இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைப் பார்த்தால், விரைவில் உலகின் முதல் இடத்தை பிடித்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 20 ஆம் தேதி வரை கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 11 லட்சத்து 52 ஆயிரத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தொற்று எண்ணிக்கையும் தினந்நோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 34 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகி, 20 லட்சத்தை எட்டும் என்றும் தெரிகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோசமான மாநிலங்களில், டெல்லியில் பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கும், அதன்பின் கொண்டுவரப்பட்ட தளர்வும் நாடு முழுவதும் மக்களின் வாழக்கையில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
உயிரிழப்பு விகிதம் 3.9 சதவீதமாக இருப்பதாக கூறப்பட்டாலும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உண்மையான புள்ளிவிவரத்தை கண்டறிவதில் சிக்கல் உள்ளது.
25 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவிலேயே லட்சத்தீவில் மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்பில்லை. தற்போது சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் கொரோனா இல்லாத மாநிலங்கள் என அறிவிக்கப்பட்டன. எனினும், சிக்கிம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திருத்தப்படவேண்டிய தவறுகள்
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலியை பின்னோக்கி தள்ளிவிட்டு, கொரோனா பாதிப்பில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்போதும் நாம் தொடர்ந்து ஒரே தவறையே செய்து கொண்டிருக்கிறோம்.
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலியை விட நம் நாட்டில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு என அரசு தரப்பில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
நம்மைவிட குறைவான உயிரிழப்புகள் உள்ள தென் கொரியா, மலேசியா மற்றும் நியூசிலாந்துடன் ஏன் ஒப்பிடக்கூடாது? வியட்நாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் கூட உயிரிழக்கவில்லையே?
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கேரளாவைப் போல் ஒட்டுமொத்த இந்தியாவும் இல்லையே ஏன்? அங்கு வெறும் 40 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள். கேரளாவைத் தவிர, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பெரும் தவறை நாம் செய்து கொண்டிருக்கிறோம்?
கொரோனா தொற்று ஆரம்பித்தபோதே, பரிசோதனைகளை செய்ய நாம் தவறிவிட்டோம். இதன் காரணமாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் உயர்ந்து, அவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு பரவ காரணமாகியிருக்கிறார்கள். இப்போது அது லட்சமாக உயர்ந்திருக்கிறது. இன்றைக்கும் நமது பரிசோதனை விகிதம், 10 லட்சம் பேருக்கு 10 ஆயிரம் பரிசோதனைகள் என்ற அளவிலேயே உள்ளது.
பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் தெலங்கானாவில் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால், தெலங்கானாவில் வெறும் 5 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று இந்த மாத மத்தியில் 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு நிபந்தனை தளர்வுக்குப் பிறகு, ஏழை,எளிய மக்கள் அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக வெளியே வரத் தொடங்கினார்கள். இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் , பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததும், முகக்கவசம் அணியாததும் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. இதற்கான விழிப்புணர்வையோ, நடவடிக்கையையோ எடுக்க அரசு தவறிவிட்டது.
இத்தகைய தவறுகளை திருத்திக் கொண்டால் மட்டுமே, கொரோனா தொற்று எண்ணிக்கையையும், உயிரிழப்பையும் குறைக்க முடியும் என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
விளக்கேற்றினோம், கைகளை தட்டினோம். இருந்தும், கொரோனா தொற்றை தடுக்க முடியவில்லை. இனியாவது ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கையாண்டு, குதிரை வேகமெடுக்கும் கொரோனா தொற்றுக்கு அரசுகள் கடிவாளம் போட வேண்டும்.
மிகத்தெளிவான பதிவு, ஆனால் குதிரை வேகமெடுக்கும் கொரானாவிற்கு கடிவாளம் போடமாட்டார்கள்.