நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி 10.8.2020 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்து செல்லும் போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (C.I.S.F.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியில் கனிமொழியிடம் கூறினார். ஆனால் கனிமொழி அவர்களோ, ‘எனக்கு புரியவில்லை, ஆங்கிலத்தில் அல்லது தமிழில் சொல்லுங்கள்” என்றார். இதையடுத்து அந்த பெண் அதிகாரி, ‘நீங்கள் இந்தியரா ?” என்று கனிமொழியிடம் கேட்டார்.
இதனால் கனிமொழி அதிர்ச்சி அடைந்து தமது உள்ளக் கிடக்கையை டிவிட்டர் பதிவில் கூறியிருந்தார். ‘இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போதிலிருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மொழி பிரச்சினை குறித்து தொடர்ந்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு பதில் கூறுகிற வகையில் இந்த கட்டுரை அமைந்துள்ளது.
இந்தியாவில் தேசிய மொழி என்று ஒன்று இல்லாத நிலையில், இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? பிராந்திய மொழிகளைத் தாண்டி இந்தி தேசிய மொழி அந்தஸ்தை பெற்றுள்ளதாக பலர் நம்புகிறார்கள். இந்தி படித்தால் சலுகை கிடைக்கும் என்று பல மாநிலங்களின் அரசியல் தலைமைகள் சொல்லி வந்ததால், அங்கு பள்ளிகளில் இருந்து இந்தி கற்பிக்கப்படுகிறது. இதனால் தான் இந்தி தேசிய மொழி என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.
தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழியின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், ” எனக்கு இந்தி தெரியாது என்று கூறினேன். அப்படி என்றால் நீங்கள் இந்தியராக இருக்க முடியாது என, விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் கூறினர்” என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கும் இதே அனுபவம் ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கூறியுள்ளார்.
இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில் தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், இந்தி தேசிய மொழியாக தொடரும் என்பது போன்ற கற்பனை நிறைந்த வார்த்தைகள் கலந்துள்ளன.
ஆனால், பா.ஜ.க – வோ, தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை தேர்தலை மனதில் வைத்து, தமிழகத்தின் மற்ற தலைவர்கள் போல் கனிமொழியும் இந்தி பிரச்சினையை பூதாகரமாக்குவதாக கூறியுள்ளது.
தேசிய மொழி தொடர்பான விவாதங்களில், உண்மையான பதிலை எதிர்பார்த்து அடிக்கடி எழுப்பப்படும் சில கேள்விகள் இங்கே…!
இந்தி தேசிய மொழியா, இல்லையா?
இல்லை. நிச்சயமாக இல்லை. இந்திய அரசியல் சாசனத்தின் 343 -வது பிரிவின் கீழும், சமீபத்திய சட்ட திருத்தத்தின் கீழும் ஆங்கிலத்துடன் இணைந்து இந்தியும் அலுவல் மொழியாகத்தான் உள்ளது. இந்தியாவில் தேசிய மொழியே கிடையாது.
நல்லது. அப்படியிருக்கும் போது அலுவல் மொழி என்றால், தேசிய மொழி என்று மட்டும் அர்த்தம் ஆகுமா, இல்லையா?
இல்லை. அரசு பயன்படுத்தும் மொழிதான் அலுவல் மொழி. மாநிலங்கள் அவர்களுக்குரிய மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம். தமிழ் நாட்டின் அலுவல் மொழி தமிழ். மேற்கு வங்கத்தில் வங்காள மொழி அலுவல் மொழி. ஆங்கிலத்தைப் போல் இந்தியும் அலுவல் மொழிதான். அது தேசிய மொழி அல்ல.
ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மக்களின் தாய் மொழியாக இந்தி இருக்கிறதே, அதனை ஏன் தேசிய மொழி என்று அழைக்கக் கூடாது?
இல்லை. இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் தாய் மொழி இந்தி அல்ல. (எல்லா பதில்களும் ஆரம்பத்தில் இருந்து ‘இல்லை’ என்று முடிவதை கவனிக்கவும்). இந்தியாவின் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 43.63 சதவீதத்தினர் இந்தியை முதல் மொழியாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், பெரும்பாலோர் இந்தி பேசுவதாக அர்த்தம் கொள்ளப்பட்டது. வங்காள மொழி 8.3 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தில் வந்தாலும், அது பெரும்பான்மையோர் பேசும் மொழியாக இல்லை.
ஒரு மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களில் எவ்வளவு பேர் மற்ற இந்திய மொழிகளை கற்க விரும்புகிறார்கள்? அவர்கள் அவ்வாறு செய்தால், மற்ற மொழிகளை பேசுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இந்தி வேகமாக வளர்ந்து வரும் மொழி என்று கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. தென் இந்திய மொழிகள் உள்ளிட்ட பல பிராந்திய மொழிகளை இந்தி பேசும் மக்கள் கற்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தியை தாய் மொழியாகக் கொண்டோர் வேறு மொழியை கற்காத போது, வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டோர் இந்தியை கற்கவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
இருந்தாலும், இன்று வரை அது அழகிய மொழி தானே?
அநேகமாக இந்தியாவில் உள்ள பல மொழிகள் அழகானவை தான். எனினும், ஒரு மொழியை திணிப்பது தேவையற்றதும் அசிங்கமானதும் ஆகும்.
எல்லா மாநிலத்தவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய பொதுவான மொழி நமக்கு அவசியமில்லையா?
எந்த மாநிலத்தில் என்ன மொழி பேசப்படுகிறது என்பதைப் பொறுத்தது அது. தமிழ் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலையாளிகளும், ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழர்களும், இந்தி தெரிந்திருந்தால் ஒரு பயனும் இல்லை. அசாமில் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழி வங்காள மொழி. கோவாவில் கொங்கனி பெரும்பாலோரால் பேசப்படுகிறது. அதற்கடுத்து மராத்தியும் பேசப்படுகிறது. கேரளாவில் மலையாளத்துக்குப் பிறகு தமிழ், துளு, கன்னடம் மற்றும் கொங்கனி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மாநிலங்களில் இந்திக்கு வேலையே இல்லை. ஒரு மொழி தெரியாவிட்டால், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு பயணம் செய்ய முடியாது என்ற வாதம் ஏற்புடையதல்ல.
இந்தி கற்பதால் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதா?
இந்தியை மீண்டும் திணிப்பதற்காக இதுபோன்று சொல்லப்படுகிறது. இந்தியை திணிப்பதையும், வேலை வாய்ப்பையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தக்கூடாது. புலம்பெயர் தொழிலாளர்களும், பெரிய பதவி வகிப்போரும் வேறு மாநிலத்துக்குச் செல்லும் போது, அங்குள்ள மொழியை கற்கின்றனர். கேரளாவில் பணியாற்றும் மேற்கு வங்க மாநிலத்தவருக்கு, மலையாள மொழியை அம் மாநில அரசே கற்றுத் தருகிறது.
அதேபோல், இந்தியாவில் மட்டும் தமிழ் மொழி பேசுவதில்லை. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி மற்றும் மொரீஷியஸ் நாடுகளிலும் தமிழ் பேசப்படுகிறது. அதற்காக, இந்தி பேசுபவர்கள் தமிழ் கற்றால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறினால் சரியான தர்க்கமாக இருக்குமா?
இந்தியை எதிர்த்தால், இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானது என்று கூறுவது சரியா?
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான் இந்தியாவின் அடிப்படைத் தத்துவம். நமது வேறுபாடுகளை அறிவோம். அதற்கேற்றாற்போல் செயல்பட முடிவு செய்ய வேண்டும். இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை ஒரேமாதிரியாக கையாள முடியாது. எனவே இந்தியாவில் பொதுவான மொழி அவசியம் இல்லை.
உலகிலேயே பழமையான சமஸ்கிருதத்தில் இருந்து இந்தி மொழி வந்துள்ளது. அதை ஏன் நீங்கள் படிக்க மறுக்கிறீர்கள்?
எது பழமையான மொழி, தமிழா? சமஸ்கிருதமா? பல ஆண்டுகளாகவே இந்த விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் கூற்றுப்படி, சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழியே பழமையானது. இப்படி இருக்கும் போது ஒன்றும் இல்லாத இந்தியை அவரது கட்சியினர் தூக்கிப் பிடிப்பது மர்மமாக உள்ளது.
நீங்கள் கூறுவதில் நியாயம் இல்லையே?
எல்லா கேள்வி, பதில்களையும் மீண்டும் படியுங்கள். யார் நியாயமற்றவர் என்பது தெரியும்.