பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் :
அன்புள்ள பிரதமருக்கு,
மீண்டும் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருப்பது குறித்த மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த ஓராண்டாக நம் நாடு பேரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் தியாகங்களை மக்கள் செய்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு நாம் ஆளாகியுள்ளோம்.
கொரோனா வைரசுக்கு தீர்வு காண நமது விஞ்ஞானிகள் சமூகத்தினரும் மருந்து வினியோகஸ்தர்களும் உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் மோசமான செயலாக்கம் மற்றும் மேலோட்டமான நடவடிக்கையால் அவர்களது பணி குறைத்து மதிப்பிடப்படுவது துரதிருஷ்டவசமானது.
நமது நாட்டின் தற்போதைய சூழல் குறித்த முக்கிய அம்சங்கள்:
- கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா தான் முதலில் கண்டுபிடித்தது. ஆனால், தடுப்பூசி போடுவதில் நாம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை வடிவமைத்து, அதனை அனுபவத்தின் மூலம் இந்தியா செயல்படுத்தியது. தற்போதைய சூழலில், கடந்த 3 மாதங்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ளோம். நம் நாட்டின் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.
- இதே விகிதாச்சாரத்தில் நாம் தடுப்பூசி போட்டால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் பேரழிவு ஏற்படுவதோடு, இந்திய பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். பெருமளவில் கொரோனா தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏன் ஏற்றுமதி செய்தது என்பதற்கான தெளிவான விளக்கம் தரப்படவில்லை. நம் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும்போது, 6 கோடிக்கு அதிகமான தடுப்பூசி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குற்றம் சாட்டுவதால், தடுப்பூசி பற்றாக்குறை திரும்பத் திரும்ப அந்த மாநில அரசுகள் சுட்டிக்காட்டுகின்றன. கூட்டுறவு கூட்டாட்சி மிகவும் அவசியம் என்று நீங்கள் கூட சொல்வீர்களே, அதே கூட்டுறவு கூட்டாட்சியை வேரோடு வெட்டும் செயல் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- சொந்த நாட்டு மக்களைப் பாதிப்படையச் செய்து, விளம்பரத்துக்காக அரசு பல முடிவுகளை எடுத்ததே, அதைப் போன்று தான் தடுப்பூசி ஏற்றுமதியும் நடந்ததா?
- மையப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சாரம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. பொதுச் சுகாதாரம் மாநில அரசுகளின் வரையறைக்குட்பட்ட. தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதற்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசே அதனை நேரடியாகச் செய்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையம் வழியே பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதால், பெரும்பாலான ஏழைகள் அவ்வாறு செய்ய முடியாமல் போனது.
கடந்த 70 ஆண்டுகளாக தடுப்பூசி மையங்களை அமைப்பதில் உலக அளவில் இந்தியா சிறந்து விளங்கியதற்காகக் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது. இதன்மூலம் நன்கு திட்டமிட்டு தடுப்பூசி திட்டத்துக்கு ஆதரவளித்து, விரைந்து தடுப்பூசிகளைப் போட்டோம்.
தனிப்பட்ட நபருக்கான தடுப்பூசியாக இல்லாமல், பெருவாரியான மக்களுக்கான தடுப்பூசியாகக் காங்கிரஸ் ஆட்சியில் மாற்றினோம்.
எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வது இதுதான்:
- உற்பத்தித் திறனை அதிகரிக்க, தடுப்பூசி வினியோகஸ்தர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும்.
- கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு உடனே தடை விதிக்க வேண்டும்.
- நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, மற்ற தடுப்பூசிகளுக்கும் விரைந்து ஒப்புதல் தரவேண்டும்.
- ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும்.
- தற்போது ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதை மத்திய அரசு இரட்டிப்பாக்க வேண்டும்.
- தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதையும் விநியோகிப்பதையும் மாநில அரசுகளுக்குத் தருவதே சரியானது.
- இரண்டாவது கொரோனா அலையில் பாதிக்கப்படுவோருக்கு நேரடியாக வருவாய் ஆதாரத்தை அளிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் எங்களது ஏகோபித்த ஆதரவு உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். இந்த யோசனைகளை விரைந்து பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.