தமிழகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில், கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்காமல், எதிர்பார்த்தபடியே சீனாவுக்குக் கொடுத்திருக்கிறது இலங்கை. இந்தியா மற்றும் ஜப்பானின் விருப்பத்தை இலங்கை புறக்கணித்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கொழும்பு துறைமுக முனைய ஒப்பந்தம் கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சீன மின் உற்பத்தித் திட்டத்துக்கும் இலங்கை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த 3 திட்டங்களும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள 3 தீவுகளில் வருகிறது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடம், தமிழகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதி, சீனாவில் சினோசோர்-எடெக்வின் கூட்டு முயற்சியில் நடைபெறும் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், இலங்கையின் பாக் ஜலசந்தியில் உள்ள நைனித்தீவு, நெடுந்தீவு மற்றும் அணலைத்தீவு ஆகிய இடங்களில் கலப்பின புதுப்பித்தக்க எரிசக்தி அமைப்புகளைச் சீனா அமைக்கும். யாழ்ப்பாண தீபகற்பத்துக்குட்பட்ட தீவுகள் தற்போது முற்றிலும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நடவடிக்கை குறித்து இந்தியா வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் இலங்கை தரப்பில் கூறும்போது, ”சீனாவுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள திட்டம் இந்தியக் கடல் எல்லைக்கு அருகில் இருப்பதை இந்திய சுட்டிக்காட்டியது. இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் வட இலங்கையின் டெல்ஃப்ட் தீவில் சீனாவின் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது” என்றனர்.
உள்நாட்டுப் போருக்குப் பின் இந்த 3 தீவுகளிலிருந்து வெளியேறி ஏராளமானோர் தமிழகத்துக்குச் சென்றுவிட்டனர். தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியிருப்பதாக இந்த 3 தீவுகளில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
வீட்டு வசதி திட்டம்:
2018 ஆம் ஆண்டில், வடக்கு இலங்கையின் அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஆரம்பத்தில் மின் உற்பத்தித் திட்டம் இல்லை. போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சீனாவின் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான வீடு கட்டும் திட்டம் குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. மீள்குடியேற்ற அமைச்சகம் ரகசிய செயல்முறையை அரங்கேற்றியதாக இந்தியா குற்றஞ்சாட்டியது. பின்னர், வீடு கட்டும் திட்டம் இறுதியில் கைவிடப்பட்டது.
இது குறித்து இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஆஸ்டின் ஃபெர்னான்டோ கூறும்போது, ” இந்த விஷயத்தில் இலங்கை அரசைக் குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால், இந்த திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கிதான் செயல்படுத்துகிறது. அந்த வங்கியின் கொள்முதல் வழிகாட்டு நெறிமுறைகளைத்தான் கடன் பெற்றவர்கள் பின்பற்ற முடியும்.
எனினும், இது குறித்து இந்தியா ஆட்சேபிப்பதில் ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. 2014 ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டபோது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. வடக்கு இலங்கையில் சீனா வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்க இருந்தபோதும் இந்தியா எதிர்த்தது. லடாக்கில் இந்தியா-சீனா பதற்றம் இன்னும் தணியவில்லை.. இந்நிலையில், இலங்கை எல்லையிலும் மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்த இந்தியா நினைக்கிறது” என்றார்.