விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில் 53 சதவிகிதம் – 243 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய துறையாக விவசாயம் விளங்குகிறது. ஆனால், 1950- 51 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 54 சதவிகிதமாக இருந்தது. தற்போது 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
ஆனால், உணவு தானியங்களின் உற்பத்தி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960&களில் தொடங்கிய பசுமைப் புரட்சித் திட்டத்தின் காரணமாக உணவு தானியங்களின் உற்பத்தி பெருகி வருவதை காண முடிகிறது. 1950-51 இல் உணவு தானியங்களின் உற்பத்தி 51 மில்லியன் டன்னாக இருந்தது 2019-20 இல் 291.95 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், சாகுபடியின் பரப்பளவு உயர்ந்திருக்கிறது. ஆனால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான உரிய விலை கிடைக்காத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்கிற பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியாது. அதேநேரத்தில், ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிற பொருளை அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால், அந்த வாய்ப்பு விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கடுமையான போராட்ட வழிமுறைகளை கையாண்டு வந்தனர். இதன் விளைவாக மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய நியாயமான விலையை வழங்க வேண்டுமென்று அனைத்து எதிர்கட்சிகளும், விவசாய சங்க அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், 2014 மக்களவை தேர்தலுக்கு பிறகு, ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க. அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கோரின.
ஆனால், 2014 தேர்தல் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் நரேந்திர மோடி குறிப்பிட்டபடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளின் உற்பத்தி செலவோடு 50 சதவிகிதம் கூடுதலாக கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று குறிப்பிட்டதை அனைத்து எதிர்கட்சிகளும் எடுத்துரைத்தன. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கு மோடி அரசு தயாராக இல்லாமல் பல்வேறு சால்ஜாப்புகளைக் கூறி காலம் தாழ்த்தி வந்தது. இறுதியாக, எதிர்கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவதாக 2019 தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அக்குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் பெறுவதற்கு எவ்விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைவாக இருந்த நிலையில் விவசாயிகள் தங்களுடைய விளைப் பொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
இந்நிலை காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்கொலை சாவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதற்கு மோடி ஆட்சியின் தவறான விவசாயக் கொள்கை தான் காரணம். இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் கடனை ரத்து செய்வதால் எந்த பயனும் ஏற்படாது என பிரதமர் மோடி கூறியது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருப்பதாக விவசாயிகள் கருதுகிறார்கள். விவசாயிகள் பெற்ற கடனில் ரூ.2 லட்சத்திற்கும் மேலான கடனை தவிர்த்து விட்டால், மொத்த கடன் சுமை நிலுவையில் உள்ளது, ரூ.1.90 லட்சம் கோடி தான். இதனை தள்ளுபடி செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. ஆனால், தமது 15 பணக்கார நண்பர்கள் வங்கியில் பெற்ற கடனில் ரூ.3.50 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்து சலுகை காட்டியிருக்கிறார். விவசாயிகளுக்கு இதைவிட பெரிய துரோகத்தை வேறு எவரும் செய்ய முடியாது.
ஏற்கனவே, பா.ஜ.க. ஆட்சியில் ஆகஸ்ட் 2014 இல் அமைக்கப்பட்ட சாந்தகுமார் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை நிறுத்த வேண்டுமென்றும், உணவு தானிய கொள்முதல் மற்றும் சேமிப்பிற்கு தனியார் துறையை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் ஜனவரி 2015 இல் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் கடந்த ஜூன் 5 ஆம் நாள் மூன்று அவசர சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்தது.
- அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (திருத்தம்) 1955
- வேளாண் விளை பொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம்
- விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு, விலை உறுதி, வேளாண்மை சேவைகள் சட்டம்)
இச்சட்டங்கள் மூன்றும் ஏன் நிறைவேற்றப்பட்டன ? எதற்காக நிறைவேற்றப்பட்டன ? யாருடைய நலனைக் காப்பாற்ற நிறைவேற்றப்பட்டன என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று அவசரச் சட்டங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை, பிரிக்க முடியாதவை. இவை ஒட்டு மொத்தமாகவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கி விடக் கூடியதாகும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 (திருத்தம்) என்பது தானியங்கள், பயிறு வகைகள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்க வகை செய்யும். இந்தப் பொருட்களின் விலை நிலவரத்தை சீராக வைத்துக் கொள்வதற்காகவும், பதுக்கலை ஒழிப்பதற்காகவுமே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திருத்தத்தின் மூலம் இவை அனைத்தும் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த இன்றியமையாத பொருட்களின் கீழ் வெங்காயம், பருப்பு போன்றவை செயற்கையாக விலை உயர்வதை தடுக்க மத்திய அரசு அவற்றை சேமித்து வைக்கவும், சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்பு இருந்தது. தற்போது, அத்தகைய வாய்ப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
‘ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை’ என்பதை நிலைநாட்டி தனியார் பங்களிப்பை இச்சட்டம் ஊக்குவிக்கிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவாதத்தை மூன்று அவசரச் சட்டங்களும் புறக்கணித்துள்ளன. இது விவசாயிகளுக்கு மோடி அரசு இழைத்த மிகப்பெரிய அநீதியாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவிக்கிற துன்பங்களுக்கு அளவே இல்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விவசாயம் முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலில் உள்ளதாகும். விவசாயம் குறித்த மாநில பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த அவசரச் சட்டமானது கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும். அரசமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டதோடு, இரண்டிற்கும் பொதுவாக பொதுப் பட்டியல் மூலமும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அரசும் தமக்கென வகுக்கப்பட்ட பட்டியல்களில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் குறித்து சட்டம் இயற்ற வேண்டும். ஓர் அரசு இன்னொரு அரசிற்குரிய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் குறித்து சட்டம் இயற்றுதல் கூடாது. மத்திய அரசோ, மாநில அரசுகளோ தமது வரம்புகளைத் தாண்டி தமக்கென குறிக்கப்பட்ட பொருள் அல்லாததில் சட்டம் இயற்றுவது வரம்பு மீறிய சட்ட விரோதச் செயலாகும்.
கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பா.ஜ.க. அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கான மசோதா செப்டம்பர் மாதத்தில் மக்களவையில் பா.ஜ.க.வின் மிருகபல மெஜாரிட்டியின் மூலம் நிறைவேற்றி விட்டது. ஆனால், மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து, சட்டவிரோதமாக பெரும் அமளிகளுக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவையில் அறிவித்தது. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை பா.ஜ.க. அரசு படுகுழிக்குள் தள்ளியது. குடியரசுத் தலைவரும் இந்தச் சட்டங்களுக்கான ஒப்புதலை வழங்கிய பிறகு, மூன்று வேளாண் சட்டங்களும் இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கி வருவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்பது தான் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களின் நோக்கம்.
இன்றைக்கு விவசாயிகளின் விளை பொருட்கள் சந்தைக்கு வெளியே விற்பதற்கான வாய்ப்பு இச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் கனவில் கூட காண முடியாது.
விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் கடுமையான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த டிராக்டர் ஊர்வலத்தில் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடி, நாடு முழுவதும் பலகட்ட போராட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்கள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டுராவ் அவர்கள் பங்கேற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
தமிழகத்திலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பாக கடந்த செப்டம்பர் 28 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் அறிவிப்பின்படி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விவசாயச் சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 6 முதல் 31 வரை கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இவை அனைத்தும் சேகரிக்கப்பட்டு நவம்பர் 14 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும்.
விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரியும் போராட்டங்களுக்கு இணையாக தமிழ்நாடும் போர்க்கோலம் பூணும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் செயல் திட்டத்தின் அடிப்படையில் போராட்டக் களம் வலிமை பெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் அக்டோபர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் கண்டன மாநாடு தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் மோடி அரசு ஒரு விவசாய விரோத அரசு என்பதை உறுதி செய்கிற வகையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு இணையாக தமிழகமும் போர்க்கோலம் பூண்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.