மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஆபத்தான விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்குப் பதிலடி தரும் வகையில், அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 3 விவசாயச் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து தமது அரசு போராடும் என காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆணிவேர் வரை சென்று சட்டரீதியாகவும். சட்டப்பேரவை வழியாகவும் போராடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
சட்ட வழியாக என்றால், அரசியல் சாசனத்தின் 131 ஆவது பிரிவின் கீழ், 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டா? அல்லது மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடைபெறலாம்.
மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மாநில அரசு திரும்பப் பெற இயலாது. அந்த சட்டத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவும் முடியாது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த சட்டம் நாடு முழுவதற்கும் பொருந்தும். எனவே, இந்த சட்டத்தை மாநில அரசால் நீக்க முடியாது. நாடாளுமன்றம் மட்டுமே அந்த சட்டங்களை நீக்க முடியும்.
அரசியல் சாசனத்தின் 7 ஆவது அட்டவணையின்படி, மத்திய அரசின் வரையறைக்குள்ளோ, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த வரையறைக்குள்ளோ வந்தால் மட்டுமே, நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும்.
மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட விசயத்தில், மத்திய அரசு சட்டமியற்றினால், அது செல்லாது என மாநில அரசுகள் வாதாட முடியும். எனினும், மத்திய, மாநில அரசுகளின் கூட்டு வரையறைக்குள் குறிப்பிட்ட விசயம் வந்தால், சட்டம் இயற்ற முடியும் என மத்திய அரசும் வாதிட முடியும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டம் (பிரிவு 14) மாநில வரையறைக்குள் வரும் என மாநில அரசுகளும், விவசாய உற்பத்தியின் வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான விசயமாக இருப்பதால் (பிரிவு 33) இத்தகைய சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் வாதாட முடியும்.
மத்திய, மாநில அரசுகளின் இணைந்த வரையறைக்குள் வந்தால் மட்டுமே, மாநில அரசு அதே சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடியும். மத்திய அரசின் வரையறைக்குள் வரும் விசயம் என்றால், பஞ்சாப் அரசால் மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது.
உதாரணத்துக்கு, குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணைந்த வரையறைக்குள் வருகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம். மாநில அரசும் அதிகார வரையறைக்குள் இருப்பதால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனையில் திருத்தம் கொண்டு வரமுடியும்.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு தனியாகச் சட்டத்தை இயற்ற முடியுமா?
மத்திய, மாநில அரசுகளின் இணைந்த அதிகார வரையறைக்குள் 3 விவசாய சட்டங்களும் வருகின்றன என்ற மத்திய அரசின் வாதத்தின்படி, பஞ்சாப் மாநில அரசு தனியாக சட்டமியற்ற முடியாது. எனினும், புதிய சட்டம் இயற்றப் போவதில்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்கும் ராம் நாத் கோவிந்த் எப்படி ஒப்புதல் அளித்தார் என தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒருவேளை பஞ்சாப் சட்டப்பேரவையில் விவசாயச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அதற்குப் பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்பது சந்தேகமே. அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தைப் பஞ்சாப் அரசு அணுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வரும் 19 ஆம் தேதி பஞ்சாப் சட்டப்பேரவையில் என்ன நடக்கும்?
மத்திய அரசின் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறவோ அல்லது அந்த சட்டங்களுக்கு முரணான சட்டங்களை இயற்றவோ பஞ்சாப் அரசால் முடியாது. சட்ட ரீதியாக போராடுவதற்குப் பேரவையில் முடிவுகள் எட்டப்படக்கூடும் என்றே தெரிகிறது.