கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கத்தை நரேந்திர மோடி அமல்படுத்துவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியின் முகத்தையே மாற்றி அமைக்கும் மத்திய விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், டெல்லியின் மையப்பகுதியில் உள் 90 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பாரதிய ஜனதா அரசு சட்டத்தையே மாற்றி அமைத்தது.
அந்த நிலத்தில் பிரதமருக்கான வீடு உட்பட புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் நாடே போராடிக் கொண்டிருக்கும் போது, இவ்வளவு செலவு செய்து நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டியது அவசியமா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.
கொரோனா தொற்றுப் பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுச் சுகாதாரத்தை வலுப்படுத்தக் கூடுதல் பணம் தேவைப்படும் நிலையில், ரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றக் கட்டிடம் அவசியமா? எனக் கேள்வி எழுப்பி, பிரதமர் மோடி மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் புரி ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 60 பேர் கடிதம் எழுதினர். இந்த நேரத்தில் மத்திய அரசின் மறுசீரமைப்புத் திட்டம் தேவையற்றது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த கடிதத்தை முடிக்கும் போது, ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.
அலங்கோல மோடி ஆட்சியின் அவலங்களை பாரீர்!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகள் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்திய அரசின் நாடாளுமன்றம் செயல்படுவதை, மாற்றியமைப்பது அவசரமும் அவசியமும் ஆகும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
பரவலாகப் பார்க்கும் போது, இந்த மத்திய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் அவசியம் என்ன? நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் இடங்களை இந்த திட்டம் எவ்வாறு மாற்றும்? இந்த திட்டத்தைச் செயல்படுத்த முறையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
பிரதமர் மோடிக்கு விருப்பமான இந்த திட்டத்துக்கு, நகர்ப்புற வளர்ச்சி நிபுணர்களும், அரசு அதிகாரிகளும், கட்டிடக்கலை நிபுணர்களும் வடிவம் கொடுத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியை அழகுபடுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை 4 கி.மீ தொலைவுக்கு மறுசீரமைப்புப் பணி நடைபெறவுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இப்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை கட்டப்பட்டது. திறந்த வெளியாகவும், சுற்றி பசுமை வெளியாகவும், பல்வேறு அரசு அலுவலகங்கள், நாடாளுமன்ற கட்டிடம், நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் குடியரசுத் தலைவர் மாளிகை பகுதி உள்ளடக்கியுள்ளது.
மறுசீரமைப்புத் திட்டம்
இதற்கான டெண்டரை மத்திய பொதுப் பணித்துறை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. 2022 ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
இடப்பற்றாக்குறை காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும், மத்திய தலைமைச் செயலகமும் கட்ட வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதாக டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய விஸ்டா குழு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அளித்தது. அப்போது நடந்த கூட்டத்தில், குழுவின் அரசு சாரா உறுப்பினர்களாக இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்க்கிடெக்ட்ஸ் மற்றும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டவுன் பிளானர்ஸ் பங்கேற்கவில்லை. வெளியில் உள்ள நிபுணர்கள் இல்லாமல் இந்த திட்டத்துக்கு அவசர, அவசரமாக ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியம் என்ன?
தேசிய நலன் கருதி இந்த திட்டம் செயல்படுத்துவதாக மத்திய விஸ்டா கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து விவாதம் விஸ்டா குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
திட்ட மதிப்பீடு
புதிய நாடாளுமன்றம் மற்றும் மத்திய தலைமைச் செயலகம் கட்ட ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. கொரோனாவை எதிர்த்துப் போராட கேரள அரசு ஒதுக்கியிருக்கும் தொகைக்கு இணையானது இந்த தொகை. இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தைவிட, 3 மடங்கு அதிகம் மட்டுமே (ரூ.67,111 கோடி) சுகாதாரத்துக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து 3 கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்து, முதல்கட்டமாக, இந்த ஆண்டுக்கு ரூ.3,033 ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுசீரமைப்புக்கான ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் கூறப்படவில்லை.
மேலும், இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலைத் திரும்பப் பெறுமாறு, கடந்த மே மாதம் 20 ஆம் தேதி மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
90 ஏக்கர் இடத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது குறித்து ஆட்சேபனைகள் வரவேற்கப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 1,292 ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, பழமையான கட்டிடங்களை இடிப்பது தேவையற்றது என அந்த ஆட்சேபனைகளின் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்துக்கு எதிராக பொது நலன் கருதித் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லியில் 7 காலனிகளை ரூ.32 ஆயிரத்து 885 கோடியில் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது, பொதுமக்களின் கருத்தைக் கோரவில்லை. இந்த திட்டத்தைச் செயல்படுத்த, 14,031 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. விதிமுறைகளை மீறி இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கிழக்கு கிட்வாய் நகர் திட்டத்திலும் ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இந்த இரு திட்டங்களிலும் விதிமீறல் இருப்பதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதேபோன்று மத்திய விஸ்டா திட்டத்திலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோடி அரசு மிகவும் மோசம் எனப் பல தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்த வெளியைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர் எட்வின் லுட்டியென்ஸ் போன்றோர் உருவாக்கினர். இப்போது அந்த திறந்தவெளி முழுவதும் அரசு அலுவலகங்களால் நிரப்பப்படவுள்ளது.
சுமையை ஏற்றும் மத்திய அரசு
கொரோனா பரவல் காரணமாக நாடே முடங்கியது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின. பொருளாதார நிலைமை அதலபாதாளத்துக்குச் சென்றது. ஏராளமானோர் வேலையிழந்தனர். இந்நிலையில்,ரூ.20 லட்சம் தொகுப்பு நிதியை மத்திய அரசு அறிவித்தது. இந்த தொகை பல்வேறு பிரிவினர் மீண்டு எழுந்து வர உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், இதுவரை வெறும் ரூ. 3 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.1.20 லட்சம் கோடி வரை மாநில அரசுகளுக்குக் கடனாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடி இந்தியர்கள் வாழும் நம் நாட்டில், ஒவ்வொருவக்கும் ரூ.8 வரை கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள ரூ.17 லட்சம் கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இதன்மூலம், இந்திய மக்களை மோடி அரசு ஏமாற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை பதில் இல்லை. மோடி அரசு மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத அரசு என்பதற்கு, இதைவிடப் பெரிய சான்று தேவையில்லை.
- மத்திய விஸ்டா திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்த 80 சதவீத நிலம் பறிக்கப்பட்டுள்ளது.
- தேசிய அருங்காட்சியகம், கலை மற்றும் தேசிய காப்பகங்களுக்கான இந்திரா காந்தி தேசிய மையம் இடிக்கப்படும்.
- இந்த திட்டம் குறித்து நாடாளுமன்றத்திலோ, பொதுவெளியிலோ விவாதிக்கப்படவில்லை.
- மரங்களை வெட்ட அனுமதி கொடுக்கும் முன்பு, அங்கு இருந்த மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.
- இந்த திட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் அருங்காட்சியகமாகவும், தேசிய அருங்காட்சியகம் அரசு கட்டிடமாகவும் மாற்றப்படும். தேசிய அருங்காட்சியகத்தின் கலைப்பொருட்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி, அங்குள்ள கட்டிடங்களை இடிக்கப் போகிறார்கள். இதே போன்ற அச்சுறுத்தல் குடியரசுத் தலைவர் மாளிகை, சன்ஸாட் பவன், தேசிய கலைப்பொருட்கள் மற்றும் இந்தியா கேட்டுக்கு இல்லையா? என்ற கேள்விக்கு மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.
சுதந்திர அறிவிப்பை வெளியிட்ட நள்ளிரவில், தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மத்திய மண்டபத்திலிருந்து பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை மறக்க முடியுமா? போராடிப் பெற்ற சுதந்திரத்தை அவர் வார்த்தைகளால் வரவேற்ற விதம், உற்சாகத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தின. பிரிட்டிஷாரிடம் போராடி நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன டெல்லியின் இதுபோன்ற பழமையான கட்டிடங்கள். பழைய கட்டிடங்களை இடித்துத்தான் புதிய வரலாறு படைக்க வேண்டுமா?
அடிக்கடி மாற்றுவதற்கு, வரலாறு என்பது காலில் போடும் செருப்பு அல்ல!