உலகத்தில் உள்ள எந்த அரசாலும் உண்மைக்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க முடியாது: ராகுல் காந்தி
மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் ராமலீலா மைதானத்தில் பேரணி நடத்துவதற்காக டிராக்டர்கள் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் பெருந்திரளாக பங்கேற்று பா.ஜ.க. அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முற்பட்டுள்ளனர்.
‘தில்லி சலோ’ என்ற முழக்கத்துடன் சென்ற பஞ்சாப் மாநில விவசாயிகளின் பேரணியை, அரியானா மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு காவல்துறையின் மூலம் தடுத்து வருகிறது. இவர்களை தில்லியை நோக்கி செல்ல விடாமல் தடுப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீச்சி அடித்தும் கலைந்து போகிற வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடுப்பு வேலிகளை வைத்து சாலைகளை அடைத்துள்ளனர். பெருமளவில் காவல்துறையினரை குவித்து வைத்து விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அரியானா மாநிலம் வழியாக தலைநகர் தில்லிக்கு போக விடாமல் பலவழிமுறைகளை கையாண்டு தடுத்து வருகின்றனர்.
அரியானா காவல்துறையினரின் தடுப்பு வேலிகளை தூக்கியெறிந்துவிட்டு, தடைகளை மீறி விவசாயிகள் தில்லி சலோ என்ற முழக்கத்துடன் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தடைகளை மீறி அரியானா எல்லைக்குள் புகுந்து தில்லியை நோக்கி தங்களது பேரணியை தொடர்ந்துள்னர். தலைநகர் தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி, மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்தை திரும்பப் பெறுகிற வரை வீடு திரும்ப மாட்டோம் என்பதில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் அரியானா, தில்லி மாநில காவல்துறையினர் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இதன்மூலம் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்ப்பை பா.ஜ.க. பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையேற்று நடத்தியது விவசாயிகள் மத்தியில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் பாதுகாவலனாக அவர் விளங்கி வருவது போராட்டம் நடத்துகிற விவசாயிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில விவசாயிகள் தலைநகர் தில்லி பேரணியில் கலந்து கொள்ளாமல் தடுப்பதற்கு காவல்துறை மூலம் தடைகளை ஏற்படுத்தி வருகிற அரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டாருக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக பஞ்சாப்பில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரியானா அரசு படைகளை ஏவி ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது ஏன்? ஒரு பொது நெடுஞ்சாலை வழியாக விவசாயிகள் அமைதியாக கடந்து செல்ல அவர்களுக்கு உரிமை இல்லையா?
அரியானாவின் கட்டார் அரசு விவசாயிகள் டெல்லி செல்வதை ஏன் தடுக்கிறது? அமைதியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது படைகளை பயன்படுத்தி கடுமையாக நடந்திருப்பது ஜனநாயக விரோதமானது மட்டுமின்றி அரசியல் சட்டத்துக்கு எதிரானதும் ஆகும். விவசாயிகளின் உரிமை இவ்வாறு சிதைக்கப்பட்டிருப்பது, அரசியல்சாசன தினத்தில் நடந்திருக்கும் மோசமான நிகழ்வாகும். டெல்லியில் அவர்கள் தங்கள் குரலை எழுப்புவதற்கு விட்டு விடுங்கள். பா.ஜனதாவின் மாநில அரசுகள் இத்தகைய கடுமையான போக்கை கடைப்பிடிப்பதை விட்டுவிடச்சொல்லி கட்சித்தலைமை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் விவசாயிகள் தங்களுக்கு எதிராக மோடி அரசு இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து உறுதியுடன் போராடுகின்றனர்’ என்று கூறி விவசாயிகளின் போராட்ட வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்தது முதற்கொண்டு விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2014 முதல் 2016 வரை விவசாயிகள் போராட்டம் 628 ஆக இருந்தது, தற்போது 4837 ஆக உயர்ந்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் விவசாயிகள் போராட்டம் பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய நரேந்திர மோடி, கடந்த ஆறு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கொடுத்த வாக்குறுதிகளை புறக்கணிக்கிற வகையில் விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய வேளாண் சட்டங்கள் மூலம் பறித்திருக்கிறார். விவசாயிகளின் விளை பொருட்களை மத்திய அரசே முடிவு செய்வதற்கு மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்கிற உரிமையை நரேந்திர மோடி அரசு வழங்கியிருக்கிது. இதை எதிர்த்து தான் பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டு கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் தில்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு தில்லிக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் நடத்துகின்றன. விவசாயிகளுக்கு எதிரான காவல்துறையினரின் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை மீறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக விவசாயிகளின் தில்லி சலோ பேரணி மீண்டும் தொடங்கப்பட்டது. பஞ்சாப் விவசாயிகளுடன், அரியானா விவசாயிகளும் இணைந்ததால் அவர்களை தடுத்து நிறுத்த காவல்துறையினரால் முடியவில்லை. நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு தில்லிக்குள் நுழைந்து விட்டனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து விவசாய சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற வகையில் உறுதிமொழி அளித்தாலொழிய விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. விவசாயிகளுடைய வலிமை எத்தகையது என்பதை மத்திய பா.ஜ.க. அரசுக்கு உணர்த்துவதில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதுதிலும் உள்ள விவசாயிகள் எழுச்சி பெற்று பஞ்சாப் விவசாயிகளை பாராட்டி வருகின்றனர்.
2017 மார்ச் மாதம் 41 நாட்கள் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு நூதன போராட்டங்களைநடத்தி வந்தனர். அவர்களது கோரிக்கை விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். நரேந்திர மோடி ஆட்சி செய்யும் அலுவலகத்திற்கு மிகமிக அருகாமையில் இரவு, பகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்க மனமில்லாத கொடிய இரக்க குணம் படைத்த பிரதமராக நரேந்திர மோடி விளங்கி வருவதை அறிந்து விவசாயிகள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. இந்த நடவடிக்கையின் மூலமாக விவசாயிகள் மத்தியில் நரேந்திர மோடி கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருப்பதை எவரும் மறுக்க இயலாது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகிற பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய பா.ஜ.க. அரசு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்த அ.தி.மு.க.அரசு மீதும் தமிழக விவசாயிகள் கடும் கோபத்துடன் இருப்பதை காண முடிகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்டமாக போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விவசாயிகள் மாநாடு, தேனியில் ஏர் கலப்பை பேரணி, கோயம்புத்தூரில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு மற்றும் மாபெரும் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துகிற வகையில் நடைபெற்று வருகின்றன.
அடுத்தகட்டமாக, இத்தகைய போராட்டங்கள் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக ஏர் கலப்பை பேரணி நடைபெற உள்ளது. தமிழக மக்களின் நலன் சார்ந்தும், அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் எந்த வகையிலும் செயல்படாத தமிழக பா.ஜ.க., மதவெறி அரசியலை நடத்தி, மக்களை பிளவுபடுத்துவதற்காக வேல் யாத்திரை நடத்தி வருகிறது. தமிழக பா.ஜ.க.வின் மக்கள் நலனில் அக்கறையில்லாத நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கிற இயக்கமாக தமிழக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் கடுமையான போராட்ட வியூகத்தின் அடிப்படையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு இணையாக தமிழக விவசாயிகளின் எதிர்ப்பு குரல் தலைநகர் தில்லியில் ஒலிக்கிற வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்காக போராட்ட வியூகத்தை தமிழக காங்கிரஸ் கட்சி வகுத்து செயல்பட்டு வருவதற்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. இது விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கிற நடவடிக்கையாக கருதப்படுகிறது.