அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த 7 மாநில முதலமைச்சர்கள் கூட்டம், பா.ஜ.கவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதலமைச்சர் புபேஸ் பாகெல் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதுதவிர, யாரும் எதிர்பார்க்காத நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். மகாராஷ்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் ஷோரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அசத்திய சோனியா காந்தி
சோனியா காந்தி செயல்படவில்லை என்று 23 காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், 7 மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடந்தது. சோனியா காந்தி கூட்டத்தை நடத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது. உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும், நரேந்திர மோடி அரசுக்கு எதிராக போராடும் சரியான தலைமை ‘தான் மட்டுமே’ என்பதை வெளிப்படுத்தினார்.
மம்தா பானர்ஜிக்கு மரியாதை
காங்கிரஸ் கூட்டணியில் மம்தா பானர்ஜி அங்கம் வகிக்காத போதும், இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றது கூட்டத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மம்தாவுக்கு மரியாதை தரும் வகையில், அவரை முதலில் பேசுமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். மம்தா பேசி முடிந்ததும், கூட்டத்தை நடத்துமாறு அவரை சோனியா கேட்டுக் கொண்டார். அதனை மறுத்த மம்தா,. நீங்கள் மூத்த தலைவர். நீங்கள் இருக்கும் போது நான் எப்படி கூட்டத்துக்கு தலைமை தாங்க முடியும் என்று பதில் அளித்தார். சோனியா காந்தியின் புதிய முயற்சியை பாராட்டிய மம்தா, ராஜிவ் காந்தியையும் நினைவுகூர்ந்தார்.
நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு
”நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்” என அனைத்து முதலமைச்சர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ” இந்த சூழலிலும் தேர்வுகளை நடத்தினால், மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றே அர்த்தம்” என்று சோனியா காந்தி குறிப்பிட்டார்.
”ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்று தேர்வு எழுதுவதால், கொரோனா பரவலுக்கு வாய்ப்பு இருப்பதாக” ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் ஷோரன் எச்சரித்தார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவும், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும், ”இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை சட்டப்படி அணுக வேண்டும்” என ஆலோசனை தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி பிரச்சினை
ஜிஎஸ்டி வருவாயில் போதிய பங்கை மத்திய அரசு தராதது குறித்த பிரச்சினையை அனைத்து முதலமைச்சர்களும் எழுப்பினர். துணை நிலை ஆளுநர் மற்றும் ஆளுநர்களால் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் குறுக்கீடு அதிகம் இருப்பதை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்டினார். ” கொரோனாவை எதிர்ப்பதில் மத்திய அரசுடன் சேர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில், இரு நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவது, கொரோனா பரவலை அதிகரிக்கும். அவ்வாறு நேர்ந்தால் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஒற்றுமை
பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை அனைத்து முதலமைச்சர்களும் வலியுறுத்தினர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இல்லாத மம்தா பானர்ஜியும், புதிதாக கூட்டணியில் இணைந்த உத்தவ் தாக்கரேவும் பேசும்போது, ”இதுபோன்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் ” என வலியுறுத்தினர்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசும்போது, ” பிரதமர் நடத்தும் காணொலி கூட்டத்தைத் தவிர, மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.
உத்தவ் தாக்கரே பேசும்போது, ”நாம் பயப்பட வேண்டும் அல்லது போராட வேண்டும். நிலைமை சரியான பிறகு நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம். அமெரிக்காவில் பள்ளிகள் திறந்ததால், 97 ஆயிரம் குழந்தைகளுக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், நம்மால் என்ன செய்ய முடியும் ” என்று கேள்வி எழுப்பினார்.