”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை கூறும்போது, அதனை ஏற்று செயல்படுங்கள்” என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ” கொரோனா போன்ற முன் எப்போதும் இல்லாத சுகாதாரப் பிரச்சினையை நாடு எதிர்கொள்ளும் போது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற மோடி அரசு தவறிவிட்டது.
இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஒட்டுமொத்த நாடே ஓரணியில் நின்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய ஆலோசனைகளை பிரதமர் மோடி ஏளனம் செய்தார்.
இனிமேலாவது மக்கள் பிரச்சினையில் சோதித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மக்களோடும் எதிர்கட்சிகளோடும் அவர் இணைந்து செயல்படவேண்டும். பாகிஸ்தானின் உளவுத்துறையினருடன் கூட மத்திய பா.ஜ.க. அரசு பேச தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுடன் பேச அவர்கள் தயாராக இல்லை.
இன்றைக்கு எந்த எதிர்க்கட்சித் தலைவரும் நேர்மறையான, வலுவான ஆலோசனை தரமாட்டார் என்பதை நான் நம்பவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறுகின்றன.
மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவர் எந்த அளவுக்கு கண்ணியமான மனிதராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்ற அவர், அதே கண்ணியத்துடன் அவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்.
முன்னாள் பிரதமர் எழுதும் கடிதத்துக்கு அமைச்சர் மூலம் பதில் அளிக்கச் செய்து, சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டு நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது.
பிரதமருக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், ”கொரோனா தடுப்பூசி போடுவதில் ஏற்படும் பதற்றத்தைத் தடுத்து, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளைப் போடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், சில ஆலோசனைகளையும் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், ”அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியினர் மன்மோகன் சிங்கின் ஆலோசனை கேட்டாலே அது வரலாறு” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவது குறித்துத் தான், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
2021 ஜனவரி முதல் மார்ச் வரை 6 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, மக்களுக்கு இழைத்த துரோகம். அதே காலகட்டத்தில், இந்திய மக்களுக்கு 3 முதல் 4 கோடி வரை தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டன.
இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? இந்த நாட்டைப் பயன்படுத்தி பிரதமர் மோடி சுயவிளம்பரம் தேடுவது ஏன்? 22 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. இன்றைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகளே காரணம் என, பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மருந்துகள் தேவை மற்றும் வினியோக விஷயத்தில், அவர்கள் மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அரசியல் பேரணியை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரதமரிடம் ஒருவர் எதை எதிர்பார்க்க முடியும். கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட, மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஆளும் பா.ஜ.கவினர் ஆர்வம் காட்டினார்கள்.
இன்றைக்கும் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கதறுகிறார்கள். உதவி கேட்டு அழுகிறார்கள். ஆக்ஸிஜன், படுக்கைகள், மருந்துகள் கேட்கிறார்கள். நீங்களோ, பெரிய பேரணிகளை நடத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி உங்களால் முடிகிறது?
இந்த விஷயத்தில் நான் அரசியல் செய்வதாக பா.ஜ.க. கூறுகிறது. இந்த விஷயத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கொரோனாவின் இரண்டாவது அலையோடு நாடு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ மக்கள் மீது அக்கறை இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டினால் அரசியலா?” என்றார்.