‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது எனக்குக் கோபமில்லை’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார்.
கடந்த 27 ஆம் தேதி ஒருநாள் பயணமாகப் புதுச்சேரி வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், அவர் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரிக்குச் சென்ற ராகுல் காந்தி, மாணவிகளின் கேள்விக்குப் பதில் அளித்தார். மாணவிகள் ராகுல் காந்தியை ‘சார்’ என்று அழைத்தனர். குறுக்கிட்ட அவர், ‘என்னை சார் என்று அழைக்காதீர்கள், அண்ணா என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்’ என்றார். இதனையடுத்து, அவரை, ‘ராகுல் அண்ணா’ என்று அழைத்து கல்லூரி மாணவிகள் உற்சாகமாக உரையாடினார்கள்.
அப்போது ஒரு மாணவி, ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ” என் தந்தையை இழந்த போது என் இதயத்தைப் பிளந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால், எனது வலி உங்களுக்குப் புரிந்திருக்கும். என் தந்தையைக் கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது கோபமில்லை” என்றார்.
”பாட்டி இந்திரா காந்தியையும், தந்தை ராஜிவ் காந்தியையும் இழந்த போதிலும் உங்கள் அரசியல் செயல்பாடு எப்படி உள்ளது?” என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ” வன்முறையால் உங்களிடமிருந்த அனைத்தையும் பறித்துச் சென்று விடமுடியாது. என் தந்தை என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்…என் வழியே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்…” என்றார்.
”ஒருவரைக் காதலிப்பதால் இன்ஜினியரிங் படிக்கும் தனக்குப் படிப்பில் நாட்டமில்லை” என்று ஒரு மாணவி தெரிவித்தார்.
அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ” உங்கள் கனவு நிறைவேற, அதன்பின்னே தொடர்ந்து செல்லுங்கள். அதன்பின் பெற்றோரிடம் பேசி, அவர்கள் ஆதரவுடன் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.
‘ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்’ என்று ராகுல் காந்தி கூறியிருப்பது, தமிழ் மக்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையை உயர்த்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
7 பேர் விடுதலை விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராகுலின் இந்த கருத்து, அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது,” 7 பேரை விடுதலை செய்துவிட்டால், கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் அனைவரையும் விடுதலை செய்துவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மேலும் கூறும்போது, ” ராஜிவ் கொலையாளிகள் 7 பேரும் அரசியல் ரீதியாக விடுதலை செய்யப்படுவதைத் தான் எதிர்க்கிறோமே தவிர, நீதிமன்றம் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் வரவேற்போம்” என்று தொண்டர்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.