3 விவசாயச் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என மோடி அரசு கூறுகிறது. இந்தச் சட்டங்களால் தங்கள் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும். இந்த சட்டங்களை ரத்து செய்வதில் அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் என்ற கேள்வியையும் விவசாயிகள் எழுப்புகின்றனர்.
இந்த சட்டங்கள் வேண்டாம் என்று விவசாயிகளே கூறும்போது, யாருக்காக இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டங்கள் மூலம் எத்தகைய சீர்திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது என்பதையும், எந்த தேவைக்காக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதையும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு நிச்சயம் தெரிவிக்க வேண்டும். இந்த சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு, விவசாயச் சங்கங்களின் நம்பிக்கையை மோடி அரசு பெற்றிருக்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்தைப் பார்க்கும்போது, அதிகாரமற்றவர்களின் பொறுமையைப் பார்த்து எச்சரிக்கையாக இருங்கள் என்று மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது. ஓரளவுக்குத்தான் பொறுமையும் காக்க முடியும். விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடுவது விவசாயிகளுக்குக் கடைசி வாய்ப்பாக இருக்கிறது.
இந்த போராட்டத்தைத் தேவையில்லாதது என்று மோடி அரசு தட்டிக்கழித்துவிட முடியாது. டெல்லி போராட்டத்தில் மற்ற மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் பங்கேற்று வருகிறார்கள். போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டே போகிறது. விவசாய சமுதாயத்தினருடன் கலந்து ஆலோசித்து, புதிய விவசாயச் சட்டங்களை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்.
ஜனநாயகத்துக்கு எதிரான வழிமுறைகளை மேற்கொள்ளாமல், மாபெரும் விவசாயிகள் போராட்டத்தைப் பார்த்தாவது மோடி அரசு விழித்துக் கொள்ள வேண்டும். புதிய சட்டங்களை விரைந்து திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பம் இல்லை. எனவே கண்மூடித்தனமான 3 புதிய விவசாயச் சட்டங்களையும் உடனே ரத்து செய்வதுதான், மோடி அரசுக்கு தற்போதுள்ள ஒரே வாய்ப்பு.