நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களும், எம்.பிக்களுமான பவன் கேரா மற்றும் டாக்டர் சையது நசீம் உசேன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பவன் கேரா:
சீனாவுடனான எல்லைப் பதற்றம் குறித்து அரசின் இரண்டு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் பொய்களை அம்பலப்படுத்துகின்றன. இரட்டைப் பேச்சு, நரேந்திர மோடி அரசின் தப்பிக்கும் போக்கு, பாசாங்குத்தனம் ஆகியவை வெளிப்பட்டுள்ளன.
அடுத்ததாக, பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட ஏசியன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் 9,202 கோடிகள் கடன் பெற்ற தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
ஏசியன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் வங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த வங்கியில் சீனாவுக்கு பெருவாரியான பங்குகள் உள்ளன. கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீனப் படைகளின் ஊடுருவல் நடந்த ஜூன் 19 ஆம் தேதி, இந்த வங்கியிடமிருந்து 500 மில்லியன் டாலர் அளவுக்கு முதல் தவணையாக இந்தியா கடன் பெற்றது.
கல்வான் பள்ளத்தாக்கில் நமது இந்திய வீரர்கள் 20 பேர் சீனப் படைகளால் கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு, 4 தினங்கள் கழித்து இரண்டாவது கடன் தவணை 750 மில்லியன் டாலரை இந்த சீன வங்கியிடமிருந்து இந்தியா பெற்றது. அதே தினத்தில் தான் இந்தியாவுக்குள் சீன ஊடுருவல் ஏதும் இல்லை என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொய் சொன்னார்.
மோடி அரசாங்கத்தின் சீனாவுடனான வணிக உறவுக் கொள்கை இன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் நடந்த உண்மைகளை மாற்றிச் சொன்ன சீனாவுடன் எவ்வித வணிக உறவும் கிடையாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அன்று சொன்னார். இப்போதும் அதே நிலையில் நிற்கிறாரா?
சீனாவின் ஆக்கிரமிப்பை கையாளுவதில் மோடி அரசு பின்பற்றும் வெட்கக்கேடான நடவடிக்கையை பார்த்து நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் அவையில் பேசும் போது, ‘கடந்த ஆறு மாதங்களாக எல்லையில் ஊடுருவல் ஏதுமில்லை’ என்று கூறியது இரண்டாவது அதிர்ச்சியாகும். இது, கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளால் உயிரிழந்த 20 வீரர்களை அவமானப்படுத்தும் வெட்கக்கேடான செயலாகும்.
அப்படியென்றால், கல்வான் தாக்குதல் சீன எல்லையில் நடந்தது என மத்திய அரசு சொல்ல வருகிறதா? எதிரி நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி சென்றதாக இந்திய படையை அரசு குறை சொல்கிறதா? இது சீனாவுக்கு நற்சான்றிதழ் கொடுத்தது போல் ஆகாதா? இத்தகைய போக்கால், இந்தியாவை குறை சொல்ல சீனாவுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
பிரதமரின் கருத்தும், உள்துறை இணை அமைச்சரின் பதிலும் சீனப் பகுதியை தாங்கள் ஆக்கிரமிக்கவில்லை என்பதை உலகிற்கு சொல்வதாக அமைந்துள்ளது. ஆனால், விலை மதிப்பற்ற நமது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கும் வீரர்கள் பின்னேயும், இந்திய நாட்டின் பின்னேயும் நிற்க இவர்கள் தவறிவிட்டனர்.
சீனாவுக்கு பிரதமர் நற்சான்றிதழ் வழங்குகிறார். இந்த நற்சான்றிதழைப் பயன்படுத்திக் கொண்ட சீனா, எல்லையில் இந்தியா அத்துமீறியதாக உலகத்தின் பார்வைக்கு படம் போட்டு காட்டியது. இந்திய எல்லைக்குள் அத்துமீறாமல், சீனா தன் பகுதிக்குள்ளேயே இருந்தது என்றால், அப்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏன் பேச வேண்டும். மத்திய உள்துறை இணை அமைச்சர் ஊடுருவலே நடக்கவில்லை என்று ஏன் சொல்ல வேண்டும். இது சீனாவுக்கு நற்சான்றிதழ் கொடுத்தது போல் ஆகாதா? அன்றைய தினம் நமது எல்லை சீனாவுக்கு கொடுக்கப்பட்டு விட்டதா?
பாதுகாப்புத்துறை அமைச்சகமும், ஒட்டுமொத்த இந்திய அரசும் எங்களது கீழ்க்கண்ட 4 கேள்விகளுக்கு பதில் தரவேண்டும்.
- 2020 ஏப்ரல் மாதத்துக்கு முன்பு எல்லைப் பகுதியில் நமது ராணுவம் ரோந்து சென்ற இடங்களில், இப்போது ரோந்து செல்ல முடியுமா ?
- சீனாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு பிரதமருக்கு வந்த அழுத்தம் என்ன?. கிழக்கு லடாக் பகுதியில் சீனப் படைகள் ஊடுருவல் குறித்த ஆவணங்களை, பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அகற்றியது ஏன்?. அதற்காக வந்த அழுத்தம் என்ன?
- கடந்த ஜூன் 19 ஆம் தேதி கூறிய பொய்யை, இந்திய அரசு நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?
- சீனாவுடனான பேச்சுவார்த்தையால் எந்த பலனும் இருக்காது, என பிரதமர் கூறியதன் அர்த்தம் என்ன?
கிழக்கு எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து இந்திய அரசு தெளிவாக இருக்க வேண்டும். இந்திய அரசு இந்திய ராணுவத்தினருக்கு பக்கபலமாக இருப்பதையும், சீனா எழுப்பும் கோரிக்கையை ஏற்கவில்லை என்பதையும் உலகத்துக்கு இந்தியா தெரியப்படுத்த வேண்டும்.
நமது ராணுவ வரைபடத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு இந்தியருக்கும் வேறுபட்ட கருத்து கிடையாது. ஜுன் 19 ஆம் தேதிக்கு முந்தைய நிலையில், கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதி இருக்கிறதா? என கேட்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் அரசு பதில் தர வேண்டும்.
1962 ஆம் ஆண்டு இந்திய-சீன போர் நடந்துகொண்டிருந்தபோது, அதுபற்றி விவாதிக்க வேண்டும் என கோரி, வாஜ்பாய் உள்ளிட்ட ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பின்னர் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்த வாஜ்பாய், போர் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை நேரு உடனே ஏற்றுக் கொண்டார். அப்போது சுயேட்சை எம்பியாக இருந்த, தற்போதைய எனது கட்சி சகா அபிஷேக் சிங்வியின் தந்தை எல் எம் சிங்வி, அவசரக் கூட்டத்தை ரகசியமாக நடத்தவேண்டும் என்றும், பத்திரிகைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் நேருவிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நேரு, எதிர்க்கட்சிகளின் கருத்தை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதன் பிறகு நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் நடந்த விவாதத்தில் 165 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது, சீனாவுடன் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சில கேள்விகளுக்கு பதிலே தராமல் தவிர்ப்பதன் மூலம் எங்களை முட்டாளாக்க நினைக்காதீர்கள். எம்பிக்களாகிய நாங்கள் பொறுப்புள்ள நபர்கள். போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும்கூட எதிர்க்கட்சிகளை அரவணைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்பதில் நேரில் உறுதியாக இருந்ததை டாக்டர் நசீர் ஹுசைன் சரியாக சொன்னார்.
1962 ஆம் ஆண்டை மறந்து விடுவோம். 2013 ஆம் ஆண்டு சீனாவுடன் எல்லையில் பதற்றமாக இருந்தது. அப்போது ஜனாதிபதியை சந்தித்த அருண் ஜேட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் சீனாவுக்கு எதிராக போரிட எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது உள்ளிட்ட சில கேள்விகளை எழுப்பினர். ரகசியம் என்பதால் எல்லா கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கவில்லை. இருந்தாலும், அவர்களது நம்பிக்கையைப் பெற்றோம். அந்த நேரத்தில் அவர்கள் கூறிய ஆலோசனைகளை எடுத்துக்கொண்டோம். ஊடுருவல் நடைபெற்றதாகக் கூறப்படும் ஜூன் 19 ஆம் தேதிக்குப் பிறகு, இதுபோன்ற ஆலோசனைகளை எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி பெற்று இருப்பாரா?
ராணுவ ரகசியம் என்பதால் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாது என்பதை ஏற்கிறோம். எனினும், ஏப்ரல் மாதத்துக்கு முன்பு நடைபெற்றது போல் நமது எல்லையில் ரோந்து நடைபெறுமா? என்று தான் கேட்கிறோம். இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது என்று உங்களைக் கேட்கிறேன்.
அரசின் சகிப்பின்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. மாணவர் சமுதாயமோ அல்லது அறிவுஜீவிகளோ கேள்வி எழுப்பும்போது, தன் கோரமுகத்தை அரசு காட்டுகிறது. இதுவரை எந்த அரசும் இதுபோன்று நடந்துகொண்டதில்லை. சீதாராம் யெச்சூரி மற்றும் அறிவுஜீவி யோகேந்திர யாதவ் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பொய் பேசும் பிரதமரை எதிர்த்துக் கேள்வி கேட்கும் இவர்களை அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
டாக்டர் நசீர் ஹுசைன்:
இங்கு சொன்னதையெல்லாம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து விவாதித்து விட்டோம். முக்கியக் கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பினால், அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், பொதுவான கேள்விகளை எழுப்பினால் பதில் அளிக்கலாம் என்றும் அரசு எண்ணுகிறது. இதுபோன்று எப்போதும் நடந்ததில்லை. சில முக்கிய விஷயங்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதித்திருக்கிறோம். குறிப்பாக, சீன வங்கியிடம் கடன் வாங்கிய பிரச்சினை குறித்து நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். ஆனால், சீனாவிடம் நிதி பெற்ற மற்ற அறக்கட்டளைகள் மீது குற்றம் சாட்டுவதிலேயே அரசு குறியாக இருக்கிறது.
அவர்களிடம் நாங்கள் எளிதான கேள்வியை கேட்க விரும்புகிறோம். ஊடுருவல் நடந்த இடத்தில், நமது வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்த அன்று, சீன வங்கியிடமிருந்து எப்படி கடன் பெற்றீர்கள்?
இவ்வாறு இருவரும் பேட்டி அளித்தனர்.