புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
கடந்த 1962 ஆம் ஆண்டு இந்தியாவுடன் புதுச்சேரி இணைக்கப்பட்டபோது, சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் புதுச்சேரி கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு தனியாக உயர்நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த தகவல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டதோடு, புதுச்சேரியில் உயர்நீதிமன்றம் அமைக்க புதுச்சேரி பார் அசோஷியேசன் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான சட்டப் பணிகள் மறறும் வாகன விபத்து குறைதீர்வு பிரிவின் மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மதுரையைப் போல் புதுச்சேரியிலும் சென்னை உயர்நீதிமன்ற கிளையை அமைக்கலாம் என்ற யோசனையையும் தெரிவித்தார். இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவையும் அவர் கோரினார்.
ஒரு மாநிலத்தில் உயர்நீதிமன்றம் அமைக்கப்படும் போது, உயர்நீதிமன்றத்துக்கான நிர்வாகச் செலவை மாநில அரசின் தொகுப்பு நிதியில் இருந்துதான் வழங்க வேண்டும். அந்த வகையில், தமிழக அரசுடன் சேர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசமும் பெரும் தொகையை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு செலவு செய்கிறது.
அதேசமயம், யூனியன் பிரதேசத்தில் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டால், அதற்கான நிர்வாகச் செலவு மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும். அப்போது புதுச்சேரிக்கு நிதிச்சுமை குறையும். இதன் காரணமாகவே, புதுச்சேரிக்கு தனியாக உயர்நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
சிக்கிம், மணிப்பூர் மற்றும் கோவா உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கை விட, புதுச்சேரியில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் 4 மடங்கு அதிகம்.
புதுச்சேரியில் இருந்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும், பைசல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் மேற்கண்ட 3 மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களை விட அதிகமாக இருப்பதால், புதுச்சேரிக்கு தனியாக உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் புதுச்சேரி வழக்குரைஞர்கள்.
மேலும், உயர்நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக குழு அமைத்து அதன் அறிக்கையையும், உத்தேச சட்ட முன் வடிவையும் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்தே செயல்பட வேண்டும் என்றும் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.