கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையிலும், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 85 புதிய பணக்காரர்களின் சொத்து (50 மில்லியன் டாலர்) மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட ஒப்பிடும்போது இந்தியா முன்னணியில் இருக்கிறது.
பொருளாதார மந்தநிலை:
கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 2 காலாண்டுகளில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பணக்காரர்களின் எழுச்சி :
நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பு இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் ராக்கெட் வேகத்தில் ஏறுமுகமாக இருந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் முதல், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 5.37 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக 3.5 முறை சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதனை இதனை ஒப்பிடும்போது, அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2020 டிசம்பர் மாதம் வரை 2.8 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 26.6 பில்லியன் டாலரிலிருந்து, 74.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020 ஜூன் முதல் அம்பானியின் சொத்து மதிப்பு 1.3 மடங்கு அதிகரித்துள்ளது.
அப்பட்டமான சமத்துவமின்மை :
இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 39 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் உள்ளன. சீனா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது இது பல மடங்கு அதிகம். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் அதிக சதவீதம் சொத்துக்கள் வைத்திருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், உலக அளவில் முதல் இடத்தில் ரஷ்யாவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும், நான்காம் இடத்தில் அமெரிக்காவும், ஐந்தாம் இடத்தில் சீனாவும் உள்ளன.
தனிப்பட்ட நபரின் அதிகபட்ச மொத்த சொத்து :
2019 ஆம் ஆண்டு இறுதிவரை, இந்தியாவில் 4,593 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் வரை இந்தப் பட்டியலில் 85 புதிய பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில், 1,330 புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டு இறுதியில் 50 மில்லியன் டாலர் சொத்துகள் வைத்திருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் 21,087 பேர் இடம்பெற்று உலக அளவில் சீனா முதலிடத்தில் உள்ளது.
89,509 பணக்காரர்களைப் பெற்ற அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 4,593 பணக்காரர்களைப் பெற்று இந்தியா மூன்றாவது இடத்தையும், 3,712 பணக்காரர்களைப் பெற்று பிரான்ஸ் நான்காவது இடத்திலும்,2,775 பணக்காரர்களைப் பெற்று இத்தாலி ஐந்தாவது இடத்திலும், 794 பணக்காரர்களைப் பெற்று தாய்லாந்து ஆறாவது இடத்திலும் உள்ளன.
2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சீனாவில் 1,330 புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 121 புதிய பணக்காரர்களும், இந்தியாவில் 85 புதிய பணக்காரர்களும், பிரான்ஸின் 41 புதிய பணக்காரர்களும் உருவாகியிருக்கிறார்கள். அதேசமயம், இத்தாலியில் மைனஸ் 5 மற்றும் தாய்லாந்தில் மைனஸ் 20, கொரியாவில் மைனஸ் 30, ஜப்பானில் மைனஸ் 45, ஸ்பெயினில் மைனஸ் 78, இங்கிலாந்தில் மைனஸ் 398 மற்றும் பிரேசிலில் மைனஸ் 609 ஆக புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.