாக அவரது அறையில் தனியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ராஜிவுக்கு அந்தத் தனிமை அப்போது தேவைப்பட்டிருக்கிறது. எனவே, தனிமையில் மூழ்கியிருந்தார்.
தாயார் உயிருடன் இல்லாததை எண்ணிப் பலமுறை ராஜிவ் உணர்ந்து உருகியது உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பல பிரச்சினைகளை உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த சூழ்நிலைகளிலெல்லாம் ராஜிவ் தம் தாயை நினைத்துக்கொண்டதுண்டு, இவ்வகையில், அவரிடமிருந்து ஆன்ம பலத்தையும் தைரியத்தையும் பெற்றார் எனலாம். பழமையும் பண்பாட்டுச் சிறப்பும் நிறைந்த ஒரு தேசத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு இப்போது ராஜிவின் இளம் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது!