2020 ஆம் ஆண்டு பசுவதைத் தடைச் சட்டம் மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா, கடந்த 9 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்து தேசிய அரசியலின் ஒரு பகுதியாக, பசு பாதுகாப்பு என்ற போர்வையில் இத்தகைய சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
எனினும், அதே பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இதேபோன்ற சட்டத்தை விட, கர்நாடகாவில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் மிகவும் மோசமானதாகும். பசு, காளை, எருமை மற்றும் கன்றுகள் கொல்லப்படுவதை மட்டும் கர்நாடகாவின் சட்டம் தடை செய்யவில்லை. மாடுகளைக் கடத்துவது மற்றும் வாகனங்களில் ஏற்றிச் செல்வதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது.
இந்த சட்டத்தின்படி, மாடுகளைக் கொன்றால் 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். உள்நோக்கமின்றி ஒருவரைக் கொலை செய்யும் நபருக்குக்கூட இந்திய சட்டத்தில் இவ்வளவு பெரிய தண்டனை கிடையாது. சந்தேகத்தின் அடிப்படையில், சோதனை நடத்தவும் காவல்துறைக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இந்த சட்டம் கர்நாடக சட்டமேலவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இருந்தாலும், அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து இந்த சட்டத்தின் பிரிவுகளை அமலுக்குக் கொண்டு வருவோம் என்று கர்நாடகா பாஜக அரசு சொல்கிறது.
முஸ்லீம்களும் விவசாயிகளும்:
பசுக்கள் தொடர்பான இந்துத்துவா கொள்கையின் அடிப்படையிலான இந்தச் சட்டத்தின் மூலம், இந்தியர்களின் உணவு முறை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் புரோட்டீன் நிறைந்த உணவாக மாட்டுக்கறி உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகளவில் உள்ளது. மேலும், இறைச்சி மற்றும் தோல் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பணியாற்றும் முஸ்லீம்களைத் தண்டிப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாக உள்ளது.
இந்தச் சட்டத்தால் பால் உற்பத்தித் துறையும் பெரிதும் பாதிக்கப்படும். இந்தியாவின் பால் உற்பத்தித் துறையின் வருடாந்திர விற்பனை ரூ.6.5 லட்சம் கோடிகளாகும். இது, இந்திய விவசாயத் துறையின் அதிகபட்ச உற்பத்தியாகும். கோதுமை மற்றும் நெல் உற்பத்தியைவிட, பால் உற்பத்தியில் இந்திய விவசாயிகள் அதிகம் வருவாய் ஈட்டுகின்றனர்.
பால் உற்பத்தி பொருளாதாரம்:
பால் உற்பத்தித் துறையின் பொருளாதார நடவடிக்கையைப் பாதிப்பதாக இந்த சட்டம் இருப்பதுதான் பிரச்சினை. இந்தியாவில் உள்ள பால் பண்ணைகள் சிறிய அளவிலான லாபத்திலேயே இயங்குகின்றன. இந்நிலையில், பால் கறக்காத மாடுகளைப் பராமரித்தால் செலவு இன்னும் அதிகமாகும். காளைக் கன்று பிறந்தாலோ அல்லது பால் தருவதை நிறுத்துவதைப் பசு நிறுத்தினாலோ, அவற்றை அகற்ற வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. சாதாரண நாட்களிலேயே, பயன்தராத மாடுகளை விற்றால் அது விவசாயிகளின் மூலதனமாக மாறும். கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பசுவதைச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் வரை, ஆண்டுதோறும் ரூ.1,180 கோடி அளவுக்குப் பயன்படாத மாடுகள் விற்பனையாயின.
இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவரும் அமுல் நிறுவனருமான வர்கீஸ் குரியன் தமது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில், ”ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொடுக்கும் நிர்ப்பந்தம் காரணமாகவே பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். பயன்படாத மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதையே, பால் பொருளாதாரம் விரும்புகிறது. உடல்நலமற்ற மாடுகளை அகற்றிவிட்டு, நலத்துடனும், பால் கறக்கும் திறனுடனும் இருக்கும் மாடுகளைப் பயன்படுத்துவதே பால் பண்ணைத் தொழிலில் முக்கிய அம்சமாகும்.
இறைச்சிக்காகப் பசுவைக் கொல்வதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கச் சொல்கிறார் பூரி சங்கராச்சாரியார். பால் தராத, பயன்படாத பசுக்களைப் புனிதமாகக் கருதி, இவை இறக்கும் வரை உணவளிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
குரியனின் கேள்விக்கு இதுவரை சங்கராச்சாரியாரிடமிருந்து பதில் இல்லை.
பாஜக மாநில அரசுகளின் பசுவதைச் சட்டம், பால் பண்ணைத் தொழிலை ஏற்கனவே பெரிதும் பாதித்துள்ளது. மாடுகள் கொல்லப்படுவதை இந்த சட்டம் உண்மையிலேயே முடிவுக்குக் கொண்டு வருமா? என்பது குறித்துக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன.
பசுவதைச் சட்டம் கொண்டு வரப்பட்ட மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 2012 முதல் 2019 வரை மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, மகாராஷ்டிராவில் 10.07 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 4.42 சதவிகிதமும், உத்தரப்பிரதேசத்தில் 3.93 சதவீதமும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பசுவதைச் சட்டம் இல்லாத மேற்கு வங்கத்தில் மாடுகளின் எண்ணிக்கை 15.18 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே மாடுகள் அதிகம் உள்ள மாநிலமாக மேற்கு வங்காளம் திகழ்கிறது.
பயன்தராத மாடுகளை அப்படியே விட்டால், மற்றொரு பிரச்சினையும் உள்ளது. சுற்றித்திரியும் அந்த மாடுகள் பயிர்களை மேய்ந்து விவசாயிகளுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்ததை மறந்துவிடமுடியாது. இது தவிர, பயன்தராத மாடுகளால் விபத்துகளும் நிகழ்கின்றன. ஹரியானாவில் மட்டும், சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் 241 இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.
எருமை மாடுகளின் தேசம்:
பசுவதைத் தடுப்புச் சட்டத்துக்கும், பயன்தராத மாடுகளின் எண்ணிக்கைக்கும் இயற்கையாகவே தொடர்புள்ளது. பயன்தராத மாடுகளின் எண்ணிக்கை உத்தரப்பிரதேசத்தில் 17.34 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 95 சதவிகிதமும், குஜராத்தில் 17.59 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. ஆனால், பசுவதைத் தடுப்புச் சட்டம் இல்லாத மேற்கு வங்கத்தில், பயன்தராத மாடுகளின் எண்ணிக்கை 73.59 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
பசுவதைச் சட்டம் கொண்டு வந்துள்ள மாநிலங்களில் பசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாறாக, எருமை மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2012-2019 வரை, மகாராஷ்டிராவில் 0.71 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 25.88 சதவிகிதமும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 7.81 சதவிகிதமும் எருமை மாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
எருமை மாடுகளைக் கொல்லுவதற்கு இந்துத்துவா அனுமதிக்கிறதா? என்ற கேள்வியும் தானாகவே எழுகிறது.
கர்நாடக சட்டத்தின் ஆபத்து என்னவென்றால், எருமைகளையும் கொல்ல அனுமதி மறுக்கிறது. உத்தரப்பிரதேச விவசாயிகளுக்காவது மாற்றாக எருமைகள் உள்ளன. ஆனால், கர்நாடக விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.
மோசமாகும் நிலைமை:
பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில், மோடி அரசு பல கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் கர்நாடகா பாஜக அரசின் பசுவதைத் தடுப்புச் சட்டம்.
விவசாயத்தை நவீனப்படுத்தாததாலும்,நீர்ப்பாசனம் இல்லாததாலும், விஞ்ஞானப்பூர்வமற்ற விவசாயத்தாலும் கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயியின் சராசரி மாத வருமானம் ரூ.6,427 ஆக உள்ளது. சிறு விவசாயிகளுக்கு, விவசாயத்துக்குச் செய்யும் செலவைவிட, வருவாய் குறைவாகக் கிடைக்கிறது.
83 சதவிகித இந்திய விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. தங்கள் உரிமையை மீட்க டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயலாமல், பால் உற்பத்தித்துறையையே பாதிப்படையச் செய்யும் பசுவதைச் சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்திருப்பது எந்த வகையில் நியாயம்?