ராஜஸ்தான் அரசியலில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து ‘ தி இந்து’வில் வர்கீஸ் கே.ஜார்ஜ் எழுதியுள்ள கட்டுரை:
பேரவை விதிமுறைகளிலோ அல்லது நடவடிக்கைகளிலோ ஆளுநர் நேரிடையாகவோ தலையிடமுடியுமா?
சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அமைச்சரவை தொடர்ந்து ஆலோசனை கூறி வருகிறது. மேலும், பேரவையை கூட்டுவதற்கான காரணத்தை கேட்டுள்ள அவர், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான நெறிமுறைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். 21 நாள் நோட்டீஸை அமைச்சரவை ஏற்றுக் கொண்ட பிறகே, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பேரவையைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சம்மதித்துள்ளார். அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? என்ற கேள்வி எழுகிறது.
ஆளுநரின் அதிகாரங்கள் என்ன?
அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று சட்டப்பேரவையை கூட்டாதது தான் ராஜஸ்தானில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் பேரவைக் கூட்டத்தை தள்ளிவைத்தும், முதலமைச்சரின் பரிந்துரையின்றி சபை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிகழ்வும் நடந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இது குறித்து கேள்வி எழுப்பியது. ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ளது போன்ற நிலைதான் அங்கும் இருந்தது. ராஜஸ்தானில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் உதவி செய்து கொண்டிருக்கிறார்.
இதேபோன்ற சில வழக்குகளில் ஆளுநரின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பரிசீலனைக்குட்படுத்தியுள்ளது. குறிப்பாக, பேரவையைக் கூட்ட அழைப்பு விடுப்பது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் விவாதித்துள்ளது. அரசியல் சாசனத்தின்படி, ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், நிர்வாக மற்றும் சட்டப்பேரவைக்குட்பட்ட அதிகாரமாகவே ஆளுநரின் அதிகாரம் இருப்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
சட்டப்பேரவை கூட்டத்தை யார் கூட்ட வேண்டும்?
முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பரிந்துரைப்படியே அரசியல் சாசனத்தின் 174 ஆவது பிரிவின்கீழ் சட்டப்பேரவையை ஆளுநர் கூட்டவோ, கலைக்கவோ முடியும். ராஜஸ்தான் பிரச்சினையை பொறுத்தவரை, ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட விரும்புகிறார். சட்டப்பேரவையுடனான ஆளுநரின் உறவுகள், அரசியல் சாசனத்தின் 208 ஆவது பிரிவின் கீழ், வரையறுக்கப்பட்டவை.
சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரல் அல்லது நடைமுறைகளை ஆளுநரால் செயல்படுத்த முடியுமா?
சட்டப்பேரவை நடவடிக்கைகளை விதிகளின் அறிவுறுத்தலின்படியே செயல்படுத்த முடியும். இதில் ஆளுநர் கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது.
அவையை கூட்ட 21 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற நடைமுறை முதலில் மக்களவையில் இருந்தது. பின்னர் சட்டப்பேரவைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த நோட்டீஸ் காலம் மக்களவையில் 15 நாட்களாக குறைந்துவிட்டது என மக்களவையின் முன்னாள் செயலர் ஜெனரல் பி.டி.டி. ஆச்சாரி கூறுகிறார். அதன்படி குறுகிய காலத்துக்குள் பேரவையை கூட்ட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக ஆச்சாரி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை இன்றி ஆளுநர் எப்போது செயல்பட முடியும்?
மலைவாழ் மக்கள் நலன் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த, சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பும் முன் நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. முதலமைச்சரோ, அவரது அமைச்சரவையோ பெரும்பான்மையை இழந்துவிட்டாலோ, அல்லது 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை கூட்ட பரிந்துரைக்க மறுத்தாலோ, பெரும்பான்மை மீது சந்தேகம் ஏற்பட்டாலோ, பேரவையைக் கூட்டுமாறு ஆளுநர் கேட்டுக் கொள்ளலாம்.
அரசமைக்க பெரும்பான்மை இருப்பதாக கோருபவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம். ஆனால் அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது. பெரும்பான்மையான ஆட்சியாக இருக்கும்பட்சத்தில், அமைச்சரவையின் பரிந்துரையின்பேரிலேயே பேரவையை கலைக்க முடியும். முதலமைச்சரும், அமைச்சரவையும் பெரும்பான்மையை இழக்கும்பட்சத்தில், புதிய ஆட்சி அமைக்கவோ அல்லது பேரவையை கலைக்கவோ ஆளுநர் தன் அதிகாரத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்.
மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டவரா ஆளுநர்?
அரசியலமைப்பு சபை ஆளுநரின் அதிகாரங்களை கட்டுப்படுத்துகிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை, ஆளுநர் பதவியை தவறாகப் பயன்படுத்தி மத்திய அரசு இடையூறு செய்வது தொடர்ந்து துன்பமான செயலாகவே உள்ளது.
எனினும், 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், மக்கள் பிரதிநிதிகளை, அமைச்சரவை மற்றும் முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகத்தை மீறும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.