இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவரும், நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் மறைவு செய்தி நாட்டு மக்கள் அனைவரையும் துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்த்தியது. பொதுவாழ்விலும், அரசியலிலும் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுமையுடன் விளங்கிய பிரணாப் முகர்ஜி மறைந்து விட்டார். அவரது மறைவு தேசத்திற்கே மிகப்பெரிய பேரிழப்பாகும்.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக மொத்தம் பதிவான வாக்குகளில் 70 சதவிகிதம் பெற்று எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ. சங்மாவை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடிய பெருமை பிரணாப் முகர்ஜிக்கு உண்டு. காங்கிரஸ் கட்சியால் பரிந்துரை செய்யப்பட்ட வேட்பாளராக இருந்தாலும், மாற்று கட்சியினரின் ஆதரவைப் பெருமளவில் பெற்றவர். மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்கிற மாநிலங்களில் கூட பி.ஏ. சங்மாவை விட அதிக வாக்குகளை பெற்றவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியைத் தவிர, பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா போன்ற கட்சிகளும் ஆதரவு வழங்கியதிலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு அவரது தகுதி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவரை ஆதரித்து வெற்றியை உறுதி செய்தனர்.
பிரணாப் முகர்ஜி வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடு கொண்டிருந்த மம்தா பேனர்ஜி கூட கடைசி நேரத்தில் வேறு வழியின்றி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
1936 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த பிரணாப் முகர்ஜி, 1969 ஆம் ஆண்டில் தமது 34 ஆவது வயதில் அரசியல் பிரவேசம் செய்தார். அன்று மிட்னாபூர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட வி.கே. கிருஷ்ண மேனனுக்கு தேர்தல் பிரச்சாரக் குழு மேலாளராக பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. அந்த தேர்தலில் அவர் ஆற்றிய பணியை கூர்ந்து கவனித்த இ;ந்திரா காந்தி, அவரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொண்டார். அதே ஆண்டில் அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த காலக் கட்டத்தில் நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரையாற்றும் போது, பிரதமர் இந்திரா காந்தி அவையினுள் நுழைந்து தம் இருக்கையில் அமர்ந்தார். இளம் உறுப்பினர் ஒருவர் சிக்கலான பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மிக எளிய முறையில், ஆனால் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார். பிரதமர் இந்திராவிற்கு அந்த பேச்சில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. தலையை உயர்த்தி, வியப்புடன் அவரைப் பார்த்தார். உரையை முடித்தவுடன் அவருக்கு பிரதமரிடம் இருந்து அழைப்பு வருகிறது. அன்று ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு ஆற்றல்மிக்க அவரது அரசியல் பிரவேசம் தொடங்கி விட்டது. அன்று முதல் பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்வில் உயர்வு, வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் விரிவடையத் தொடங்கியது. அந்த வகையில் பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தையும், மதிப்பையும், எடுத்த எடுப்பிலேயே கவர்ந்தவர் தான் பிரணாப் முகர்ஜி.
1969 முதல் அன்னை இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர் பிரணாப் முகர்ஜி. 1973-லேயே மத்திய துணை அமைச்சராகவும், பிறகு 1982 இல் இருந்து 84 வரை நிதியமைச்சராகவும் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. பிரதமர் இந்திரா காந்திக்கு உற்ற துணையாக, குறிப்பாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975 முதல் 1977 வரை உடனிருந்து உரிய ஆலோசனைகளை வழங்கியவர்.
அன்று ஜெயபிரகாஷ் நாராயனண் தலைமையில் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக பீகார், குஜராத் மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பதவி விலகக் கோரி மாணவர்களை தூண்டி விட்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதையொட்டி, நாட்டின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. இத்தகைய சோதனையான ஒரு காலக்கட்டத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் உறுதியாக நின்றவர் பிரணாப் முகர்ஜி.
1991 தேர்தல் முடிந்து பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்த வேளையில், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த பி.வி. நரசிம்மராவ், பிரதமராக வர வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். அதன் அடிப்படையில் பிரதமர் பொறுப்பை ஏற்ற பி.வி. நரசிம்மராவ் அவர்களுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் நல்லுறவு இருந்தது. அந்த அடிப்படையில் திட்டக் குழுவின் துணைத் தலைவராக பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டார். 1991 இல் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீதாராம் கேசரி 1996 இல் பொறுப்பேற்றார். அந்த காலக் கட்டங்களில் கட்சி பலகவீனமடைவதை பார்த்த பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், 1998 இல் அன்னை சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அன்று காங்கிரஸ் பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமைப் பொறுப்பை அன்னை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். 1998 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சியில் அவர் ஆற்றிய கடமைகள் ஏராளம். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் நீண்ட நெடுங்காலம் பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, மத்திய தேர்தல் குழு, ஆட்சிமன்றக் குழு, எதிர்கால பிரச்சினைகள் குறித்த குழு என அனைத்து குழுக்களிலும் பிரணாப் முகர்ஜி அங்கம் வகித்தவர்.
அன்னை சோனியா காந்தியின் தலைமையில் கடுமையான உழைப்பிற்குப் பிறகு 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி என்கிற நிலையில் இருந்து 14 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிற நிலை ஏற்பட்டது. அதேபோல, 2004 மக்களவை தேர்தலில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெற்று டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அடுத்த இரண்டாவது நிலையில் முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர் பிரணாப் முகர்ஜி. அப்போது 2004 முதல் 2006 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், 2006 முதல் 2009 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2009 முதல் 2012 வரை நிதியமைச்சராகவும் பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. மேலும் பல்வேறு மத்திய அமைச்சக குழுக்களின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்று பாராளுமன்ற விவாதங்களில் தனி முத்திரையை பதித்தவர். அதன்மூலம் சிறந்த பாராளுமன்றவாதி என்கிற விருதைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல், மிகச் சிறந்த நிர்வாகி என்ற விருதும் 2011 இல் அவருக்கு வழங்கப்பட்டது.
தமது 34 வயதில் அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்த பிரணாப் முகர்ஜி, மிகச் சிறந்த அறிஞராக, நிர்வாகியாக, நிபுணராக, பேச்சாளராக, மதியூகியாக நாளும் வளர்ந்து உயர்நிலைக்கு வந்தார். சிக்கல்கள் நிறைந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தைகளை ராஜதந்திர நுணுக்கங்களுடனும், மேதமையுடனும் அவர் கையாண்ட அணுகுமுறை அனைத்து தரப்பினராலும் போற்றி பாராட்டப்பட்டது.
கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில், இந்திய அரசியலையே புரட்டி போட்டு விடும் என்று அச்சப்பட வைத்த இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனையைப் பெற்று புயல் வேகத்தில் செயல்பட்ட பிரணாப் முகர்ஜியை அன்று பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
உள்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்த விவேகம், அணுசக்தி ஒப்பந்தத்துடன் தொடர்பு கொண்ட நாடுகளுக்கு அவர் அளித்த நம்பிக்கை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அவர் காட்டிய கவனம், கரிசனம், கண்காணிப்பு இவை ராஜதந்திர வரலாற்றில் வைர வரிகளாக இடம் பெறத்தக்கவை. ஜப்பான், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா என பறந்து பறந்து சென்று சூறாவளியாய் சுழன்று பணியாற்றியதை மறக்க முடியாது.
கடந்த 2009 நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் உள்ள உறவு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பிறகு, இலங்கை அரசோடு காட்ட வேண்டிய புதிய அணுகுமுறை இவற்றையெல்லாம் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் விழிப்போடும், லாவகமாகவும் பிரணாப் கையாண்டு வந்ததை நாடு உன்னிப்பாக கவனித்து பாராட்டியது.
அன்று இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இந்திய அரசு ஆயுத உதவி செய்ததாக பரவலான குற்றச்சாட்டை தமிழகத்தில் உள்ள ஒருசில கட்சிகள் எழுப்பியது. அதுகுறித்து முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துவிட்டு, வீட்டிற்கே வெளியே செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்த வகையான ஆயுதங்களையும் வழங்கவில்லை. வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. யாருக்கும், எவருக்கும் தெரியாமல் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்ய முடியாது. அப்படி செய்வதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று தெளிவாக மறுத்து பேசியவர் பிரணாப் முகர்ஜி. அதுமட்டுமல்லாமல், இந்த மறுப்பையே மாநிலங்களவையிலும் பதிவு செய்தார். அந்த மறுப்பு உண்மைக்கு புறம்பானதாக இருந்தால் ஆயுதம் வழங்கியதாக கூறுகிறவர்கள் அவர்மீது உரிமை பிரச்சினை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஆயுதங்கள் வழங்கவில்லை என்ற உண்மையை அன்று உலகிற்கு உணர்த்தி, தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்தவர் பிரணாப் முகர்ஜி.
பிரதமர் மன்மோகன்சிங் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், நிதியமைச்சக பொறுப்பும் பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. மந்திரி சபை என்பது கூட்டுப் பொறுப்பில் இயங்குவது என்பதால், பிரதமர் மன்மோகன்சிங் சிகிச்சை பெறும் வரையில் இடைக்கால ஏற்பாடு என்று எதுவும் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டது. அக் காலக்கட்டங்களில் நிர்வாகத்தை சிக்கலின்றி நடத்திச் செல்லும் பொறுப்பை, மந்திரிசபை எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை முன்னதாகவே பிரதமர் மன்மோகன்சிங் வகுத்து வைத்திருந்தார். என்றாலும், மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் என்ற முறையில் அரசியல் விவகாரக் குழுவிற்கு பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். அதன்மூலம் மற்றவர்களுடன் கலந்து முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை அவர் நிறைவேற்றினார்.
பிரணாப் மீது சுமத்தப்பட்ட நிதித்துறை சாதாரணமானதன்று. உலகப் பொருளாதார நிலவரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக, இந்திய பொருளாதாரம் சேதமடைந்து விடக் கூடாது என்பதால் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலை, பல்வேறு தரப்பில் ஆலோசனைகள், விவாதங்கள், கருத்து கேட்புகள், நாடாளுமன்றப் பணிகள் என அவர் ஆற்றிய பணிகள் அனைவரையும் பிரமிக்க வைத்ததன.
எவராலும் வெற்றி கொள்ள முடியாத நுட்ப அறிவும், சாமர்த்தியமும், பேச்சுத் திறனும் கொண்டவர் என்பதால் இடதுசாரிகளானாலும், பா.ஜ.க. போன்ற வலதுசாரிகளானாலும் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு பிரணாப் முகர்ஜியிடமே வழங்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி அவர்களை பொறுத்தவரை இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, பி.வி. நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நான்கு பிரதமர்களிடம் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
இத்தகைய பெருமைகளையும், சிறப்புகளையும் பெற்றவரை இந்திய அரசியலில் காண்பது மிகமிக அரிதாகும். இத்தகைய நீண்ட நெடிய பாரம்பரியப் பின்னணியை அங்கீகரிக்கிற வகையில் ஜூலை 2012 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது.
ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து நிலைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய உயர்ந்த மனிதரான பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2018 இல் நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டத்தில் பங்கேற்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காங்கிரஸ் கட்சியினரின் வருத்தத்திற்கும், விமர்சனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்றதை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்று என்னைப் போன்ற லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரும் நினைத்தார்கள்.
இந்தப் பின்னணியில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்தியாவின் வளர்ச்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அளப்பரிய பங்காற்றிய மகத்தான மனிதரை அற்புதமான சுமைதாங்கியை, அரசியல் சாணக்கியரை பன்முகத்தன்மை கொண்ட திரு. பிரணாப் முகர்ஜி அவர்களுடைய மறைவு எந்த வகையிலும், எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவரை இந்திய அரசியலின் சாணக்கியர் என்றே அழைப்பார்கள்! அவரது மறைவிற்கு தேசிய முரசு டாட் காம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.