அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ள ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பது அதிகார துஷ்பிரயோகம் என பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீவிர வலதுசாரி அரசியலின் முன்னேற்றத்தில் பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நிகழ்வுகளில் பாசிசத்தின் வரலாறு அணிவகுத்து நின்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பாஜகவின் இந்திய பாசிச முகம், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் வெளிப்பட்டது.
பிரச்சாரம் செய்வதன் மூலம் கருப்பை வெள்ளையாக்க முடியும் என்றும், பொய்யை உண்மையாக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இத்தகைய பிரச்சாரத்துக்காக நமது தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷனை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
கார்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஏற்கனவே ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்டன. பல ஆண்டுகளாகவே தூர்தர்ஷனும் அப்படியே செயல்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தூர்தர்ஷனில் இடம்பெற்றபோது, தங்களுக்கு பாதகமான குறிப்பிட்ட வாசகத்தை நீக்குமாறு பாஜக அரசு உத்தரவிட்டதை உதாரணமாகச் சொல்லலாம். இப்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்ய விரும்புகிறார்கள்.
பிரதமர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதை யாரும் மறுக்கவில்லை. அதேசமயம், இந்த நிகழ்ச்சியை வழக்கமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்திருக்க வேண்டும். மாறாக, இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்தது நாட்டுக்கு தவறான சமிக்ஞையை காட்டுவதாக அமைந்துள்ளது.
இத்தகைய அரசியல் நாடு முழுவதும் விவாதிக்கப்படும். சங்பரிவார் அமைப்பைப் பொறுத்தவரை, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை தங்களது வெற்றியாக பிரகடனப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் அரசியல் ஆதாயமும் அடையக் கூடும்.
தூர்தர்ஷனை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பின்மை மீதான மதிப்பு குறைவதோடு, இந்திய சிறுபான்மையினத்தவரின் உணர்வுகளையும் காயப்படுத்தும்.
வகுப்புவாத பதற்றத்தின் நிரந்த அடையாளமாக அயோத்தியா மாறுவதையோ, மக்களிடையே மத நல்லிணக்கம் இல்லாது செய்வதையோ, இந்தியாவில் உள்ள உண்மையான இந்துக்கள் விரும்பவில்லை.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு உள்நோக்கம் சிறிது மாறுபட்டதாக இருக்கலாம். இதன் சாதக, பாதக அம்சங்களை பார்க்கும்போது, 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நாடு அறிந்துள்ளது.
தங்களது பல ஆண்டு கனவு என இதனை ஆளும் பாஜக கொண்டாடியது. ராமர் கோயில் கட்ட 2.77 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒட்டுமொத்த 67.7 ஏக்கரையும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைக்கு அரசு வழங்கியது. இந்த பின்னணியையும் நேரடி ஒளிபரப்பில் காட்ட வேண்டியது அவசியம்.
பிரசார் பாரதி சட்டத்தின் 12 2 (ஏ) பிரிவில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சாசனத்தின் மதிப்பை காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ஒரு மத விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதில் விவேகத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில் தூர்தர்ஷனுக்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.
மத நிகழ்ச்சியில் நேரலை செய்வது, தேசிய ஒருமைப்பாட்டின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு முரணாக இல்லை என்பதை தூர்தர்ஷன் உறுதிப்படுத்த வேண்டும்.
400 ஆண்டுகளாக பாபர் மசூதி இருந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதே இடத்தில்தான் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
இதே இடத்தில்தான் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மதக்கலவரம் நடைபெற்றது. இந்து ராஷ்ட்ராவின் ஆக்கிரமிப்பு போர் குரல் ஒலித்த இடம். இந்திய மதச்சார்பின்மைக்கு பலத்த காயத்தை ஏற்படுத்திய இடம்.
அதே இடத்தில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்துவது, பீகார் தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு அது அரசியல் தேவையாக இருக்கிறது.
ஆனால், ராமர் கோயிலுக்கு கொடுக்கும் முன்னுரிமை நாட்டிற்கும், ஏழைகளுக்கும் எவ்வித பலனையும் அளிக்காது.
கொரோனா பாதிப்பால் நாடு தவித்துக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்துப் போராடுவதே மக்களின் முதன்மை பிரச்சினையாக உள்ளது. உணவு, உறைவிடம் மற்றும் வாழ்க்கை நிலை அபாயக் கட்டத்தில் உள்ளது.
இத்தகைய சூழலில், மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, இந்திய நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.
இந்த நேரடி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மூலம் காணும் சிறுபான்மையினத்தவர், தாங்கள் பழி வாங்கப்பட்டதாகக் கருதலாம். இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற அரசின் நடவடிக்கைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, பாதுகாப்பற்ற உணர்வை இத்தகைய நேரடி ஒளிபரப்பு ஏற்படுத்திவிடும்.
அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமையை சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.
பிரித்தாளும் வியூகம் ஆளும்கட்சிக்கு அரசியல் ரீதியாக பலன் தரலாம். ஆனால், ஏற்கனவே காயமடைந்துள்ள இந்திய மதசார்பின்மை கட்டமைப்பின் மீது உப்பை தடவுவதுபோல் அமைந்துவிடும்.
தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு சங்பரிவாருக்கு தற்காலிக மகிழ்ச்சியை தரலாம். ஆனால், மதசார்பற்ற ஜனநாயக அரசு என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையை காக்க வேண்டும். சங்பரிவாரின் விருப்பங்களுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ப செயல்படவேண்டியதில்லை.
இன்றைய இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.