அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்யக் கோரி, 2020 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் காட்ஸே தொடர்ந்த வழக்கில் தான் மேற்கண்ட கருத்தை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ். ஷிண்டே மற்றும் மணிஷ் பிட்டாலே ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
” நீதித்துறை, ஆர்பிஐ, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இந்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படாவிட்டால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்…”
-மும்பை நீதிமன்றத்தில் முக்கியமான கருத்து மட்டுமல்ல…இது எச்சரிக்கையும் கூட. இந்த வழக்கில் நீதிபதிகள் இந்த அளவுக்கு வேதனையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
தொடர்ந்து படியுங்கள்…
அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு நிலுவையில் உள்ளவரை, இடைக்காலத் தடை கேட்டார் காட்ஸே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆபாத் பாண்டா.
ஜனவரி 25 ஆம் தேதி திங்கட்கிழமை வரை, காட்ஸே மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், திங்கட்கிழமையையும் தாண்டி மனுதாரருக்குக் கால அவகாசம் ஏன் தரக்கூடாது என்று அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் சில நாட்களுக்கு நடவடிக்கையைத் தள்ளிவைத்தால், ‘வானம் இடிந்து கீழே விழுந்துவிடவா போகிறது’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதெல்லாம், மனுதாரர் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ” விசாரணைக்கு ஒத்துழைத்த ஒருவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அணில் சிங், ” காட்ஸேயின் மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருவதற்கான காரணத்தை அடுத்த கட்ட விசாரணையின்போது விளக்குகிறேன்” என்றார்.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதி திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.