விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்காக இதுவரை ரூ.8 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய விவாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.
பயிர்க் கடன்களைக் கட்ட முடியாமல் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போவதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இத்தகைய பரிதாப முடிவை விவசாயிகள் எடுக்கின்றனர்.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து 3 மாதங்களுக்கு மேலாக கடும் குளிரிலும் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தை நசுக்குவதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறதேயொழிய, அவர்களது கோரிக்கையை செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தான், விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க இதுவரை ரூ.8 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி சையது ஹுசைன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்வியில், ” விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்த பின், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி மாதம் வரை இது குறித்த பிரச்சாரத்துக்கு எவ்வளவு செலவானது? என்று கேட்டிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர், ” விவசாயச் சட்டங்கள் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கவும், உண்மை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி நாளிதழ்களில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதுதவிர, 3 விவசாயச் சட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, 2 குறும்படங்கள் எடுக்கப்பட்டு காட்சி ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு விவசாய, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையிலிருந்து ரூ. 67 லட்சத்து 99 ஆயிரத்து 750 செலவு செய்யப்பட்டது. பத்திரிக்கைகளுக்கான விளம்பரத்தை உருவாக்குவதற்காக மட்டும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 568 செலவானது. இதோடு சேர்த்து. மொத்தம் ரூ.8 கோடி அளவுக்கு விளம்பரங்களுக்காகச் செலவு செய்யப்பட்டது” என்றார்.
இந்த விளம்பரச் செலவை ஈடுகட்ட அனைத்து அரசுத் துறைகள், ஏஜென்ஸிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடப்பட்டதா? என்று காங்கிரஸ் எம்பி சையது ஹுசைன் எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் டோமர், ” மற்ற துறைகள் ஏதும் அந்த விளம்பரச் செலவைச் செய்யவில்லை” என்று பதில் அளித்தார். எனினும், அவை தங்கள் சமூக வலைத்தளங்களில் விவசாயச் சட்டங்களின் பயன் குறித்த தகவல்களை வெளியிட்டதாக மேலும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி கேசி. வேணுகோபால் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் டோமர், ” கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி வரை, விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடியபோது எத்தனை விவசாயிகள் இறந்தார்கள் என்பது குறித்தோ, எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்தோ மத்திய அரசிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை” என்று பதில் அளித்தார். அமைச்சர் மேலும் கூறும்போது, ” இது குறித்து எந்த தகவலும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், போராட்டத்தின் போது 2 விவசாயிகள் இறந்ததாகவும், ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை ” என்று குறிப்பிட்டார்.
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, விவசாயிகளின் நல நிதியிலிருந்தே விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்பட்டுள்ளதை மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் டோமரே மக்களவையில் கூறுகிறார். ஊடகங்களைப் பயன்படுத்திப் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் இந்த அரசிடம், விவசாயிகள் எந்த அடிப்படையில் நீதியை எதிர்பார்க்க முடியும்?
ஒருபுறம் போராட்டத்தை நசுக்கிக் கொண்டு, மறுபுறம் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?