திடீரென பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகள்…
இப்படிப் பல பிரச்சினைகளால் பீகார் மக்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான், சட்டப்பேரவை தேர்தல் வந்தது. மத்தியில் ஆளும் பாஜக கட்சியும், மாநிலத்தில் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியாகக் களம் கண்டன. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மகா கூட்டணியாகக் களம் கண்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்பதற்கான காரணங்கள் ஆயிரம் உண்டு. ஆனால், வெற்றி பெறுவதற்கான காரணம் ஒன்றுகூட இல்லை. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாயிற்று ?
கடந்த 2006 ஆம் ஆண்டு நெல் மற்றும் கோதுமையைப் பீகார் மாநிலம் பெருமளவு கொள்முதல் செய்தது. இத்தகைய கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கான விலை தருவதில் தாமதம் செய்யப்பட்டது. இதனால், நெல், கோதுமை, சோளம் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களை இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் விற்க ஆரம்பித்தனர். விவசாயிகளின் இத்தகைய அவலநிலை ஏன் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக எதிரொலிக்கவில்லை என்ற கேள்வி இன்று தானாகவே எழுகிறது.
பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் செயல்படும் ராஷ்ட்ரீய கிஷான் சபாவின் தலைவர் ராமஷிஷ் ராய் கூறும்போது, பீகார் தேர்தல் சாதி அடிப்படையில் நடந்ததாகக் குறிப்பிட்டார். பீகார் சிறு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.என்.சிங் கூறும்போது, ”ஒரு குவிண்டால் அரிசியை ரூ.800 முதல் ரூ.1,100 க்கு வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு விற்குமாறு பீகார் விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். கொள்முதல் முறையை கடைப்பிடிக்கவில்லை” என்றார்.
வீழ்ந்துபோன பீகார் :
- பீகாரில் கோதுமை கொள்முதல் இந்த ஆண்டு 7 லட்சம் டன் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், உண்மையான கொள்முதல் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதாவது 5 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் இருந்தது. 2015-2016 ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோதுமை கொள்முதல் மையங்கள் இருந்தன. ஆனால், 2019-20 ஆம் ஆண்டில் 1,619 ஆக குறைந்தது.
- மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 10 லட்சம் பேருக்கு பணி உறுதி அட்டை வழங்கப்பட்டது. ஆனால், 2,132 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலை தருவதற்குப் பதிலாக, 7 நாட்கள் மட்டுமே வேலை தரப்பட்டது.
- பீகார் மாநிலத்தில் 36 சதவீத குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 62 சதவீதம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி படிக்கும்போதே, படிப்பை தொடராமல் வெளியேறிவிட்டனர். கற்றோர் மிக குறைவாக 61.8 சதவீதம் மட்டுமே உள்ளது.
- பீகார் மாநிலத்தில் 43 ஆயிரத்து 777 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்பது விதி.
- பீகார் மாநிலத்தில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 602 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
- பீகாரில் உள்ள எந்த பல்கலைக்கழகமோ, கல்லூரிகளோ நாட்டில் முதல் இடத்தைப் பிடித்தது இல்லை.
- கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டம் 46.6 சதவீதமாக இருந்தது. படித்துவிட்டு வேலையில்லாமல் 17.5 சதவீதம் பேர் உள்ளனர்.
இப்படி, அனைத்து தரப்பு மக்களும் பிரச்சினைகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாநிலமாக பீகார் திகழ்கிறது. இப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் பீகார் மக்கள் வாக்களித்தார்கள்?
பீகார் மக்களைக் குறைசொல்ல முடியாது. பாஜகவின் ‘பி’ டீமாக செயல்பட்ட அகில இந்திய மஜ்லீஸ் இ இட்டேஹாட் உல் முஸ்லீமின் தலைவர் அசாதுதீன் ஓவாய்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். ‘யூ டூ ப்ரூட்டஸ்?’ என்ற ஜுலியஸ் ஜீஸரின் கடைசி வார்த்தைகளைத் தான், அவரை நோக்கிக் கேள்வியாக எழுப்ப வேண்டியுள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தலைவர் சிவானந்த் திவாரி கூறும்போது, ”பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்பின் பி டீமாக ஓவாய்சி மாறவிட்டார். பீகாரில் மகா கூட்டணியைத் தோற்கடிக்க பாஜக பின்னே இருந்து கொண்டு செயல்பட்டுள்ளார். என்றைக்காவது ஓவாய்சியை சர்வாதிகாரி என்றோ, சமூக விரோதி என்றோ பாஜக-ஆர்எஸ்எஸ் கட்சியினர் என்றைக்காவது அழைத்திருக்கிறார்களா? பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தோற்கடிக்க முடியாது என்றும், ஆட்சி அமைக்க முடியாது என்றும் தெரிந்தும், பாஜகவை வெற்றி பெற வைக்கவே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வேட்பாளர்களை ஓவாய்சி நிறுத்தினார்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ஓவாய்சியை பாஜக பயன்படுத்திக் கொண்டது. வாக்கைப் பிரிக்கும் ஓவாய்சியிடமிருந்து வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இவர்கள் இருவரது கருத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே.
ஓவாய்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்திருந்தால், மகா கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகள் மாறியதற்கு இவையும் காரணம்:
1. குறைந்த வாக்கு வித்தியாச வெற்றி :
28 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 62 தொகுதிகளில் 2 ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 113 தொகுதிகளில் 3 ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
2. நிதிஷுக்கு பெண்கள் ஆதரவு ? :
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அமைதியாக இருந்த வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் நிதிஷ்குமாருக்கு வாக்களித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதன் உண்மைத் தன்மையை அறிய சரியான ஆய்வு தேவை.
3. யோகி-நிதிஷ்குமார் மோதல் நாடகம் :
முஸ்லீம்களை ஊடுருவல்காரர்கள் என்று 3 ஆம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். இதற்கு நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ”நீ அடிக்கிறது போல் அடி…நான் அழுவது போல் அழுகிறேன்…” என்ற இவர்களது நாடகம் அவர்களது தொண்டர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறது.
4. இடதுசாரிகளில் எழுச்சி :
2015 ஆம் ஆண்டு சிபிஎம் (எம்எல்) 3 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 19 தொகுதிகளில் 12 தொகுதிகளில் இந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் இணைந்து போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். நக்சல்கள், மாவோயிஸ்ட்கள், நகர நக்சலைட்கள் என தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கடுமையாக விமர்சித்தும் இடதுசாரிகள் எழுச்சியைப் பெற்றுள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.
5. நாலாபுறம் சிதறிய வாக்குகள் :
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணிக்கு 37 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் 25 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. எந்த ஓர் அரசியல் கட்சியும் 25 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.
6. சாதியே இன்னும் ராஜா :
தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, சாதி வாக்குகளே வெற்றியை நிர்ணயிப்பது புரிகிறது. பின்தங்கிய வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை நிதிஷ்குமாரும், உயர் சாதியினர் வாக்குகளை பாஜகவினரும் கவர்ந்துள்ளனர். ராஷ்ட்ரீய ஜனதாவுக்கு முஸ்லீம் மற்றும் யாதவ் வாக்குகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
7. ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்காலம் :
இந்த தேர்தல் தமக்குக் கடைசி தேர்தல் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். இதுவரை இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் தென்படவில்லை. கட்சியின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நிதிஷ்குமார் இல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தாக்குப் பிடிக்குமா? என்பது சந்தேகமே.
புது அவதாரம் எடுத்த தேஜஸ்வி யாதவ்
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மை கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உருவெடுத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட, அதிகமான வாக்குகளைத் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெற்றுள்ளது.
தங்களது வாக்கு வங்கியான முஸ்லீம்கள் மற்றும் யாதவர்கள் வாக்குகளை மட்டுமின்றி, பல தரப்பிலிருந்தும் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் வாக்குகளைப் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அரசியலில் புதிய ஹீரோவாக தேஜஸ்வி அவதாரம் எடுத்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும் எதிர்க்கட்சியாக அமரப் போகிறது. இரண்டாவது தனிப் பெரும் கட்சியான பாஜக, மூன்றாவது தனிப்பெரும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தரப்போகிறது. இதுபோன்ற அரசியல் கூத்துகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல.
பீகாரில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஓவாய்சி போன்றவர்கள் கைக்கூலியாக மாறிய நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இல்லையில்லை…பீகார் மக்களைத் தோற்கடித்துள்ளது.