கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணிக்காமல் தவறான அணுகுமுறையை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக இதோ காரணங்கள் :
- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
- பதிவு செய்துள்ளவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு போடுமா ? மாநில அரசு போடுமா ? 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தான் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி போடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏன் முன்பதிவு செய்கிறது ?
- முன்பதிவை மத்திய அரசு செய்தால் மாநில அரசு எந்த வகையில் தடுப்பூசி போட முடியும் ? கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது ?
- கொரோனா தொற்றின் ஒருநாள் எண்ணிக்கை 3.8 லட்சம். ஒருநாள் இறப்பு மூன்றாவது நாளாகத் தொடர்ந்து 3 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலகத்தில் கொரோனாவினால் இறப்பவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர். உலக நாடுகளில் இந்தியா கொரோனா இறப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.
- கொரோனாவிலிருந்து மக்கள் உயிரைக் காக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 186 கோடி டோஸ்கள் தேவை.
- தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதோ மாதத்திற்கு 1.20 கோடி டோஸ்கள் மட்டுமே. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 35 கோடி மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு 70 கோடி தடுப்பூசிகள் தேவை.
- தற்போது இந்தியாவில் 15 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1 டோஸ் போட்டவர்கள் 12.12 கோடி. இரண்டு டோஸ் போட்டவர்கள் 2.36 கோடி மட்டுமே.
- 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் போட தேவைப்படுகிற 186 கோடி தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு எப்போது கொள்முதல் செய்யப்போகிறது ? எப்போது போடப் போகிறது ? மக்களின் உயிரைக் காக்க ஒரே பாதுகாப்பு கவசமாக இருக்கிற தடுப்பூசி போடுவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் அல்லாமல் வேறு திறமைமிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை ?
- மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன் ? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால் தடுப்பூசி உற்பத்தியைக் கடந்தகால அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கி அம்மை, போலியோ, காலரா ஆகியவற்றை ஒழித்ததைப் போல இப்போதும் தடுப்பூசி உற்பத்தியை வழங்கி கொரோனாவை ஒழிப்பதில் ஏன் அக்கறை செலுத்தவில்லை ?
- இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
- 136 கோடி மக்களையும் ஒருசேர மரணப் பயத்தில் ஆழ்த்தியதற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பா.ஜ.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும் ?