வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கம் ஏலம் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 40 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த ஏலத்தில் வெற்றிபெறுபவர், நிலக்கரியை எடுத்து உலக அளவில் எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். முன்பு இரும்பு, சிமென்ட் மற்றும் அனல் மின் நிலையங்களை நடத்தும் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கப்படும் நிலக்கரியை, ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இருந்தது.
முதல் முறையாக, நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஏலம் குறித்து கடந்த ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸை ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, நிலக்கரி ஏலம் விடுவதில் பல ஆண்டுகளாக இருந்த ‘முடக்கம்’ தற்போது அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜார்கண்ட் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 40 நிலக்கரி சுரங்கங்களில், 9 சுரங்கங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட் அரசு தாக்கல் செய்த மனுவில், நிலக்கரி சுரங்க ஏலத்தில் வெளிநாட்டவரை அனுமதிப்பதை ‘கேலிக் கூத்தான ஏலம்’ என்று விமர்சித்துள்ளது. வனப் பரப்பை இழக்க வேண்டியிருக்கும் என்றும், மலைவாழ் மக்கள் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படும் என்றும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜார்கண்ட் அரசு, உலக அளவிலான கொரோனா பாதிப்பால், குறைவான தொகைக்கே ஏலம் போக வாய்ப்பு இருப்பதாகவும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் அதிகபட்ச வருவாயை ஈட்ட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. கொரோனா காலத்தில் ஏலம் விட்டால், சர்வதேச சரக்குப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படி நிலக்கரியை எடுத்துச் செல்வார்கள் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஜார்கண்ட் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகள், ஏராளமான நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதால் இந்த அச்சம் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
எனினும், இது குறித்து நிபுணர்கள் கூறும்போது , ”அதிகப்படியானோர் ஏலத்தில் பங்கேற்பது மற்றும் ஏலம் நடத்தும் முறையை பார்க்கும் போது, நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாநிலங்களுக்கு குறைந்த வருவாயே கிடைக்கும் என்று தெரிகிறது. முந்தைய ஏலச் சுற்றுக்களை விட, தற்போதைய ஏலத்துக்கான தள அளவுகோல் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நிலக்கரி சுரங்கங்களை வைத்துள்ள மாநில அரசுகள் இத்தகைய ஏலத்தின் மூலம் பயன்பெறாவிட்டால், மோடி அரசிடம் ‘பயன்’ பெறப் போவது யார்?