தவறான ஊழல் பிரச்சாரமான போபர்ஸ் கதை, இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அசிங்கமான அரசியல், இந்தியாவை சாதி மற்றும் வகுப்புவாத ரீதியாக இரண்டாக பிளவுபடுத்தியது.
30 ஆண்டுகளாக இந்திய அரசியலை வேட்டையாடிக் கொண்டிருந்த போபர்ஸ் பேய், ஒருவழியாக சுக்குநூறாக உடைந்து சிதறிவிட்டது.
அமெரிக்காவிடம் இருந்து 155 எம்எம் பீரங்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. அதன்படி, அந்த பீரங்கிகள் மே 18 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. 1980 ஆம் ஆண்டில் சுவீடன் நிறுவனத்திடம் போபர்ஸ் பீரங்கிகளை வாங்க இந்திய ராணுவம் தைரியமாக முடிவு எடுத்தபின், இப்போதுதான் அதேபோன்ற முடிவை இந்திய ராணுவம் எடுத்துள்ளது.
போபர்ஸ் பீரங்கியும் இதே வகைதான். அதனை வாங்க அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி உத்தரவிட்டார். ஆனால், அந்த ஒப்பந்தம் தவறாக திரிக்கப்பட்டு, ராஜிவ் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது.
போபர்ஸ் எனும் பேயை எரித்துக் கொன்றுவிட்டு, தற்போது அதே ரக பீரங்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இப்போது அமெரிக்காவிடம் இருந்து பீரங்கிகளை வாங்க மோடி அரசு முடிவு செய்யும் வரை, இதற்கு முன்னர் ராஜிவ் காந்தியைப் போல் எந்த பிரதமரும் அதே ரக பீரங்கியை வாங்க தைரியமாக முடிவு எடுக்கவில்லை.
ராஜிவ் காந்தி மீது போபர்ஸ் பேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதால், அடுத்து வந்த பிரதமர்கள் பீரங்கியை வாங்க தயங்கினார்கள். போபர்ஸ் பீரங்கி வாங்கியதால் ராஜிவ் காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டது. அதேசயம், அரசியல் நிலைமையும் முற்றிலும் மாறியது. அதன்பிறகு எந்த ஓர் அரசியல்வாதியும் பீரங்கியை தொட்டுப் பார்க்கக் கூட தயங்கினர்.
போபர்ஸ் பீரங்கி பேரத்தை தவறாக சித்தரித்து பிரச்சாரம் செய்த பா.ஜ.க. உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு அந்த கதையை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
போபர்ஸ் பீரங்கிகள் வாங்கும்போது, இடைத்தரகர்கள் யாரும் இல்லை. ஆனால், சுவீடன் நாட்டு வானொலி, போபர்ஸ் பேரத்தில் இடைத்தரகர்கள் இருந்ததாக கூறியது.
உண்மையிலேயே இந்த செய்தி அரசியலில் பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்டது. இந்த பூகம்பத்தைப் பற்றி பேசும் முன், இந்திய ராணுவத்துக்காக போபர்ஸ் பீரங்கி வாங்கும் போது, இந்திய பிரதமராக ராஜிவ் காந்தி எவ்வாறு செயல்பட்டார் என்பதை நினைவுகூர வேண்டியுள்ளது.
1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவின் செல்லப் பிள்ளையாக ராஜிவ் காந்தி மாறினார். இதுதான், 1984 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 410 தொகுதிகளில் வெற்றி பெற காரணமாக இருந்தது. நேருவோ, இந்திரா காந்தியோ கூட இந்த உயரத்துக்கு வெற்றியை ஈட்டியதில்லை.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால். அந்த நேரத்தில் இந்தியாவே ராஜிவ் காந்தி மீது அன்பு மழை பொழிந்து கொண்டிருந்தது.
அவரது இளமை, வலுவான சக்தி மற்றும் துடிப்பு ஆகியவை அன்றைய இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் நம்பிக்கையாக இருந்தது. குற்றச்சாட்டுகளுக்கு இடம் தராமல், ‘மிஸ்டர் க்ளீன்’ என்றே ராஜிவ் காந்தி அழைக்கப்பட்டார்.
ராஜிவ் காந்தியின் மாபெரும் வெற்றியால் அவரது எதிர்ப்பாளர்கள் காயப்பட்டிருந்தனர். அப்போது பா.ஜ.க.வுக்கு 2 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். ராஜிவ் காந்தியால் தோற்கடிக்கப்பட்டவர்கள், அவரை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பமடைந்திருந்தனர். அந்த காலக் கட்டத்தில் தான் ராஜிவ் காந்தியை குறி வைத்து எதிர்கட்சிகள் காத்திருந்தன.
போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டதாக வந்த செய்தி எதிர்கட்சிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டது போல் ஆனது. அந்த நேரத்தில், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜிவ்காந்திக்கு எதிராக செயல்பட்டார்.
தான் நேர்மையானவர் என்பதைக் காட்ட, அந்த சூழலை வி.பி.சிங் பயன்படுத்தினார். பாதுகாப்பு ஒப்பந்தத்தில் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது, அதிருப்தியும், சோர்வும் அடைந்திருந்த வி.பி.சிங் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு ஊக்கத்தை கொடுத்தது.
ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் வி.பி.சிங்கை’மிஸ்டர் க்ளீன்’ என்று கூறி, ராஜிவ் காந்தியை ‘மிஸ்டர் டர்ட்டி’ என்று முத்திரை குத்த இணைந்து களத்தில் குதித்தன. ராஜிவ் காந்திக்கு எதிராக அவர்கள் அனைத்து ஆயுதங்களையும் பிரயோகப்படுத்தினர்.
அதன்பிறகு வி.பி.சிங் தலைமையில் உருவான ஜனதா தளம் கட்சி, இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் ஆதரவுடன் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் என்று ஒன்றை தொடங்கினர். கம்யூனிஸ்ட்களும் பாரதிய ஜனதா கட்சியும் ஆதரித்து அதிகாரத்துக்கு வந்த ஒரே கட்சி ஜனதா தளம்தான். ராஜிவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதில் அனைத்து எதிர்கட்சிகளும் அப்போது ஒன்றிணைந்து செயல்பட்டன.
ராஜிவ் காந்தி அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின், ஓரணியில் திரண்ட எதிர்கட்சிகள் சிதறின. வெளிப்படையாகவே அதிகாரப் போர் தொடங்கியது. வி.பி.சிங்கின் ஆதரவாளர்களே அவருக்கு குழி பறித்தனர். இறுதியில் பிரதமர் பதவியேற்ற 11 மாதங்களில் பதவியை வி.பி.சிங் ராஜினாமா செய்தார்.
இவ்வளவு அரசியல் நாடகங்களும் போபர்ஸ் பீரங்கி பிரச்சினையை மையமாக வைத்தே நடந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு மட்டும் போபர்ஸ் பீரங்கி பேர பிரச்சினை பயன்படுத்தப்படவில்லை. ராஜிவ் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் அழிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.
எதிர்கட்சிகளின் இத்தகைய சித்து விளையாட்டுகள் அனைத்தும் இந்திய அரசியலில் அழிவை ஏற்படுத்தின. அதன் தாக்கத்தில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை.
காங்கிரஸ் மீதும், ராஜிவ்காந்தி மீதும் போபர்ஸ் பேரத்தில் ஊழல் நடந்ததாக எதிர்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தின. இதில் பலன் அடைந்தது பா.ஜ.க. தான். இதற்கான மோசமான பலனை இந்திய மக்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.
தன் இறுதி மூச்சுவரை, மிஸ்டர் கிளீன் என்ற முத்திரையை காப்பாற்ற ராஜிவ் காந்தி போராடிக் கொண்டிருந்தார். போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ராஜிவ் காந்தி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என, கடந்த 1991 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால்…அப்போது ராஜிவ் காந்தி இந்த உலகில் இல்லை!