காங்கிரஸ் தொடங்கியுள்ள ‘சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ பிரச்சாரத்தில் இணைந்து, வெறுப்பு அரசியலுக்கு இணையப் போராளிகள் பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5 லட்சம் இணைய தள போராளிகளை இணைக்கும் வகையில், ‘காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ என்ற பிரச்சாரத்தைக் கடந்த திங்களன்று காங்கிரஸ் கட்சி தொடங்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலுக்குப் பதில் தரவும், இந்தியாவின் கொள்கையைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் மேலும் கூறும்போது, ” உண்மையை எதிர்த்துப் போராடக்கூடிய, இரக்கமுள்ள, நல்லிணக்கமுள்ள வன்முறையற்ற போராளிகள்தான் நாட்டுக்குத் தேவை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஓர் இளைஞராக உங்களுக்குத் தெரியும். உங்களிடமிருந்து, உங்கள் பள்ளியிலிருந்து, கல்லூரியிலிருந்து, பல்கலைக்கழகத்திலிருந்து எதையும் மறைக்க முடியாது. அடக்குமுறையை உங்களால் பார்க்க முடியும்,இந்தியாவின் கொள்கை மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உங்களால் பார்க்க முடியும்.
டெல்லிக்கு வெளியே பாருங்கள். விவசாயிகளுக்கு என்ன நடக்கிறது என்பதைக் காண முடியும். தேசத்தின் மீதான இந்த போரின் முதுகெலும்பு பூதாகரமான ராணுவம் போல் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள். சுதந்திரத்தின் மதிப்பு, இரக்கம், அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் அன்பைப் பாதுகாப்பதற்கான போராளிகள் தான் நமக்குத் தேவை.
அத்தகைய ராணுவத்தில் வந்து சேருங்கள். இது வெறுப்பை உமிழும் ராணுவம் அல்ல. இது வன்முறையை ஏற்படுத்தும் ராணுவம் அல்ல. உண்மை மற்றும் இந்தியாவின் கொள்கையைக் காப்பாற்றும் ராணுவம். இந்த போரை எதிர்கொண்டு வெல்வதற்கு, உங்களிடம் இணையதளம் எனும் ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்” என்றார்.
இந்த பிரச்சாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக தலைவர் ரோஹன் குப்தா, செய்தி தொடர்பாளர் பவன் கேரா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பாளர் பவன் குமார் பன்சால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, ”5 லட்சம் சமூக ஊடக போராளிகளை இணைப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்” என்றனர்.
இது குறித்து குப்தா தொடர்ந்து பேசும்போது, ” இந்த பிரச்சாரத்தை ஒரு மாத காலத்துக்குக் காங்கிரஸ் கட்சி நடத்தும்” என்றார். இது குறித்து கேரா கூறும்போது,” 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, சமூக ஊடகங்களில் காங்கிரஸ் ஆர்வம் காட்டாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இன்று சமூக ஊடகங்களில் கட்சி தீவிரமாகச் செயல்படுத்துவதைப்பார்த்து, களத்தில் மட்டுமல்ல இணையத்திலும் கட்சி வலுப்பெற்றுள்ளதாகக் கூறுகிறார்கள்” என்றார்.