எழுபதாண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாததை பிரதமர் மோடி ஐந்தாண்டுகளில் செய்து முடித்து விட்டதாக அமித்ஷா பெருமிதம் அடைந்துள்ளார். அவர் சொல்வது உண்மை தான். ஆனால் அதில் பெருமிதம் கொள்வதற்கு எதுவுமில்லை. மாறாக அவமானப் படுவதற்கான காரணங்களே உள்ளன.
- இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு GDP சரிந்து அதளபாதாளத்தில் மைனஸ் 23% என்ற அளவில் உள்ளது.
- இந்திய பொருளாதாரம் இதுவரை சந்திக்காத பொருளாதார சீரழிவை சந்தித்து உள்ளது.
- இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.
- இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துடனும் நமது நாட்டுக்கு பகை உறவே தற்பொழுது உள்ளது.
- அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் , ஊடகங்கள் தேசவிரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுவது; சிறையில் அடைப்பது என கருத்து சுதந்திர உரிமையை இந்திய மக்களுக்கு தர மறுக்கிறது மோடி அரசு.
- தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், ராணுவம், ரிசர்வ் வங்கி, நாடாளுமன்றம் , வருமானவரித்துறை, அமுலாக்கத்துறை, தலைமை தணிக்கை அலுவலகம், சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளின் சுயேட்சையான செயல்பாடு வரலாறு காணாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட இரண்டு குஜராத்தி முதலாளிகளான முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோரிடம் ரயில்வே துறை, ராணுவ தளவாட உற்பத்தி துறை, தொலைத்தொடர்பு துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு மத்திய அரசால் ஒப்படைக்கப்படுகின்றன.
- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் மக்களின் உரிமைகளை- நடமாட்டத்தை மத்திய அரசு முடங்கியுள்ளது. தொலைத் தொடர்பு வசதிகூட அம்மாநில மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் வாதிகள் விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்கிறது. இந்தி மொழியை பிற மாநில மக்களின் மீது திணிக்க இடையறாத முயற்சி மத்திய அரசால் செய்யப்படுகிறது.
- மத உணர்வும் சாதிய உணர்வும் திட்டமிட்டு வளர்க்கப் படுகிறது. மத்திய அரசால் பரப்பப் படுகிறது. இதனால் இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதநல்லிணக்கத்தை அரசே சீர்குலைக்கிறது. சிறுபான்மை மக்களும் – தலித் மக்களும் எப்போதுமே பயத்துடன் வாழும் அவலநிலை கடந்த ஐந்தாண்டுகளாக நாட்டில் நிலவுகிறது.