கொரோனா பரவல் குறித்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு 414 நாட்கள் ஆகிவிட்டன. ’21 நாட்கள் பொது முடக்கம் கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்வதற்கு அவசியம்’ என்று பிரதமர் மோடி அறிவித்து 389 நாட்கள் ஆகிவிட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. பின்னர் குறைந்து மீண்டும் தற்போது இரண்டாவது அலையில் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது 1 கோடியே 93 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதலில் உருவான கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, தற்போதைய பாதிப்பு இது இருமடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வளவு நாட்களைக் கடந்து வந்தும், கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? இதனைத் தடுக்க விஞ்ஞான ரீதியாக பலன் தரும் வகையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? ஏற்கெனவே நாம் பெற்ற அனுபவம் அல்லது பொது விஷயங்களின் அடிப்படையில் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்குப் புரிதல் இல்லை. வெளிப்படையான ஆபத்தான கருத்துக்களைக் கூறும் பா.ஜ.க.வினர், ஒரு தொற்று நோய் பரவும் சூழலில், என்ன சொல்லக் கூடாது என்பதை எல்லாம் பற்றிக் கவலைப்படவில்லை.
கடந்த 2 மாதங்களாக பா.ஜ.க.வினர் பேசிவரும் 9 விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:
- தொற்று நோயின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தபோது, கொரோனா தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தவிர யாரும் கூறவில்லை.

இது தொடர்பாக ஹர்ஷ் வர்தன் கூறும்போது, ” கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வரும் இறுதி ஆட்டத்தில் இருக்கிறோம். இந்த நிலையைக் கடக்க நாம் 3 வழிகளைப் பின்பற்றுவது அவசியம்: கொரோனா தடுப்பூசி விஷயத்தில் அரசியல் செய்யாமல், தடுப்பூசிகளின் பின்னால் இருக்கும் விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சரியான நேரத்துக்கு நமது அன்புக்குரியவர்களையும் சுற்றத்தாரையும் கொரோனா தடுப்பூசி போட வைக்க வேண்டும்” என்றார்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக ஆரம்பக் கட்டத்திலேயே சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து விட்டார். இதன்படி பார்க்கும் போது, கொரோனா வைரசின் உருமாற்றம் எதிர்வரும் வாரங்களில் அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. கொரோனா முதல் அலையால் கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெருமளவு தொற்று அதிகரித்ததை எதிர்கொண்ட அனுபவம் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது. ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள போதுமான தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் இல்லை என்பது தான் உண்மை. ஆனால், பொருந்தாத தடுப்பூசி இலக்கை வைத்துக் கொண்டு இரண்டாவது அலையைச் சமாளித்துவிடலாம் என்று நினைத்துத் தான், ஹரித்துவாரில் கும்பமேளா மற்றும் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் பிரச்சாரத்தையும் அரசு முன்னெடுத்துச் சென்றது.
தற்போது போடப்படும் தடுப்பூசி இலக்கின்படி, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த இலக்கில் 70 சதவிகிதத்தை மட்டுமே எட்ட முடியும். தேவை மற்றும் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றால், இதுவரை கொரோனாவுக்கு எதிரான ஆட்டம் முடியவில்லை என்பதை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஆக்சிஜன் தேவை கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல்
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் வினியோகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறியதே ஆக்சிஜன் பற்றாக்குறைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் ப்யூஸ் கோயல்.
இது குறித்து அவர் கூறும்போது, ” மருத்துவ ஆக்சிஜன் தேவையை மாநில அரசுகள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். வினியோக நிர்வாகத்தைப் போல், தேவை குறித்த நிர்வாகமும் முக்கியம். கொரோனா பரவலுக்கு மாநில அரசுகளே காரணம். அவர்கள் தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்தால், நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு பெரும் சவாலாக இருக்கும். நாங்கள் மாநில அரசுகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் தான் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதையும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதையும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல இடங்களில் ஆக்சிஜன் அதிக அளவில் பயன்படுத்துவதோடு வீணாக்கப்படுகிறது” என்றார்.
ப்யூஸ் கோயலின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. #TooMuchOxygen என்ற ஹேஸ்டேக்குடன் ட்விட்டரில் பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு ஆளாவோருக்கு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நுரையீரல் செயல்பாடும் பாதிக்கும். அந்த நேரத்தில் நுரையீரல் செயல்பாட்டின் சுமையைக் குறைக்கக் காற்றிலிருந்து வாயுவை வடிகட்டி செலுத்த வேண்டும். இவ்வாறு பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 130 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவை.
இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 162 ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவுகளைத் தொடங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை 11 ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. இதில், 5 பிரிவுகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
2020 மே மாதம் பியூஸ் கோயல் கூறும்போது, ” 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தான், கொரோனாவிலிருந்து மீண்ட முதல் நாடாக இருக்கும்” என்று பெருமைப் பட்டுக் கொண்டார்.
- இவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததில்லை: பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இது போன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், இவ்வாறு கூட்டம் கூடுவது மோசமானது என்பது பிரதமருக்குத் தெரியவேண்டாமா? மக்கள் மீது நாட்டின் பிரதமருக்கு அக்கறை வேண்டாமா?
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது,” கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்கள் கூட்டத்தைத் தான் பார்க்கிறேன்” என்றார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பற்றி அவர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.
கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். அதே பிரதமர் தான், நாட்டில் பரவும் கொரோனா சூழ்நிலை குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார். கூட்டத்தைக் கூட்டி கொரோனா பரவலுக்குக் காரணமாக இருந்துவிட்டு, பின்னர் கொரோனாவை தடுப்பது குறித்து ஆய்வு செய்வது முரண் இல்லையா?
- கொரோனா முடிந்துவிட்டதால் முகக்கவசம் தேவையில்லை: ஹிமந்தா பிஸ்வா ஷர்மா
கொரோனா முடிந்துவிட்டதால் முகக்கவசங்களை இனி அணியத் தேவையில்லை என்று அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா முடிவு செய்கிறார். இப்போது தான் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.
”அசாமில் கொரோனா கிடையாது. அதனால் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் நான் மக்களுக்கு தெரிவிக்கிறேன்” என்கிறார் ஷர்மா. இதற்கு கடும் கண்டனங்கள் வந்தபிறகும், தன் நிலையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அசாமில் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதால், நீண்ட காலத்துக்கு முகக்கவசம் அவசியம் இல்லை என்று மீண்டும் சொல்கிறார். அசாமில் தற்போது 5 ஆயிரத்து 268 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அன்னை கங்கையின் ஆசியால் கொரோனா இருக்காது : தீரத் சிங் ராவத்
கொரோனா வைரசின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த உத்தராகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்ற ஆக வேண்டும் என்பதால் தான், கொரோனா அச்சுறுத்தலை அவர் பொருட்படுத்தாமல் பேசி வருகிறார்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் கும்பமேளா நடத்துவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போதும், கும்பமேளாவை ரத்து செய்ய மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தார். அதற்கான காரணத்தைக் கூறும்போது, ”அன்னை கங்கை பாயும் இங்கு கொரோனா இருக்காது” என்றார்.
இந்நிலையில், கும்பமேளாவில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு, அகமதாபாத்துக்குத் திரும்பிய 34 பேரில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியே கும்பமேளாவில் கலந்து கொண்டிருந்தாலும், அன்னை கங்கை நிச்சயம் காப்பாற்றியிருக்க மாட்டாள் என்பது தான் உண்மை. கும்பமேளா நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, எல்லோரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் மூலம் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, கும்பமேளாவில் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று இப்போது கூறுகிறார்.
- கடுமையாக உழைக்கும் பா.ஜ.க. தொண்டர்களை கொரோனா தாக்காது : கோவிந்த் படேல்
குஜராத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சராக இருக்கும் கோவிந்த் படேல், கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களை கொரோனா தாக்காது, அதனால் தான் பா.ஜ.க. தொண்டர்கள் கொரோனா பாதிக்காமல் பத்திரமாக இருக்கிறார்கள் என்கிறார்.
இப்படிச் சொன்ன கோவிந்த் படேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போர் உலகத்தை ஈர்த்துள்ளது: மோடி
மற்றொரு வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த முறை மோடியைத் தவிர யாரும் நடனம் ஆடி வெற்றியைக் கொண்டாடப் போவதில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் பேசிய மோடி, ”கொரோனா பரவல் தொடங்கியபோது, இந்தியாவின் நிலையைப் பார்த்து உலகமே கவலைப்பட்டது. இன்றைக்கு கொரோனாவுக்கு எதிரான போரைப் பார்த்து உலகமே வியந்துள்ளது. உலகளாவிய நன்மைகளை மேம்படுத்துவதில் இந்தியா மனித மைய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது” என்றார்.
இரண்டே மாதத்தில் உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.
- கொரோனா தடுப்பு மருந்தாக ‘கொரோனில்’: ஹர்ஷ் வர்தனும் நிதின் கட்கரியும் ஆதரவு
ஆயுர்வேத வியாபாரியும் யோகா குருவுமான ராம்தேவ் கடந்த பிப்ரவரி மாதம் ‘கொரோனில்’ என்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும், நிதின் கட்கரியும் இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கொரோனில் மருந்துக்கு ஆதரவாகப் பேசினர்.
தமது பதாஞ்சலி நிறுவனத்தில் தயாராகும் ஆயுர்வேத மருந்தான கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் ராம்தேவ் கூறினார். இதனை உடனே மறுத்த உலக சுகாதார அமைப்பு, ‘ராம்தேவ் சொல்வது பொய்’ என்று கூறி அவரது முகத்திரையைக் கிழித்தது.
கொரோனில் மருந்து விற்பனை தொடக்க விழாவில் பேசிய ஹர்ஷ் வர்தன், ‘ஆயுர்வேத தயாரிப்புகள் அதிகரிப்பதைப் பார்க்கும் போது, ஆயுர்வேதத்தை மக்கள் ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது’ என்றார்.
கொரோனில் ஆயுர்வேத மருந்துக்குப் பின்னால், விஞ்ஞானம் இருக்க வேண்டும். இரண்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை சிக்கல் நிறைந்தது. இது போன்ற மருத்துகளுக்கு அரசு ஆதரவைத் தெரிவிப்பது ஆபத்தானது.
- வயதானவர்கள் சாகட்டும்: பிரேம் சிங் படேல்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் பிரேம் சிங் படேல் கூறும்போது, ”இந்தியாவில் தொற்றால் நிகழும் இறப்புகளுக்கு உதவ முடியாது. ஏதாவது ஒரு வகையில் தினமும் மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவிலிருந்து பாதுகாப்பதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். வயதானவர்கள் எப்படியும் இறக்கத்தான் போகிறார்கள்” என்ற மனிதநேயமற்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது எவ்வளவு ஆபத்தான கருத்துகளை பா.ஜ.கவினர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனாவை விட இவர்கள் மிகவும் கொடியவர்கள்!