தலைமைக்கு எதிராக கடிதம் அளித்த அதிருப்தியாளர்களை தண்டிக்காமல், மூத்த கட்சியினர் மற்றும் இளைஞர்களுக்கு பதவிகளில் சமநிலையை ஏற்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக, ‘டெலிகிராப்’ பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.
அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்தபின், கட்சி அமைப்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாற்றம் செய்துள்ளது. நிர்வாகிகள் நியமனத்தின் போது, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும், மூத்த தலைவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களையும் அரவணைத்து செல்ல சோனியா காந்தி முயற்சித்திருக்கிறார்.
எதிர்த்து கேள்வி கேட்டதால், பழிவாங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழாத வகையில், கட்சி அமைப்பை சோனியா காந்தி மாற்றியமைத்துள்ளார்.
பல ஆண்டுகளாக கட்சி அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த தம்மை, அதிலிருந்து விடுவிக்குமாறு குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். அவர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இது, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாகும்.
அதேபோல், கட்சித் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேரில், ஆனந்த் சர்மா மற்றும் முகுல் வாஷ்னிக் ஆகிய இருவரும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
கடும் அதிருப்தியாளர் என்று விமர்சிக்கப்பட்ட வாஸ்னிக், காங்கிரஸ் தலைவருக்கு உதவும் சிறப்புக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அறிவுப்பூர்வமாக செயல்படுவதையே இந்த நியமனம் காட்டுகிறது. இந்த குழுவில் ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், அம்பிகா சோனி, வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் உயர்மட்ட பொறுப்பில் பட்டேல் தொடர்வது, ராகுல் காந்தி பாதுகாப்பாக செயல்படுவதையே காட்டுகிறது.
சச்சின் பைலட்டுக்கு எந்த குழுவிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடிதத்தில் கையெழுத்திட்ட கபில் சிபல், சசி தரூர், மணீஷ் திவாரி மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இடம் பெறவில்லை. இளம் தலைவரான மிலிண்ட் தியோராவும் இடம்பெறவில்லை.
கட்சி அமைப்பு மாற்றியமைக்கப்பட்டதில், இரட்டிப்பு பலன் அடைந்தவர் ரன்தீப் சுர்ஜேவாலாதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டியில் இடம் பெற்றதோடு, கர்நாடகா மாநில பொறுப்பாளர் என்ற பொறுப்புடன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, பெரிய அளவில் பலன் அடைந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் பவன் பன்ஸால். மோதிலால் வோரா வகித்து வந்த கட்சி நிர்வாகப் பொறுப்பு இவருக்கு கிடைத்துள்ளது. மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டியில் நிரந்தர அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிகாரம் மிக்க காங்கிரஸ் காரிய கமிட்டியில், மிகவும் அனுபவமும் சுறுசுறுப்பும் உள்ளவர்கள் மட்டுமே நிரந்தர அழைப்பாளர்களாக சேர்க்கப்படுவார்கள். நிரந்தர அழைப்பாளர்கள் பட்டியலில் திக்விஜய சிங், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே, காங்கிரஸ் காரிய கமிட்டியில் நிரந்த அழைப்பாளராக இருந்த ப.சிதம்பரம், தற்போது, காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராகியிருக்கிறார்.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த தாரிக் அன்வருக்கு, கேரள பொறுப்பாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல், பொதுச்செயலாளர் பதவியுடன் கூடிய மகாராஷ்ட்ரா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் உயர்மட்ட அமைப்பில், பாகுபாடு இன்றி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனம், மூத்தவர்களுக்கோ, இளைஞர்களுக்கோ பாரபட்சமானதாக இல்லை.
அதேசமயம், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயல் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு, கோவா மற்றும் புதுச்சேரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணிக்கம் தாக்கூர் தெலங்கானா பொறுப்பாளராகவும், தேவேந்திர தாகூர் உத்தராகண்ட் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மல்லிகார்ஜுன் கார்கே, லூய்சின்ஹோ பலேரோ மற்றும் வோரா ஆகியோர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கவுரவ் கோகாய், ஆஷா குமாரி, அனுராக் நாராயண் சிங் மற்றும் ஆர்.சி. குந்தியா ஆகியோருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
தலைமைக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்ட இளம் தலைவர்களில் ஒருவரான ஜித்தின் பிரசாதாவுக்கு மேற்கு வங்கத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.